Monday, 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினாறு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினாறு
**************************************************
அந்த இருண்ட நாட்களில்
சுவாச ஒழுங்கின் மூலமும் சுவாச கூத்தின் மூலமும் தோன்றா நிலை அனுபவ பட தொடங்கும் அன்பர்கள் சற்று நீண்ட இருண்ட நாட்கள் அந்த தோன்றா நிலையில் அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம்.. அந்த இருண்ட நாட்கள் தான் ஒரு வரம்பிலே உள்ள தேகம் மற்றொரு வரம்புக்கு சரியாக தொடர்பு கொண்டு இரு வரம்பிலும் சென்று வரக்கூடிய பக்குவம் அடையும்.. திட தேகமான தூல தேகம், பயிற்சியில் அடையாளம் கண்டு கொண்ட தோன்றா நிலையாக விளங்கும் நுண் தேகமாக விளங்கும், இரண்டிற்கும் இணைப்பு ஏற்பட இரகசிய உடன் பாடு ஏற்பட சில நாட்கள் ஆகும்.. இந்த நாட்களே இருண்ட நாட்கள்.. வள்ளலார் திரு மூலர் போன்றோர் வாழ்வில் அந்த இருண்ட நாட்கள் சில வருடங்களாக இருந்தன.. வள்ளலார் வாழ்வில் 12 வருடங்களும் திரு மூலர் வாழ்வில் 30 வருடங்களும் அவர்கள் என்னவானர்கள் என்பது யாருக்கும் தெரியாது... அதே போல் இராமர் பஞ்சபாண்டவர்கள் 14 வருடங்கள் என வனவாசம் என மறைவாக இருந்தார்கள்.. நாடு காடு என்ற இரு வகை வாழ்வில் உண்மை பொருளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. நாடு வாழ்க்கை என்பது நாடுதல் தேடுதல் கூடிய வாழ்க்கை.. காடு (க்+ ஆடு) வாழ்க்கை என்பது 'க்' என்ற இறை ஆற்றல் ஆடுகின்ற சூழ் நிலையோடு வாழ்வது..

தோன்றா நிலையோடு வாழும் வாழ்க்கை, இறை ஆற்றல் ஆடுகின்ற சூழ்நிலையில் வாழுகின்ற வாழ்க்கை.. அண்ட ஆற்றல் ஒரு மனிதனை பரிணாம வளர்ச்சி கொடுக்க ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்ளும்.. அந்த நேரம் மனிதன் அமைதியாக காத்துக் கொண்டு இருக்கும் நேரமே இருண்ட நேரம்.. இருத்தல் என்ற ஒரு நிலையில் இருப்பதே இருண்ட நேரம் எனவும் சொல்லலாம்.. நம் இருப்பு தன்மை ஓங்கி இருக்கும் நேரம் இது தான்.. கருவிலே குழந்தை பத்து மாதங்கள் இருப்பு தன்மையிலே அண்ட ஆற்றல் செயல் பட காத்து இருக்கும் நேரம் இது தான்..

ஆகவே இருப்பு தன்மையில் காத்திருக்கும் தகுதி இல்லாத மனிதன் யோக நிலையில் முன்னேற முடியாது... காத்திருத்தலும் ஒரு யோகமே.. அதை தவம் யோகம் என சொல்லலாம்.. தன் தேகத்தை சுற்றி கரையான் புற்றுக்கள் வளரும் அளவிற்கு தவம் இருந்தனர் முந்தைய தமிழ் நிலை அறியாத தவசிகள்.. ஆனால் தமிழ் நிலை கற்றுதந்த தவமே சிவ கலப்பு.. கலப்பில் தீவீரம் அது பணிவு என்பதின் ஆழ்நிலை.. நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பணிவு என்ற நிலைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்தார்கள்.. பணிவு என்பது பிரிந்தால் ப்+அணி+ வ்+ உ எனலாம். பகர மெய் ஆகிய உயிரை ஏற்கும் அல்லது அணியும் அண்ட (விண்ணாகிய வ் ) ஆற்றலின், இயக்கம் ( உ )... அந்த இருண்ட நாட்களில் பணிவு என்ற அந்த நிகழ்வு நடக்கும்...

அருவருக்கத்தக்க கம்பளி புழு தன்னை சுற்றி கூடு கட்டிக் கொண்டு 15 நாட்கள் அந்த இருண்ட காலத்தை தன் இருப்பு தன்மையிலே கடக்கும் போது அண்ட ஆற்றலின் பணிவு என்ற செயல் பாடு திறம்பட நடப்பதால் தன் கூண்டிலிருந்து அழகிய வண்ணத்துப் பூச்சியாக வெளி வருகிறது.. கம்பளி புழுவின் தோற்றத்திற்கும் வண்ணத்து பூச்சியின் தோற்றத்திற்கு எவ்வளவு பெரிய வித்தியாசம்... மனிதனும் அவ்வாறே கம்பளி புழுவுக்கு ஒத்த தன் தேக அமைப்பிலிருந்து தெய்வீக தேகத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடைவன்.. கம்பளி புழு விடவா மனிதன் தன் தரம் தாழ்ந்து போய்விட்டான் ? விடவேண்டியதை விட்டு விட்டு பிடிக்கவேண்டியதை பிடித்து விட்டால் எல்லாம் செயல் கூடும்..

சுவாச ஒழுங்கிலே தோன்றா நிலையை அடையாளம் கண்மர்டு அதில் தன் இருப்பு தன்மை வல்லமையால் இருக்க தொடங்கி விட்டால் அந்த தோன்றாநிலையே சுவர்க்க வாசல்.. அங்கே தன்னில் தானாய் இருக்கும், அந்த தோன்றா நிலையை அடையாளம் காணும் சிறு வெளிச்சமான அக நான் என்ற விழிப்பு நிலை இருக்கும்..

இப்பொழுது செயல் அற்று இருக்கும் அந்த அகநானை செயல் படுத்த முனையவேண்டும்.. அந்த கதியை அல்லது சுவாசத்தை அந்த அகநானே செய்யும் நிலைக்கு ஆளாக்க வேண்டும்... இது மிகவும் உன்னதமான யோக மாற்றம் .. இதற்கு நிகர் எதுவும் இல்லை.. சாட்சி நிலையாய் இருந்து தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு இரண்டாய் இருந்து பிரிவினை செய்யும் அந்த நிலையை நீக்க அந்த அகநானையே கதி அல்லது சுவாசம் செய்து வைத்திட வேண்டும்.. அப்போது அகநான் அண்ட ஆற்றலோடு இணைய தொடங்கி அகநான் அண்ட ஆற்றலாய் மாற தொடங்கும்.. அண்ட ஆற்றலாய் மாற தொடங்கும் அந்த நாட்கள் தான் இருண்ட நாட்கள் அண்ட ஆற்றல் தன் பணியை செவ்வனே செய்ய பணிவு என்ற உன்னத யோகநிலை அவசியம் தேவை.. அகநான் சுவாசத்தோடு இருக்கும் அந்த இருண்ட நாட்களில் மிகுந்த கவனம் தேவை... அகநான் சுவாசத்தோடு இரண்டு என்ற நிலை அகன்று ஒன்றாய் இருக்கவும் பிரிந்து இரண்டாய் இருக்கவும், மீண்டும் மனதின் செயல்பாட்டினை அனுமதிக்கும் தகுதியோடு இருக்க வேண்டும்.. இப்படி பணிவோடு தவம் கோலம் பூண்ட நிலையில் அண்ட ஆற்றல் தூல தேகத்தின் உள்ளே ஒரு சூட்சம தேகத்தை உருவாக்கி விழிப்பு நிலையின் உதவியுடன் தூல தேகத்தை விட்டு வெளியே பிறப்பு எடுக்க செய்யும்.. இதனை இரண்டாம் பிறப்பு என்பர்..

இரண்டாம் பிறப்பு எடுப்பதே சித்தர்களின் நோக்கம்.. தூல தேகம் கட்டுப் பட்ட நிலையில் எங்கிருந்தாலும் அதிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய சூட்சம தேகம் அதிக வலு வாய்ந்தது.. காலமும் தேசமும் கடந்து தூல தேகத்தைக் காட்டிலும் பல மடங்கு திறனுடன் அந்த சூட்சம தேகம் செயல் படும் போது, இந்த உலகின் தரமே தலை கீழாக மாறி விடும்... சத்தியமும் தர்மமும் உண்மையும் மட்டுமே இங்கு இருக்க முடியும்..

மதுரை அன்பர்களுக்கு அந்த இருண்ட நாட்களில் இருக்க வேண்டிய முக்கிய பயிற்சி கடைசியாக அளிக்கப் பட்டு 14 நாட்கள் தீவிர பயிற்சி இன்றோடு ( 28-9-15 ) முடிந்தது.. அவர்கள் தங்கள் விழிப்பு நிலையால் தோன்றா நிலையில் உள்ள அக நானே சுவாசிக்கும் பயிற்சியில் தேர்ந்து அண்ட ஆற்றலாய் ஒருமையுடன் கலக்கும் திறனை பெறுவார்கள் என நம்பலாம்.. மலை ஏறி பயிலும் அன்பர்களுக்கு மட்டுமே அந்த கதி என்ற தோன்றாநிலையை பலப்படுத்தும் சுவாசம் எளிதாக சுத்தமாக விரைவாக கைகூடும் என்பதால் மலை ஏறும் பயிற்சியை செய்கிறார்கள்.. அப்பயிற்சியை செய்யும் கோவை அன்பர்களுக்கு விரைவில் நேரடி பயிற்சி அளிக்கப் படும்.. இது மிக நுண்ணிய ஆபத்தான பயிற்சி ஆகையால் நேரடி பார்வையில் மட்டுமே இப்பயிற்சி தரப் படும்.. மர்ம யோகமான தமிழ் யோகத்தால் எல்லாம் செயல் கூடும் என உறுதியாக நம்பலாம்.. வெறும் கற்பனை வளத்தில் உருவானதல்ல.. நடைமுறை சாத்தியத்தால் ஆனது..

மர்ம யோகத்தில் கனல் வீரம்;- பகுதி பதினைந்து

மர்ம யோகத்தில் கனல் வீரம்;- பகுதி பதினைந்து
*************************************************************************
அனைத்தையும் தரும் தமிழ் நிலை
தமிழ் தீவிர ஆர்வலர் திரு ஓதியடிமை அவர்கள் ஒரு பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.. எனது பேசும் தமிழை காட்டிலும் செய்யும் தமிழ் நிலையை கண்டு கோரி உள்ளார்.. தமிழ் மொழியில் பள்ளி நிலை மட்டுமே தேர்ச்சி அடைந்த நிலையில் கல்லூரியில் முழுமையாக ஆங்கிலத்தில் படித்ததால் எனது மொழியில் குறை இருப்பின் மொழி அறிஞர்கள் மன்னிக்கவும்...

பாடல் :--- 
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”
தண்டியலங்காரம் .. இந்த அருள்பாவிற்கும் சிவ கலப்பின் ஒங்குதலுக்கும் உள்ள சிறப்பை சற்று விளக்குங்கள் அய்யனே
அதாவது:--
ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும்- ஆங்கம் அவற்றுள்
மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனையது 
தன் ஏர் இலாத தமிழ்

விளக்கம் :--
 
தன் ஏர் இலாத தமிழ் 
*********************************
ஏர் என்பது, என்று என்று ( எ+ எ = ஏ ) தொடர் நிலையாக பிறவி குணமாய் இருக்கும் நிலை.. 'ர்' என்பது பிறவியால் அமைந்த நிலை.. தன் ஏர் என்பது தனது தனது என்று என்று தன்முனைப்போடு தொடர் நிலையாய் இருக்கும் ஆணவ நிலையாகும்.. அது இல்லாத நிலையை போக்குவது தமிழ் நிலை.. ஆம் தமிழ் நிலை ஒன்றே தன் ஏர் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும்.. தமிழ் நிலையை சுட்டிக் காட்டாத தமிழ் மொழி பாழ் தான்.. இன்று நம் தமிழ் மொழி அவ்வாறு இல்லை என்பது மிகவும் வருந்த தக்க விசயம்.. அதனால் தான் உலகில் உள்ள ஆயிர மொழிகளில் தன் தனி சிறப்பை இழந்து அதில் ஒன்றாக உள்ளது.. அந்த தமிழ் நிலையால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தமிழ் மன்னன் தன் அடையாளத்தை முற்றிலும் துறந்து தன் ஏர் இலாத நிலையில் இருந்தான்.. முகநூல் பக்கத்தில் அவர் சமாதி அடைந்த ஒரு சாதாரண இடத்தை காட்டும் படத்தை பார்க்கும் போது அவரின் தன் ஏர் இலாத உயரிய நிலை கண்டு கண்களில் நீர் வடிகிறது.. தமிழ் நிலை கண்ட தமிழ் மொழி அறிந்தவர்கள் நம் நாயன்மார்களும் ஆழ்வார்களும்.. தொண்டர் அடி பொடி ஆழ்வார், நந்தனார் போன்றோர் தன் ஏர் இலாத நிலையில் உயர்ந்த நிலையில் விளங்கிய விதம் நெஞ்சை உருக்குகிறது.. ஆனால் மேலோட்டப் பார்வையால் ஆணவ போக்கால் அவர்கள் மேன்மை அறியாது இருக்கிறோம்..

ஓங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ:--
*******************************************
அப்படி பட்ட தமிழ் நிலையால் என்றும் ஓங்குதல் நிலையே மனிதருக்கு வந்து சேரும்.. ஒடுங்குதல் என்பதும், சோர்வும் என்பதும் இல்லைவே இல்லை.. விழிப்பின் உச்சத்தில் ஓங்கியே இருக்கும் தமிழ் நிலை அறிந்தோர் வடித்த கற் சிலைகள் சொல்லும் ஆனந்த கண்ணீர் கதைகள் ஏராளம்.. ஒரே கல்லில் வடித்த அற்புத சிலை வடிக்கும் சிற்பி சிவ கலப்பில் இல்லையென்றால் அந்த சிலையை வடிக்கவே முடியாது.. எல்லாம் வடிவமைத்து காலில் ஒரு விரலில் ஒரு நகத்தை செதுக்கும் போது சிறு தவறு ஏற்பட்டாலும், பல மாதங்கள் வடிவமைத்த சிலையே பாழாகி போய் விடும்.. வினாடிக்கு வினாடி சிவகலப்பு என்ற தெய்வீக விழிப்பு நிலையில் இருந்ததால் மாத்திரமே அது சாத்தியமாயிற்று.. அன்றைய ஒரு சிற்பி முழுமையாக சிவகலப்பு அறிந்த தமிழ் நிலையில் இருந்த அருள் அரசன்.. அவருடைய தன் ஏர் இல்லாத நிலை கண்டு இன்றைய ஆட்சி ஆளார்கள் தலை குனிந்து நிற்க வேண்டும்.. ஓங்கலிலே ஓங்கி ஓங்கி சென்ற நிலையிலே பொருள் சக்தியாலும் அதிகார சக்தியாலும் உயர்ந்தோர் அவர்களை தொழுதனர்.. தொழுதே ஆக வேண்டும் என்ற உயரிய அருள் நிலையில் தமிழ் நிலை அறிந்தோர் இருந்தனர்.. பட்டினத்தாரை பார்த்து அரசன் கேட்டான்.. எல்லாவற்றையும் துறந்து இப்படி இருப்பதால் என்ன பலன் என கேட்க நீர் நிற்க நான் கிடக்க என்றார் பட்டினத்தார்.. அருள் ஓங்கலிலே இருந்து அமர்ந்த வண்ணம் இருந்து தேடி வந்து வணங்கி கேட்ட, நின்ற படி, இருந்த அரசனுக்கு ஒரு தகுந்த பதிலை தந்தார் பட்டினத்தார்.. அதனால் தான் ஓங்கலிலே இருக்கும் தமிழ் நிலையாளரை அரசனை போன்றோர் தொழுதே ஆக வேண்டும் என்பது...

ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் :--
*********************************************
பிரபஞ்சமான அண்டம், ஒலியால் ஒளியால் ஆனது.. யோகத்தில் ஒலியை சக்தியாகவும் இயக்கமாகவும் குறிப்பர்.. அறிவினை ஒளியாக குறிப்பர்.. சிவநிலையாக அறிவு நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் காதற்ற ஊசியும் வாராது காண் காணா கடை வழிக்கே என்ற சிறு அறிவு கூட இன்றி, செயல் இயக்கத்தின் மூலம் பொன்னும் பொருளும் அதிகாரமும் சேர்க்க ஏங்கி ஏங்கி செயல் இயக்கம் மூலம் முனைவோரை ஏங்கும் ஒலி இனத்தார் என்றனர் தமிழ் நிலை கண்டோர்.. நீர் என்பது எண்ண ஆதிக்க முடைய சித்தம் என்ற எண்ணப் பதிவுகள்.. நீர் பூதத்தால் இயங்கி பொன் பொருள் அதிகாரம் சேர்க்க மனிதன் முனைகிறான்.. அப்படியான எண்ண பதிவுகளும் எண்ண ஆதிக்கமும் நிறைந்த ஞாலம் என்ற பூமியில் ஒளி யின்றி இருள் பரவி கிடக்கிறது.. அந்த இருளை அகற்ற முடியும் என்றால் அது தமிழ் நிலையால் மட்டுமே முடியும் என்பதை அறியாது இன்றைய ஞாலம், உலகம் உள்ளது,, இனி வரும் காலங்களில் தமிழ் நிலை உணர்த்தும் தமிழ் மொழி உலக மொழியாக ஆனால் மட்டுமே உலகம் பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப் படும்..

மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்று:-
****************************************
தன் ஏர் நிலைக்கு நேர் எதிரானது மின் ஏர்.. நுண் ஆற்றல் சூட்சம சக்தி மின் ஆற்றல் எனலாம்.. மின்சார ஆற்றலை நாம் மின் சக்தி என்கிறோம்... ம் என்ற எழுத்து நீக்க மற அதாவது நீக்க முடியாத அளவு சிவ கலப்பாக பொருந்திய நிலை.. இதில் ன் என்ற 18ஆம் கடைசி மெய் எழுத்து முடிவானது என பொருள் கொள்ளும்.. நீக்கமற பொருந்திய நுண் சக்தியை சக்தியை குறிக்கும் அண்டத்தின் ஒரே சக்தி கருணை மட்டுமே.. அதனால் தான் அருட் பெருஞ்சோதி வடிவமே தனி பெருங்கருணை என்றார் வள்ளலார்... தன்னை மட்டுமே நினைக்கும் ஆணவ நிலையான தன் ஏர் நிலை இல்லாமல் எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் எண்ணும் மின் ஏர் நிலைக்கு கொண்டு செல்லுவது தமிழ் நிலையாம்.. முல்லைக்கு தேரை தந்த பாரி, பசுவின் கன்று உயிர் பறித்த தன் மகனை தேர் சக்கரத்தில் பலி இட்ட தமிழ் மன்னன், நீதிக்கு தன் கையை தானே வெட்டிக் கொண்ட கரிகால் வளவன் போன்ற எண்ணற்ற தமிழ் நிலை அறிந்தோர் தன்னகத்தே கொண்டது மின் ஏர் நிலையே.. அன்னவர்கள் உடல் உள்ளம் உயிர் மூன்றிலும் முழுமையாக பொருந்திய யாழி நிலையினை பெற்றிருந்தார்கள்.. தனி யாழி நிலை என்பது தனிப் பெரும் கருணை போல் எதுவும் கலவாத தனித்த யாழி நிலை என்பது.. அது எவ்வளவு இனிமையானதோ அந்த அளவுக்கு இனிமையானது யாழ் என்ற இசைக் கருவி.. அந்த நிலையால் தங்கள் அருள் ஆற்றலால் வெங்கதிர் வீசும் அதாவது கருணை என்னும் அருள் ஆற்றல் பரப்பும் திறனை பெற்று இருந்தார்கள்.. வெங்கதிர் என்றால் வெளி கதிர் அதாவது எல்லை இல்லாத வெளி நிலையாகிய அண்ட முழுவதும் பரப்பும் கதிர் ஆற்றல்.. அப்படி பட்ட மின் ஏர் தனியாழி வெங்கதிர் ஒன்றே அனைத்தும் தரவல்லது மற்றும் அதுவாக தன் நிலைக்கு மாற்றும் மாற்றம் மட்டுமே தருவதாம் நமது தன் ஏர் இலாத தமிழ்.. அதாவது எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டுமே தருவது தமிழே...
ஆங்கம் அவற்றுள் என்பதில் அங்கம் என்ற குறுகிய தேக நிலை இல்லாமல் ஆங்கம் என்ற அண்ட அகண்ட காரத்தில் உள்ள அனைத்திலும் என பொருள் கொள்ளும்...

மொத்த பாடலின் விளக்கம்
****************************
ஓங்கல் என்ற ஒன்றிலேயே தொடர்ந்து இருக்கும் போது உயர்ந்தோர் அவர்களை தொழுது வாழ்த்த, அதனால் அவர்களின் சிறப்பு உயர்ந்து விளங்கி நிற்கவும், எண்ணப் பதிவுகளால் உலகியலில் பொருள் சேர்க்கைக்கு வேண்டி போராடும் இருளை போக்கவும் மின் ஏர் நிலையால் அருள் கருணையால் அருள் கதிரொளி பாய்ச்சி அனைத்தையும் அதுவாகவே ஆக்கவும் செய்யவல்லதாம் தன் முனைப்பை நீக்க வல்ல தமிழ்..

அன்பர்களே மர்ம யோகம் என்ற மறையோகம் அல்லது தமிழ் ஓகம் ஒருவரது கருணை பெருக்கத்தால் தகுதி பெருக்கம் அடைந்து உலகை ஆளும் தகுதி அவர்களுக்கு ஒப்படைக்கப் பட்டதால் தான் அன்றைய நிலையில் உலகில் பல பகுதிகளிலும் தமிழ் நிலை அறிந்தோர் ஆண்டு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.. அலெக்ஸாண்டரை போல் கத்தி முனையில் ஆளும் தகுதியை நம் தமிழ் மன்னர்கள் ஒரு போதும் பெற்றிருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.. அப்படி பட்ட தமிழ் நிலை தரும் தகுதி பெருக்கம் அடைந்தோர் இடம் ஆளும் தகுதி ஒப்படைக்கப் படும்.. அது பலவந்தமாக பிடுங்கப் படுவதல்ல.. மர்ம யோகம் என்பது அண்ட அற்றல் பெருக்கத்தால் கருணை வடிவாகி தகுதி பெருக்கம் அடைந்து தனியாழி வெங்கதிரோனாய் மாற்றம் காணுவதே.. திரு ஓதியடிமைக்கு என் தமிழ் நிலை பணிவினை அளிக்கின்றோம்.. அதை விட உயர்ந்த பணிவு பரிசு வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை...

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதினான்கு

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதினான்கு
*************************************************************************
இளக்கம் இறுக்கம் இவற்றின் தாக்கம்
தகாத காதலில் விழுந்தேன், தகுதிக்கு உடன் படாத ஆசையில் விழுந்தேன், கோபத்தில் விழுந்தேன், காமத்தில் இராவணனை போல் விழுந்தேன், என மனிதன் சதாகாலமும் விழுந்து கொண்டே இருந்து புண் பட்டு மாய்கின்றான்.. ஆறாத மன புண்கள் அவனது அடுத்த பிறவிக்கும் தொடருகிறது.. பீஷ்மரை பலி வாங்க சிகண்டி அம்பை ஆக அடுத்த பிறவி எடுக்கிறாள்.. இனம் தெரியாத பல மன புண்களோடு பிறக்கிறோம்.. அந்த மன புண்களால் புற வாழ்வில் தன்னிச்சையாக விழுகின்றோம்.. எந்த குறிக் கோளையும் முன் வைக்காமல் காதல் கோபம் ஆசையில் விழுகின்றோம்..
குதித்தல் என்பதும் விழுவதற்கே.. அதில் ஒரு குறிக்கோள் இருக்கிறது.. கண்ணப்பர் தன் கண்களை பிடுங்க குதித்தார்.. காளி தாசன் காளியின் முன் மாய்வதற்கு குதித்தான்.. ஆனால் விழுந்த இடமோ இறைவன் மடியில்.. அதற்கு நிகரான உடன் பாடு சுவாசத்தில் பயிலும் அன்பர்கள் மனதின் கடைசி அடையாளத்தை இழந்து விழிப்பு என்ற புனிதத்தில் விழ வீரம் கொண்டு குதித்தே ஆக வேண்டும்... ஆனால் மனதால் அந்த கடைசி அடையாளத்தை நகர்ந்து சென்று இழக்கத் துணியாது.. ஒரு போதும் அப்படி செய்யாது.. அதனை விழிப்பால் தள்ளி விடப் பட்டு குதிக்கச் செய்தால் மட்டுமே மனம் சுவாச ஒழுங்கில், நான் இருக்கிறேன், செய்கிறேன் என்ற கடைசி அடையாளத்தை இழக்க முடியும்.. ஆன்மீகத்திலும் புற உலக நல்ல செயல்களிலும் தயக்கம் ஒரு பெரிய தடையாக இருந்து, மனிதன் இழந்தது அளவிட முடியாதது.. விழிப்பு நிலையால் இயக்கப் படும் குதித்தல் என்பது ஒரு வீர யோகம்.. அன்றாட வாழ்வில் எத்தனை பேர் தயக்கத்தின் காரணமாக நாளை நாளை என்று நாட்களை கடத்தி வீணாய் போகின்றனர்.. பயம் உணர்ச்சி ஒன்றினாலே மட்டுமே உந்தப் பட்டு வாழ்வியலை நடத்துவோர் அநேகம்.. கடைசி தேதியன்று மன உழைச்சலோடு நிற்போர் கூட்டம் அதிகம்.. அந்த குதித்தல் என்ற வீர யோகம் ஒன்றே மனதின் கடைசி தயக்கத்தை உடைத்து எறியும்..
 அடுத்தப் படியாக ஏன் மூச்சு திணறல் வருகின்றது என பார்ப்போம்.. நமது தேகம் செயல் பாடுகள் குறைவுப் பாட்டால் இறுகி போய் விட்டால், சற்று அதிக உழைப்பு என்று வரும் சமயம், அதிக சக்திக்காக அதிக மூச்சுக் காற்று உள்வாங்க வேண்டியதிருக்கும்.. அந்த சமயம் இறுகி போன நுறையீரல் மார்பகங்கள் அந்த அதிக காற்றை உள் வாங்க போதிய இளக்கம் கொடுக்காமல் இறுகிய நிலையில் திடமாக உள்ளதால் தான், உள்சென்ற காற்று எதிரொலித்து வெளியே தள்ளப் படுகிறது.. உள் செல்ல முனையும் காற்றும், வெளியே தள்ளப் படும் காற்றும் ஒன்றுக்கொன்று முரண் படுவதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.. சாதாரண நிலையிலே மூச்சு திணறல் இருந்தால், சுவாச உறுப்புகள் மிக மோசமான நிலையில் இறுக்கத்தில் இருக்கிறது என்று அர்த்தம்... அதுவும் மழை குளிர் காலங்களில் தேக இறுக்கம் மிகமோசமானதாக இருக்கும்..
மலையேற்றப் பயிற்சியில் முதலில் தேக இறுக்கத்தை நீக்குவதே முதல் குறிக்கோள்.. மலையேறும் போது ஏற்படும் சுவாச இளைப்பினை ஒன்று மனதை கட்டுப்படுத்தி மன இளக்கம் பெறவும், மற்றொன்று தேக இறுக்கத்தை தளர்த்தி, தேக இளக்கம் பெறவும் பயன் படுத்துகிறோம்.. அந்த சில நிமிடங்களில் மிகவும் தோய்வாக தளர்வாக வைத்துக் கொள்ளும் போது, இளைப்பு வேகம் மிக வேகமாக குறைய தொடங்குவது வியப்பாக இருக்கும்.. மலை ஏற்றம் காணும் போது உணர்வோடு தேக அசைவுகளில் மனம் மிக பொருந்தி இருக்கவேண்டிய அவசியம் மிக மிக முக்கியம்.. இதன் மூலம் மட்டுமே தேகத்தை தளர்வாக தோய்வாக வைத்துக் கொள்ள முடியும்.. அண்ட ஆற்றல் தேகத்திற்குள் சென்று செயல் பட தேகம் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.. அது தன்னை தளர்வு படுத்திக் கொண்டால் மட்டுமே, தளர்வுக்கு ஏற்றார் போல் அண்ட ஆற்றல் தேகத்தில் உள்ளே பாயும்.. அந்த இளைப்பு வரும் சமயம் அந்த இளைப்பை 
ஏன் மனம் உடன் பட்டு நிற்க வேண்டும் என்றால் தேக தளர்வு ஏற்படவே.. தேக தளர்வு ஏற்படும் சமயம் மனமும் அதற்கு ஏற்றால் போல் தன் விரைப்பு குணத்தை விட்டு விட்டு, தளர்வு அடைய தொடங்கும்.. அதனால் அண்ட ஆற்றல் அதிகம் உள் புக தேகம் அதிக ஆற்றலை பெறுகிறது..
இந்த பயிற்சியில் இளைப்பு வரும் வரை சிரமம் எடுத்துக் கொண்டு படியேற வேண்டும்.. இளைப்பின் வேகத்தை முறையாக பயன் படுத்தி தேக இறுக்கத்தை நீக்கி தேக இளக்கம் பெற வேண்டும்.. தொடர் பயிற்சியில் தேகம் இரப்பர் போல் உடனடி இளக்கத்தை பெறும் போது, படியேற்றத்தில் பயங்கர முன்னேற்றத்தை காண முடியும்.. இன்றைய நிலையில் அன்பர்கள் 6 நிமிட அளவில் மலையேறி சாதித்தனர்.. அதில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்பர் ஒருவரும், 67 வயது மர்ம யோகியும் சேர்த்து தான்... வயதும் தேக நோய்களும் இங்கே காணாமல் போய் விடுகிறது...

எந்த காரணத்தை கொண்டும் இளைப்பு இல்லாத மலைஏற்றம் கூடவே கூடாது.. அதன் மூலம் மட்டுமே தேகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தளர்வாகவும் இளக்கமாகவும் மேலும் மேலும் வைத்துக்கொள்ள முடியும்.. அந்த இளக்கம் காற்றின் அளவிற்கு தளர்வாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்லலாம்... இப்படி தேக இளக்கத்தை உருவாக்க மடி கூத்து சுவாசத்தை அன்பர்கள் பயிலுகின்றனர்.. மடி அல்லது மடிதல் என்றால் மரணம்.. மரணத்தில் தேகம் தளர்வின் உச்சத்திற்கு செல்வது போல் இந்த சுவாசத்தில் தேகம் தளர்வு நிலை உச்சத்திற்கு செல்லுகிறது.. இந்த நிலையில்  உள் வாங்கும் சுவாசத்தில் அளவற்ற காற்று இழுக்கப் படுவதால் தேகம் அதனை தாங்கும் தகுதியையும் பெறுகிறது.. இப்பயிற்சியின் மூலம் சுவாச இளைப்பு விரைவாக குறைக்கப் பட்டு மலை ஏற்றத்தில் செயன் திறன் மிகவும் அதிகரிக்கிறது... மலை ஏற்றத்தில் மட்டும் அல்ல அன்றாட வாழ்வியலிலும் செயன் திறன் கூடவே செய்யும்.. அடுத்த வகுப்பு தொடங்கும் வரை மலைஏற்றமோ அல்லது தரையில் ஓடியோ வேகமாக நடந்தோ மூச்சு இளைப்பை உருவாக்கி தேக இளக்கம் காணுமாறு மற்ற அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன்..

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதிமூன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதிமூன்று
***********************************************************************
குதித்தல் ஒன்றுக்கான வீரம் தேவை இப்போது
மறந்து போனதால் காணாமல் போன சுவாசத்தை தேடி கண்டு பிடித்தது ஒரு பக்கம்.. அப்படி தேடி கண்டு பிடித்த சுவாசம் முரண் பாடாய் இருப்பதால் ஏற்பட்ட நஷ்டங்களை உணர்ந்து முரண் பட்ட மனதை உடன் பாடு கொண்டு,
அண்ட ஆற்றலை முழுமையாக பெறுவது மற்றொரு பக்கம்... உடன் பாடு சுவாசத்தையே அடியாளமாக கொண்டு, தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள மனம் நடத்தும் நாடகம் சற்று விசித்திரமானது.. உடன் பாடு சுவாசத்தில் தன் அடையாளத்தை மிக குறைந்த அளவில் மனம் நிலை நிறுத்திக் கொள்ள மிகவும் சிரமப் படுவது அன்பர்கள் அறிந்ததே.. தன் அதிகார ஆணவ செயல்கள் பலவும் பறி போய் இருக்கின்ற நிலையில், அற்ப அதிகார அடையாளங்களோடு, மேலும் இழக்காமல் இருக்க மனம் மிகவும் முயலும்.. இந்த நிலையில் உடன் பாடு சுவாசத்தையே ஒரு பயிற்சியாக கொண்டு மேலும் மனம் தன் அற்ப அடையாளங்களை இழக்காமல், எதிரே இருக்கும் தோன்றா நிலையை கண்டு களிக்காமல், பயிற்சியிலேயே தான் மிகவும் விசுவாசமாக இருப்பது போல் நடித்துக் கொண்டு தோன்றா நிலையை தவிர்க்கவே முயலும்... இந்த நிலையில் தன்னில் நிலை கொண்ட விழிப்பு சக்தி செயல் பட தொடங்க வேண்டும்.. அது உடன் பாடு சுவாச பயிற்சியில் சிக்குண்ட மனதை தன் பால் முழுமையாக இழுத்துக் கொள்ள வேண்டும்.. இதுவே விழிப்பு நிலையின் மனம் மேல் கொண்ட முதல் ஆதிக்க நிலை... அதன் பிறகு விழிப்பே மனதின் அதிபதியாக விளங்கத் தொடங்கும்..
 ஒரு நிலையில் மன இழுப்பிற்கு சமமான இழுப்பிற்கு மேல் விழிப்பு நிலையின் இழுப்பு மேல் ஓங்கும் போது அது நிகழுகிறது.. அதுவே மனதின் திருப்பு முனை.. அந்த திருப்பு முனைக்கு பின் மனதின் இயல்பே முழுமையாக மாறி விடும்.. அசுத்த மனம் சுத்த மனமாகி விடும்.. உடன்பாடு சுவாசம் பயிலும் ஒவ்வொரு அன்பர்களும் அந்த திருப்புமுனைக்கு முயல வேண்டும்.. உடன் பாடு சுவாசம் ஒரு சுட்டி காண்பிக்கும் ஒன்றாகும்.. ஆனால் அது சுட்டிகாட்டும் மெய் பொருள் தோன்றா நிலையே.. சுட்டிகாட்டப் படும் பொருளாகிய மெய்பொருளை விட்டு விட்டு சுட்டும் பொருளாகிய சுவாச ஒழுங்கே அனைத்தும் என தீர்மானமாய் இருக்கும் மனதின் செயல் பாட்டை அன்பர்கள் புரிந்து கொண்டு சுட்டிகாட்டப் படும் பொருளாகிய மெய்பொருளை நோக்கி விழ வேண்டும்.. மனதில் இருந்து விழிப்பில் குதித்தல் இதுதான்.. இதில் குதித்தல் மட்டுமே உதவும்.. நகர்தல் உதவாது.. நகர்ந்து செல்லும் தருணம் மனம் மீண்டும் விழிப்பு நிலை விட்டு விலகி விடும்.. குதித்தல் ஒன்றே செயல் கூடும்.. குதித்தலால் மட்டுமே 'க்' என்ற கனல் நிலையாம் விழிப்பு நிலை உதித்து கைகூடும்.. குதி என்ற பயிற்சியே க் என்ற விழிப்பு நிலை உதி-க்க ( க்+ உதி=குதி ) செய்யக்கூடியது.. அதற்கு வீரம் வேண்டும்.. மனம் தன்னை இழந்து விழிப்பு நிலையோடு ஒன்றி புதுமை பெற தாயாராக வேண்டும்...

அங்கே அந்த விழிப்பு நிலையோடு எதுவும் மனம் பிடித்துக் கொள்ளாத புதுமை நிலையோடு சற்று பழக வேண்டும்.. அங்கே மனத்திற்கு வேண்டுவது எதுவும் இல்லை.. ஆனால் எல்லாம் கிடைத்தது போல் ஒரு நிறைவு கிடைக்கும்.. அந்த நிறைவு எந்த ஒன்றாலும் தரமுடியாத முழுமையான பரி சுத்த நிறைவு.. எதனோடும் ஒப்பிட முடியாத நிறைவு.. எந்த உலகப் பொருளாலும் ஈடு கட்ட முடியாத நிறைவு.. இதுவரை உலகப் பொருள்களிடம் ஆசைகள் ஆயிரம் வைத்து, நிறைவேறாமல் ஏக்கங்களை சுமந்த மனம் இந்த புனித நிறைவால் பூரண நிறைவடைந்து இனி எதற்கும் ஆசை படாத உன்னத நிலையினை அடைய துவங்கும்.. விழிப்பு நிலையோடு பொருந்திய மனம் பரி சுத்த நிறைவு கொள்வதால், அது உலகப் பொருள்களிடம் நாட எந்த தேவையும் இல்லை.. இந்த நிலையில் மனம் உலக பொருள்களிடத்தில் ஆதாயம் எதையும் தேடாமல், அவைகளிடம் தனக்குள்ள கடமையை செய்ய துவங்கும்... இந்த மாபெரும் புனித மன மாற்றம் விழிப்பு நிலை என்ற புனிதத்தோடு சேரும் போது மட்டுமே நிகழும்..

இங்கே தன் கடமையை நிறைவேற்ற தனக்கு வேண்டிய சக்தியை தான் தேடி போய் அலைய மனதிற்கு தேவை இல்லை.. தானே விழிப்பு என்ற அண்ட ஆற்றல் மையத்தில் இருப்பதால் ஆற்றலுக்கு எந்த குறை பாடும் மனதிற்கு இல்லை.. அதனால் மனதிற்கு தேடுதல் என்பது துளியும் இல்லை.. அன்பர்களே உடன் பாடு சுவாசத்திலிருந்து வீரம் கொண்டு குதித்து விழிப்பு என்ற தோன்றா நிலைக்கு மையம் கொள்ள விரைவீர்.. அங்கே மனதிற்கு பூரண நிறைவு காத்துக் கொண்டு இருக்கிறது..

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதியிரண்டு


மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதியிரண்டு 
***************************************************************************
 அடி கூத்தின் அவசியம்
அடி கூத்து என்பது அடிப் படை கூத்து அல்லது ஆதார கூத்து எனப்படும்.. முதலில் கூத்து என்பது என்னவென்று பார்ப்போம்.. க் என்பது கடவுள் ஆற்றல்... ' உ' என்பது இயக்கம்.. 'ஊ' என்பது 'உ' என்ற இயக்கத்தின் தொடர்ச்சி நிலை. அதுவே தடை படா இயக்கமான ஊக்கம் என்பது.. உலகில் உடைமை என்ற சொல்லுக்கு தகுதி வாய்ந்தது ஊக்கம் ஒன்றே.. ஊக்கம் உடைமையே உடைமை என்றார் தெய்வ புலவர் திருவள்ளுவர்.. மற்ற உடைமைகள் எல்லாம் ஊக்கம் என்பதை பின் தொடர்ந்து வருபவையே.. இப்படியாக உள்ள ஊக்கம் ஒரு நுண் பொருள் அதாவது சூட்சமமானது.. இந்த நுண் பொருள் நுண் பொருளாகவே இருந்தால் ஒரு பலனும் இல்லை.. அது தகர இயக்கமாக உருவாக வேண்டும்.. அதாவது திட இயக்கமாக வேண்டும்... திடம் ஆக வேண்டும்.. அப்பொழுது தான் பொறி புலன்களுக்கு வெளிப் பட்டு விளக்கம் பெறும்.. பரந்த அண்டமும் சூரியன் முதலிட்ட கோள்களும் இறைவனின் அருள் திறத்தை விளக்க வந்த திடநிலை.. இந்த திட நிலையை பார்த்து பார்த்து வியந்து வியந்து அருள் திறத்தை உணர்ந்து உணர்ந்து நெகழ வேண்டிய மனிதன் மாயா தோற்றங்களில் சிக்கி அருள் இயக்க உண்மைகளை தொலைத்து விட்டு, சினிமா போலி அரசியல் போன்ற மாயா வாதங்களில் சிக்கி வாடுகிறான்.. தமிழ் என்ற சொல்லில் உள்ள முதல் எழுத்தே இந்த உண்மை விளக்கம் பெற்ற திட நிலையான தகர மெய் ஞானம் அல்லது மெய் தெளிவு.. சிவனை தகராசனன் என்பார்கள்.. அருள் சக்தி, உண்மை என்றால், திடநிலை விளக்கம் பெற்றது, சிவம் ஆகும்.. சிவம் இல்லையேல் சக்தியின் வெளிப்பாடு அறிய முடியாது.. அருள் என்ற விழிப்பு சக்தி இலையேல், எதுவும் விளக்கம் பெறாமல் வெளிப்படாது.. இப்பொழுது நாம் காணும் திட அல்லது உருவ காட்சிகள் எல்லாம் சிவநிலையாகி அருளின் உண்மையை உணர்த்த வந்த தகர மெய் ஞானம் அல்லது தெளிவு...
கூத்து என்பது கடவுள் நுண் ஆற்றலை திட நிலையாக விளக்கம் பெற மாற்றம் காணுவது.. சிவனின் கூத்து என்பது அவனின் நுண் ஆற்றலை விளக்கம் அளிக்க இயங்கும் முறையே... ஒவ்வொரு மனிதனும் தெளிவு பெற ஞானம் பெற சிவன் எடுக்கும் ஒவ்வொரு இயக்கமும் தெளிவை நோக்கிய பயணமே.. தெளிவை நோக்கி பயணப்படவேண்டிய மனிதன் இன்று மயங்கிய நிலை நோக்கியே பயணப் படுகிறான்.. தமிழ் காட்டும் வழியே முழுமையான தெளிவை நோக்கிய பயணமே.. அந்த வழியே முழுமையான விழிப்பு நிலை.... தமிழ் காட்டும் விழிப்பு நிலை சென்றவர்களே தமிழர்கள்.. அவர்கள் எந்த மொழி பேசினாலும் அவர்கள் தமிழ் நிலை அறிந்த தமிழர்கள்.. தமிழ் நிலை வேறு தமிழ் மொழி வேறு.. தமிழ் நிலை காட்ட வந்த தமிழ் மொழி இன்று ஆங்கில வடமொழி கலப்பில் தமிழ் நிலை காட்டும் வல்லமையை பெரும் பாலும் இழந்து விட்டதே.. அதனால் உலக முழுமைக்கும் உள்ள மனித குலம் இன்று வேதனை கடலில் மூழ்கி தெளிவு இன்றி தவிக்கிறது.. தமிழ் நிலை உணர்த்தும் தமிழ் மொழி உலக மொழி ஆனால் மட்டுமே உலகம் காப்பாற்றப் படும்... இதை தான் முகநூல் அன்பர் ஓதியடிமை அவர்களின் ஆழ்ந்த வற்புறுத்தல்.. வள்ளலார் அவர்கள் வெள்ளை இனத்தவர் இதனை செய்து முடிப்பார்கள் என்றார்.. தமிழ் நெறியே சன்மார்க்க நெறி அதாவது எல்லாவற்றிக்கும் சத்தாக ஆதாரமாக உள்ள நெறி என குறிப்பால் உணர்த்தினார்..

அப்படி பட்ட கூத்தை ஏன் அடி கூத்து என சொல்ல வேண்டும்.. அடி என்றால் அருள் நிலையில் மேலும் கீழும் முழுமையாக இருப்பவர்கள்.. அடியார்கள் என்பது அத்தகையோரே.. அடி கூத்து பயிலும் போது அடியார் தகுதியை பெறுவதோடு கூத்தின் மூலம் அருள் விளக்கம் பெறவும், அருளை திட நிலை ஆக்கும் வல்லமையையும் பெறுகிறோம்.. மின்சாரம் அருவமான அருள் நிலையை சார்ந்தது.. அது மின் விசிறி இயக்கமாக விளக்கம் பெறும் போது மட்டுமே அதன் பயன் தூய்ப்பு திடமாக தெரிகிறது.. இப்படி அடி கூத்து செயல் பாட்டை நடத்த உதவ, சுவாசத்தை ஒரு வழியில் உட் படுத்துவது தான் கதி எடுத்தல் என்ற அடி கூத்து.. அதாவது கூ என்ற இறை அருள் ஆற்றலை து என்ற திட தேக ஆற்றலாக மாற்றுவதே கூத்து.. இந்த கதி சுவாசத்தில் ஆரம்ப தொடக்க நிலையாக உள்ள அடி கூத்தில், அருள் சக்தியானது திட நிலைக்கு உதவும் அதிர்வுகளாக மாற்றப் படுகிறது.. அப்படி மாற்றப் பட்ட அதிர்வுகளை முறையாக பயன் படுத்துவதே தடி கூத்து, படி கூத்து, மடி கூத்து போன்றவைகள்.. அவைகளை ஒவ்வொன்றாக தெளிவாக பார்க்கலாம்.. அடி கூத்தில் மேன்மை அடையவில்லையென்றால் எல்லாம் பொய்த்து விடும்.. இப்படி மாற்றத்தை உருவாக்கும் அடி கூத்திற்கு தேவையான சக்தியை வழங்குவதே உடன் பாடு கூடிய சுவாச ஒழுங்கு.. சுவாச ஒழுங்கு தாயாகி நின்று கூத்தாட உதவி செய்யும்... இந்த கூத்தின் விளைவாக தோன்றா நிலை என்ற விழிப்பு கருவறையில் அகநான் என்ற அககுரு பக்குவ நிலையில் வளர்க்கப் பட்டு ஞான குழந்தையாக முருகனாக வெளிப்படுவார்.. அவரே தமிழ் நிலையை, தரும் தகுதி உடையவர் என்பது தமிழ் மறையின் மூல கருத்து... ம் என்ற சிவகலப்பிலே உருகன் அதாவது உருவானவன் தான் முருகனாக கருதப் படும் அக குரு... சமய முருகன் இந்த தமிழ் முருகனை மையப் படுத்தி எழுந்தவன்.. மேற் கொண்டு நகரும் விளக்கம் நமக்கு குழப்பமே தரும்.. சத்தை பிடித்துக் கொள்வோம்.. அதுவே அடி ஆகும்.. அடி கூத்தை முறையாக பிடிக்கும் முன் அன்பர்கள் உடன்பாடு சுவாச ஒழுங்கில் மேன்மை அடைய முனையுமாறு வேண்டிக்கொள்கிறேன்...

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பதினொன்று


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பதினொன்று
******************************************************
Irakasiya Thedal : - அன்பரின் பல வினாக்களுக்கான பதில்
இரண்டு நிமிடங்களில் சிரமப் பட்டு மலை ஏற இன்னும் ஒரு மாத காலம் ஆகும்.. மிக மிக யதார்த்தமாக மூச்சு இளைப்பு சிறிதும் இன்றி சுலபமாக இரண்டு நிமிடங்களில் மலையேற நிர்ணயக்கப் பட்ட காலம் டிசம்பர் 31.. பின் தான் சூட்சம தேக தீவிர பயிற்சி தரப் படும்.. தடி கூத்தின் மூலம் விண்ணக சக்தியை பெற பயிற்சி தரப் படுகிறது.. புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான இந்த விண்ணக சக்தி ( Lavitational force ) மூலம் ஒரு பறவைக்கான விசேச ஆற்றல் கிடைக்கும்... இயக்கத்தில் 80 கிலோ எடைகொண்ட தேகம் இந்த விண்ணக சக்தியால் 30 கிலோ எடையாக நொடி பொழுதில் மாறி இருக்கும் வேளையில் தங்கள் செயல் திறனில் பெருந்த உயர் மாற்றம் காண முடியும்.. இப்பொழுது எல்லா அன்பர்களும் மிக குறைந்த இளைப்போடு நிற்காமல் மலை ஏற்றத்தை 7 நிமிடம் முதல் 12 நிமிடத்திற்குள் முடிக்கின்றனர்.. அதுவும் இரவு முழுவதும் விழித்திருந்து பின் காலையில் செய்கிறார்கள்.. அதுவே இரவு நன்கு தூங்கி காலையில் எப்பொழும் போல செய்தானர்களானால் 5 நிமிடத்திற்கு குறைவாக முடிப்பார்கள் என நம்பலாம்..
உடன் பாடு சுவாசம் மேன்மை அடைந்தால் மட்டுமே கதி பயிற்சி சொல்லி தரப் படும்.. காரணம் இளைபாறுதல் ஆற்றல் ஈடு கட்டுதல் போன்றவைகள் யதார்த்த உடன்பாடு சுவாசத்தில் மட்டுமே உள்ளது.. கதி என்பது சக்தியை முறையாக செலவு செய்து பெருத்த இலாபம் ஆதாயம் தேடும் வழி.. கதி என்பது சக்தியை செலவு செய்யும் நிர்வாகம்.. ஆகையால் கதி சுவாச ஒழுங்கிற்கிற்கு எந்த வகையிலும் ஈடு ஆகாது... முறையற்ற செலவால் இயக்கத்தில் குறை ஏற்படாமல் தடுக்கவே கதி சுவாசமும் அதில் உள்ள எட்டு வகை கூத்தும்... மனிதன் முறையற்ற சக்தி செலவால் தான் மிகுந்த நஷ்டம் அடைந்து முடிவில் மரணத்தை ஏற்கின்றான்.. சங்கரர் விவேகானந்தர் போன்றோர்கள் மரணத்தை முடிவில் ஏற்றாலும். தங்கள் பிறவியில் மிக உன்னத காரியங்களை இந்த கூத்துகளின் மூலம் செய்ய முடிந்தது... என் முடிவான பதில் இதுவே உடன்பாடு சுவாசத்தில் மேன்மை அடைந்தால் மட்டுமே கதி சுவாசத்திற்கான வாசல் திறக்கப் படும்.. அப்படி இல்லாத கதி சுவாசம் பொய்யான கதியாய் மாறி தீங்கு மிக செய்யும்.. சில அன்பர்கள் விண்ணக சக்தியை சற்று உணர்வதாக கூறுகிறார்கள்..

மடி கூத்து என்பது தூங்காமல் தூங்கும் பயிற்சி.. நெருப்பில் நடக்கும் போது ஒரு மனிதன் தூங்க முடியுமா ? தூங்க முடியும் என்பது மடி கூத்து பயில்பவர்களுக்கு மட்டுமே புரியும்... மடி கூத்து பயில்பவர்கள் எந்த ஒரு அரிய காரியத்தையும் மிக யதார்த்த நிலையில் செய்யும் திறன் உடையவர்கள் ஆவார்கள்... மிகுந்த ஓய்வினை கடுமையான பயிற்சியின் நடுவே பெற்றுக்கொள்ளும் நுணுக்கங்களை உடையது.. புருஸ் லீ பல தடவை சொன்னான்.. என்னவென்றால் எனது இரண்டு மிக பலமான குத்துக்களிடையே நான் எடுத்துக் கொள்ளும் அந்த அரை வினாடி ஓய்வின் மூலம் மட்டுமே அந்த அசாதரண காரியம் சாத்தியமாகிறது என்பது தான்.. கடுமையான பாரத போரின் நடுவே மிகுந்த அமைதியில் சொல்லப் படவேண்டிய பகவத் கீதை உருவானது இந்த மடி கூத்தின் மூலம் தான்.. சுவாச ஒழுங்கில் மேன்மை அடைந்த அன்பர்கள் அனைவருக்கும் கதி சுவாசப் பயிற்சி நிச்சயம் உண்டு.. அன்பர்களுக்கு பொறுமையும் காத்திருக்கும் பண்பும் தேவை... பொறுமையும் காத்திருத்தலும் ஒரு சிறந்த யோகம் என்பதை உணர்ந்தவர்களின் திடமான நம்பிக்கை.... முறையற்ற கதி பயிற்சியில் ஆர்வ கோளாரினால் பாதிக்கப் பட்ட மனித வர்க்கத்திற்கு நமது முறையான கதி சுவாச பயிற்சி அவசியம் தேவை... பயின்ற அன்பர்கள் பல கிளைகளாக பிரிந்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கற்று தருவார்கள்..

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பத்து


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி பத்து
***********************************************************************
திரு கூத்தன் நிலை
சுவாசம் என்பதின் உண்மையான பொருள் சுவர்க்க வாசம்.. முறையான சுவாசம் அல்லது சுவாச ஒழுங்கு நம்மை இந்த பூவுலகிலேயே சுவர்க்கத்தில் வாசம் செய்வதற்கு இணையான அனுபவத்தை தரவல்லது.. அப்படியான சுவாசத்தை நரக வாசம் ஆக்கிய பெருமை (!!!! ???? ) நம் மனதிற்கே உண்டு.. மனம் கெடுத்தவிட்ட, பாழ் படுத்திய சுவாசத்தை ஒழுங்கு படுத்த முனையும் போது, அந்த சுவாசம் சு (சுவர்க்க) வாசமாக நிச்சயம் மாறும்.. இந்த சுவாசம் தன் இயல் நிலையான இன்பநிலையை அடைய நான்கு வகையான சுவாச நிலைகளில் மேன்மை அடைகிறது..
1) இயல்பான சுவாசம்:--- இயல்பான நிலையில் விலங்குகளும், சற்று மேன் பட்ட நிலையில் உள்ள மனித சுவாசம். இது பூமியில் புவி ஈர்ப்பு எதிராகவும் உள்ளே மொத்தமாக ஒடுங்கி போகாமல் உள் இருந்து சதா காலமும் ஓங்க செய்ய அண்ட ஆற்றலின் தூண்டலால் வெளிக் காற்றின் மூலம் நடை பெறுவது.. இதில் மட்டுமே வாழும் மனிதன் அவனவன் விதி பிரகாரம் வாழ்வியலை நடத்தலாம்... ஆனால் முதல் நிலையான இந்த இயல்பான சுவாசத்தில் அரை குறையான அண்ட ஆற்றலையே மனிதன் பெறுகிறான்...
2) சுவாச ஒழுங்கு:--- இயல்பான சுவாசத்தில் இயங்கும் மனிதன் தன் விழிப்பு நிலையை பெருக்குவதின் மூலம் தன் சுவாசத்தின் மூலம் அதிகமான அண்ட ஆற்றலை மனித தரத்தில் உயர்வாக பெற முடியும்.. இதில் சுவாசத்தை முழுமையாக பயன் படுத்தி சுவாச ஒழுங்கினை தன்னில் நிறுவி மனித தரத்தின் உச்சிக்கு செல்ல முடியும்.. காற்றை ஊடகமாக, ஒரு வாகனமாக வைத்து, அதில் கிடைக்கும் அண்ட ஆற்றலை முழுமையாக உள் வாங்குகிறான் யோகி..
3) கதி சுவாசம்:-- கதி சுவாசத்தை அறியும் முன் சுவாசிக்கும் காற்றின் தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.. அண்ட ஆற்றலை தாங்கி வரும் காற்று உடலில் உட் புகுந்து வெளி வரும் போது, உடலில் உள்ள வெப்பத்தையும் அபகரித்து வெளியே வருகிறது.. அதனால் விளையும் தேக ஆற்றல் இழப்பு மிகவும் அதிகமானது.. அந்த வெப்பத்தோடு மனமும் வெளியே செல்லத் துடிக்கிறது... கரும் புகையை கக்கும் பெட்ரோல் வண்டி குறைந்த மைலேஜ் தருவது போல் நம் சுவாசத்தால் நாம் சரியான அளவில் அண்ட ஆற்றலை பெற இயலவில்லை... இதை மையப் படுத்தியே நம் தமிழ் சித்தர்கள் சுவாசத்தில் அதி கனல் பெற கதி சுவாசத்தை கண்டு பிடித்தனர்.. கதி என்பதை பிரித்தால் க்+ அதி எனலாம்.. இதில் 'க்' என்பது கனல் என்ற கடவுள் ஆற்றல் ஆகும்... இதில் காற்றின் துணையை வெகுவாக குறைத்துக் கொண்டு கனலை அதிகமாக வாங்கும் திறனை பெறலாம்.. ஆனால் இன்றைய சித்த வித்தியார்த்திகள் கதி என்று கூறிக்கொண்டு அதிகமான வெப்பத்தை வெளியே விட்டு ஜீவ சக்தியை தவறான சுவாசத்தால் கனல் மிக குறைவாகப் பெற்று, தங்கள் மரணக்குழியை தாங்களே விரைவாக தேர்வு செய்யும் அவல நிலைக்கு செல்லுகிறார்கள்.. இந்த கதி சுவாசம் நேரடி பயிற்சி மூலம் மட்டுமே தரப் பட வேண்டும்... கதி சுவாசம் பயிலுகிறவர்கள் மாமனித தரத்திற்கு செல்லும் தகுதியை பெறுகிறார்கள்...
இந்த கதி சுவாசத்தில் தான் எட்டு வகையான கூத்துகள் என்ற கதி சுவாச வகைகள் உள்ளன.. அவைகளின் மூலம் கனலை முறையாக திறமையாக பயன் படுத்தி யோக கலைகள் தற்காப்பு கலைகள் மருத்துவ கலைகள், அஷ்டமா சித்து கலைகள் போன்றவைகளை பெறலாம்... அடி கூத்து, தடி கூத்து, படி கூத்து, மடிகூத்து, இடிகூத்து, பரகூத்து, மற்ற இரண்டு உள் அடங்கிய மறை கூத்து போன்ற எட்டு வகை கூத்துக்கள்.. பிரம்மவஸ்திரம் போன்ற மிக பயங்கரமான சக்திகளை இயக்கக்கூடிய கூத்துக்கள் அந்த மறை கூத்தில் உள்ளது... அப்படி எட்டு வகை கூத்துகளில் செயல் பாட்டை மேன் படுத்த நடு நாயகமாக விளங்கும் சிவ கலப்பு ஒன்று இல்லையேல் எல்லாமே கேலி கூத்து ஆக மாறி விடும்.. அப்படி சிவ கலப்பு துணை புரியாத எந்த கூத்தும் சிறு பலனை கூட தராது.. கலப்பு திறனை பெருக்க உதவக்கூடிய சிவகலப்பு தந்த நம் சித்தர் மக்களின் கருணை உள்ளத்திற்கு நாம் எந்த விதத்திலும் நன்றி கடன் செலுத்த முடியாது..
கதி என்ற சொல்லுக்கு இன்னொரு விளக்கம் கலப்பு -க- திறன் -தி- என சொல்லப் படுகிறது..
கலப்பு திறன் தரும் சிவ கலப்பு இன்றி செய்யும் எதுவும் சவமாய் பலன் இன்றியே போகும்.. சிவ கலப்போடு எட்டு கூத்தக்களை ஆடும் சிவனை தான் திரு கூத்தன் என்றார்கள்.. அந்த எட்டு கூத்துகளோடு சிவ என்ற இரண்டு பூதங்களை சேர்த்து பத்தாகி நின்ற நிலையை அடைய முடியாததால் எட்டு இரண்டு கூட்டி எண்ணவும் அறியாது இருக்கின்றீர் பித்த உலகினரே என்றார் வள்ளலார்.. பத்து என்ற சொல்லை பிரித்தால் ப் + அத்து எனலாம்.. ஏகம் என்ற வடமொழி சொல்லே தமிழில் அத்து என்பது... து என்பது துவைதம் என்ற இரண்டு நிலை.. அத்து என்பது இரண்டு அற்ற அத்துவைத நிலையாகிய ஏக நிலை.. பத்து என்பது, இறை நிலையும் உயிரின நிலையும் ( ப் என்பது) ஒன்றாகி இரண்டு அற ( அற்று ) கலந்து ஒன்றாய் நின்ற ஏக நிலையாம்..
4) கனல் சுவாசம் என்பது வெளிக்காற்றின் துணை சிறிதும் இன்றி, கனலை மட்டுமே உள் வாங்கி ஆதி சக்தியை இறைவனுக்கு சமமாக பெற்று சமாதி ( சம ஆதி ) நிலையில் நிறை நிலை மனிதனாய் கருணை வடிவாய் நீதிமானாய் நீதியை நிலை நாட்டுபவனாய், நிற்பது..
தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்து மதுரை அன்பர்களுக்கு இரவு முழுவதும் தொடர்ந்து தீவிர பயிற்சியாக முதல் நான்கு கூத்துக்கள் கற்று தரப் படுகிறது... ஆனால் பிறவி பழக்கமாக வந்த வெளிச்ச தொடர்பு காரணமாக சிவ கலப்பின் திறன் குறைந்த காரணத்தினால் எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை.. சிவகலப்பின் முக்கியத்தவத்தை முற்றிலும் உணர்ந்த பின் அவர்களின் வேகம் அதிகமாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.. தீர்மானிக்கப் பட்ட கால கெடுவுக்குள் தங்கள் பயிற்சியில் முழுமை அடைவார்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வார்கள் என நம்பலாம்.. அவர்கள் வெற்றியை தொடர்ந்து கோவை திருச்சியில் பயிலும் மற்ற அன்பர்களுக்கும் நிச்சயம் பயிற்சி அளிக்கப் படும்...

மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி ஒன்பது


மர்ம யோகத்தில் கனல் வீரம்-- பகுதி ஒன்பது
*************************************************
முடியாததை முடிவுக்கு கொண்டு வர
புற கடன் அக கடன் என்பதில் அக கடன் என்ற மிகப் பெரிய பயிற்சியை அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது... புற கடன் பெருக பெருக ஒரு மனிதன் தன் நிலை இழந்து வேதனையும் துன்பத்தையே பெறுவான்.. ஆனால் அக கடன் பெருக பெருக ஒரு மனிதன் புறக் கடனிலிருந்து முழுமையாக விடுப்பட்டு புறத்தே தானமாக இலவசமாக மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கும் தகுதியை பெறுவான்..
அந்த அக கடன் தான் என்ன என்பதை சற்று பார்ப்போம்.. ஆதி தமிழில் கடன் என்பது 'க்' + அடன் என்பது.. அடன் என்பது அடைந்தவன் அடைகிறவன் அடையப் போகிறவன் என பொருள்... கடன் என்பது 'க்' என்ற கடவுள் ஆற்றலை அடைகிறவன் என பொருள்.. ஒவ்வொரு ஆன்மீக வாதியும் அந்த அக கடன் அடையவே பயணிக்க வேண்டும்.. ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப் பட்ட நிலையில் இறை ஆற்றல் வந்து கொண்டே இருக்கிறது.. மிகவும் வருந்த தக்க செய்தி என்னவென்றால் அந்த விதிக்கப் பட்ட ஆற்றலை மனிதன் முழுமையாக பயன் படுத்துவதே இல்லை.. அப்படி முழுமையாக பயன் படுத்துவபவர்கள் தான் உலக வரலாற்று நாயகர்கள்... அவர்கள் மனித தரத்திற்கு உச்சத்திற்கு போனவர்கள்.. அவ்வளவே... ஆனால் மா மனித தரத்திற்கு செல்ல மர்ம யோகம் பல நுணுக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.. அதில் அக கடன் பெறும் பயிற்சி முக முக்கியமானது...
விதிக்கப் பட்ட ஆற்றலையே குறைவாக பயன் படுத்தும் மனித குலம் சிறுக சிறுக தன் சோம்பலால் குறைத்துக் கொள்கிறது.. பின் தன் தேகத்திற்கு போதுமான ஆற்றல் கிடைக்காத நிலையில் உடல் துன்பம் அனுபவிக்க தொடங்குகிறான்.. மீண்டும் மீண்டும் சோம்பலால் ஆற்றலை பயன் படுத்தாமல் உயிர் துன்பம் வர தொடங்குகிறது.. பின் உயிரே உடலில் நிற்க முடியாத நிலையில், தேகத்தில் மையம் கொண்ட ஆற்றல் அனைத்தையும் இழந்த நிலையில் மரணம் நிகழுகிறது.. மனிதன் குழந்தையாக இருந்த நிலையில் கிடைத்த விதிக்கப் பட்ட ஆற்றலை தன் சோம்பலால் சிறுக சிறுக குறைத்துக் கொண்டு முடிவில் சுவாசிக்க முடியாத அளவிற்கு சுருங்கி, மரணம் அடைகிறான்.. மர்ம யோகிகள் முதலில் தங்களுக்கு விதிக்கப் பட்ட ஆற்றலை முழுமையாக வீரம் கொண்டு வெற்றி கொள்கிறார்கள்.. பின் மரண நிலைக்கு தாங்களே விழிப்பு நிலையால் செல்லும் அளவிற்கு தங்களிடம் உள்ள மையம் கொண்ட ஆற்றலையும் இழக்க துணிவு வீரம் கொள்கிறார்கள்... இந்த மையம் கொண்ட ஆற்றல் தான் இறைவன் இறைவன் எல்லா உயிருக்கும் கொடுத்த உயிர் கொடை அல்லது பரிசு.. இதில் உள்ள ஆற்றலை இலவசமாக பெற மனிதனுக்கு உரிமை இல்லை.. ஆனால் கடனாக பெறலாம்.. ஆனால் மனிதர்கள் இறைவனுக்கு துரோகம் செய்து இலவசமாக பெற்று செலவழித்து மரணத்தை தண்டையாக பெறுகிறார்கள்... இப்படி இருக்க மர்மயோகியர் விதிக்கப் பட்ட ஆற்றலுக்கு மேல் மையம் கொண்ட ஆற்றலையும் கடனாக வாங்கி பயன் படுத்துகிறார்கள் .. ஏறக்குறைய மரண நிலைக்கு துணிவு கொண்டு செல்லுகிறார்கள்.. இப்படி மரண நிலைக்கு விழிப்பு நிலையால் செல்லும் போது அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை..
இந்த நிலையில் தான் இந்த உயிரை படைத்த அண்ட ஆற்றல் தன் தனி பெரும் கருணையால் இழந்த மையம் கொண்ட தேக ஆற்றலையும், விதிக்கப் பட்ட அண்ட ஆற்றலையும் சேர்த்து கொடுக்கத் துவங்குகிறது.. இதனை தன் விழிப்பு நிலையில் உடன் பாடு சுவாசத்தின் மூலம் முழுமையாக மர்ம யோகிகள் பெறுகிறார்கள்.. இந்த ஆற்றலே அதிகப் பட்ட ஆற்றலாகும்... இது கடனாக பெற்ற மையம் கொண்ட உயிர் கொடை ஆற்றலையும் ஈடு செய்து மேற் கொண்டு விதிக்கப் பட்ட ஆற்றலையும் நிறைவு செய்ய அதிகப் பட்ட ஆற்றலை அண்ட பேரறிவு வாரி வழங்குகிறது.. இதனை முன் பதிவுகளில் தெளிவாக சொல்லப் பட்டு இருக்கிறது.. இந்த அதிகப் பட்ட ஆற்றலை பெறவே குணங்குடி மஸ்தான் தன் பாடல்களில் இறக்கத் துணிந்து கொண்டேன் என்ற தலைப்பில் பல பாடல்களை பாடி உள்ளார்..
இதில் அதிசயம் என்ன வென்றால் ஒரு தடவை அண்ட ஆற்றலை அதிகப் பட்ட ஆற்றலாக, கிடைத்து விட்டால் அதுவே அந்த மனிதனுக்கு விதிக்கப் பட்ட ஆற்றலாய் மாறி விடுகிறது.. இந்த முறையில் விதிக்கப் பட்ட ஆற்றலை படிப்படியாக மர்ம யோகிகள் உயர்த்திக் கொண்டே செல்லுகிறார்கள்.. அதனால் மனித தரத்திலிருந்து மாமனித தரத்திற்கு உயர தொடங்குகிறார்கள்... பின் தெய்வ தரத்திற்கும் முடிவான இறை நிலை தரமான நிறை நிலை மனித தரத்திற்கும் செல்லுகிறார்கள்.. கனல் பெருக்கத்தை அடைய மரண நிலை நோக்கி நகரும் வீரத்தால் இந்த பயிற்சி கனல் வீர பயிற்சி என அழைக்கப் படுகிறது... இப்படி மரண பயம் இன்றி வீரம் கொண்டு கனலை அதிகப் பட்ட ஆற்றலாக பெற துணிவு கொண்ட மதுரை அன்பர்கள் ஐவருக்கு தற்போது தீவிர பயிற்சி தரப் படுகிறது.. தங்கள் வீரத்தால் கனலை அதிகம் பெற்று விரைவில் மாமனித தரத்திற்கு உயர்வார்கள் என நம்பலாம்.. அவர்களின் வீரம் அவர்களுக்கு மிகவும் துணையாக இருக்கிறது.. மர்ம யோகம் வீரம் கொண்டவர்களுக்கே பொருந்தும்.. இந்த பயிற்சியே தமிழ் வீரம் தான்.. அந்த வீரம் இல்லாமையால் பொய்யான வீரம் வெளிப்பட்டு இன்று தமிழ் மக்களை வதைத்துக் கொண்டு இருக்கிறது.. உண்மை வீரமாம் தமிழ் வீரம் கொண்டு மேன்மை அடைவோமாக.. முடியாததோடு மோதி மோதி அககடன் பெற்று அதிகப் பட்ட ஆற்றலால் முடியாததை முடிவுக்கு கொண்டு வருவோம்.. உலகிற்கு நல் வழி காட்டுவோமாக...



மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி எட்டு


மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி எட்டு
****************************************************
எது ஒன்று இருந்தால் எல்லாம் இருக்குமோ ?!!!
அரும்பாடு பெற்ற அனைத்தையும் ஒரு நாள் இழக்க நேரிடுகிறது.. பெற்றதிலே பெருமை கொண்ட மனிதன் அதை இழப்பதை பற்றி துளியும் கவலைப் படுவதில்லை.. அது எவ்வாறு இழக்கப் படுகிறது என்பதை பற்றி ஆராய்வதே இல்லை.. ஒரு நாள் இருந்தது இருந்தேன் என்ற ஆணவ மலம் ஒன்றே போதும் என மனிதன் நினைக்கின்றான்.. அளப்பரிய பொருளை பாடுபட்டு தேடி குவித்தாலும். மரணத்தின் தருவாயில் குவித்த பொருள்கள் அனைத்தும் இழக்கின்றோமே என்ற கவலை மனிதனுக்கு இருப்பது போல தெரியவில்லை.. இறப்பிற்கு முன் சில நொடிகளுக்கு முன்னால் கூட தான் பெற்றதை நினைத்து மன நிறைவு கொண்டுதான் இருக்கின்றான்.. அந்த மன நிறைவோடு மரணத்தை தழுவுவதில் எந்த பிரச்சனையும் மனிதனுக்கு இல்லை.. நிறைவேற்றாத ஒன்று இருந்தால் மட்டுமே மன கசப்போடு இறக்கிறான்.. துரியோதனன் உயிருக்காக போராடிக் கொண்டு இருக்கிறான்.. பாண்டவர்கள் மரணச் செய்தியை கேட்காமல் தன் உயிர் பிரியக்கூடாது என்ற பிடிவாதத்தால் உயிரோடு போராடிக்கொண்டு இருக்கின்றான்.. கடைசியில் பாண்டவர்களின் தவறான மரணச்செய்தியை கேட்ட பிறகே அவனின் உயிர் பிரிகிறது.. இப்படியாக எல்லாம் இழந்தாலும் ஏதோ ஒன்றை சாதித்து விட்டால், இழந்தாலும் நிம்மதி அடைகிறான்.. இது அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்ற பழமொழிக்கு ஒத்ததாக உள்ளது.. அறுவை சிகிச்சை வெற்றி களிப்பிலே மரணத்தை தழுவதில் எந்த இடர்பாடும் மனிதன் அடைவதில்லை.. இதுதான் மனிதனின் மன திருப்தி என்பது.. மனதிருப்தி போன்ற மூடச் செயல் எதுவும் இல்லை என்பதை மட்டும் மனிதன் புரிந்து கொள்ளவே முடிவதில்லை..
காதற்ற ஊசியும் நிரந்தரமாக எடுத்துச் செல்ல முடியாது என்று மரணத்திற்கு பின் நன்கு அறிந்து இருந்தும், மன நிறைவு என்ற மாயை ஒன்றே போதும் என மனிதன் இருக்கிறான்... ஆனால் மரணத்திற்கு பின் எடுத்துச்செல்லக் கூடிய ஒன்று உண்டு என மனிதன் இதுவரை அறியவே இல்லை.. அப்படி அறிந்து இருந்தாலும் அதை நம்பும் படியாக மனிதனுக்கு இருப்பதில்லை... அப்படி மரணத்திற்கு பின் எடுத்துச்செல்லக்கூடிய அந்த உயர்ந்த பொருள் விழிப்பு என்ற ஒன்றே.. அதனையே வள்ளுவர் புகழ் என குறிப்பிடுகிறார்.. தோன்றில் புகழோடு தோன்றுக என்றார்.. இந்த புகழ் தான் பிறவி விட்டு வேறு ஒரு பிறவிக்கு எடுத்துச் செல்ல கூடிய ஒரு உன்னதமான ஒன்று... பு என்ற உயிர் இயக்கத்திற்கும் க என்ற இறை இயக்கத்திற்கும் பூரண இணைப்பான 'ழ்' என்ற ழ கரமாகும்.. இந்த விழிப்பு நிலையான புகழ் ஒன்றை மட்டுமே மனிதன் மரணத்திற்கு பின்னும் எடுத்துச் செல்ல முடியும்.. மரணத்திற்கு பின்னும் எடுத்துச் செல்லக் கூடிய ஒன்று இருந்தால், மனிதனுடைய மரணம் மரணமாகாது.. அது தூக்க நிலைக்கு ஒத்தாகி விடும்... அதாவது மரணத்திற்கு பின்னும் மனிதன் வாழ்கிறான் என்றால் அதற்கு சாட்சி அவன் தன் உடன் எடுத்து செல்லும் விழிப்பு என்ற புகழ் ஒன்றே..
ஆகவே தான் விழிப்பு என்ற புகழை போல் உன்னத பொருள் எதுவும் இல்லை என்ற உணர்ந்த அந்த கணமே மனிதன் தெளிவு என்ற ஞானம் அடைகிறான்.. ஞானம் அடைந்தவன் தான் வாழும் காலத்தே உலகத்தில் உள்ள அனைத்தையும் பெறக் கூடிய ஆற்றல் இருந்தாலும், எவையெல்லாம் மரணத்திற்கு பின் எடுத்துச் செல்ல முடியாதோ அவைகளுக்கு எல்லாம் ஆசை படுவதில்லை.. மர்ம யோகம் எது ஒன்று கிடைத்தால் நித்தியம் நிரந்தரம் கிடைக்குமோ, அந்த ஒன்றை பெறவே முயலும்.. அதே நேரத்தில் தேவையானால் எல்லாம் பெறக்கூடிய வல்லமையும் தன்னிடத்தே வைத்துக் கொண்டும் இருக்கும்... மர்ம யோக பயிற்சிகள் அனைத்தும் நித்திய அநித்தியமானவை அனைத்தையும், பெறும் அளவிற்கு வடிவமைக்கப் பட்டவைகளே.. அதனால் தான் உலகம் வெளிச்சம் போட்டு காட்டும் யோகப் பயிற்சிகள் போல் இல்லாமல், சற்று புரியாத மர்மமாகவே இருக்கும்.. அந்த மர்மத்தை மர்மமாகவே ஏற்றும் கொள்ளும் போது, அந்த தோன்றா நிலையை தோன்றாநிலையாகவே ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே அது வேறு ஒன்றும் இல்லை அது உன்னத மெய் பொருளான விழிப்பு நிலையென விளங்க வரும்.. முதலில் புரியாத ஒன்றாக உள்ள மர்மயோகத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மர்ம யோகிகள் ஆவார்கள்.. பின் எல்லாம் புரிந்தவர்களாக ஆகும் போது ஞான யோகிகளாக மாறுகின்றனர்.. முதலில் புரிய வை பின் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்பவர்களுக்கு இந்த மர்ம யோகம் சரிப்பட்டு வராது.. இதுதான் கடவுள் என ஒன்றை காண்பித்து ஏமாற்றும் வேலை எதுவும் இல்லை.. இப்பொழுது சத்தியம் உண்மையை தவிர கவர்ச்சி என்ற பொய்மை எதுவும் இந்த மர்ம யோகத்தில் இல்லை என அன்பர்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்..

அன்பர்கள் : மிக்க நன்றி ஐயா , அனைவரும் சொல்வது போல் தங்களுடைய பதிவுகள் நன்றாக உணர்ந்த புரிந்த பின்பும் அதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய எங்களால் முடியவில்லை , ஆழமான சோம்பேறி தனத்தில் ஊறி போய் இருக்கிறோம் .தாங்கள் சொல்லி கொடுத்த விசயங்களையே நாங்கள் தொடர்ச்சியாக செய்ய வில்லை .மேலும் தங்களிடம் விசயங்களை கேட்டு தங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால் தான் ஐயா தங்களை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறேன் .
மனதில் ஆசை இருக்கிறது செயல்படுத்த மனதில் உறுதி இல்லை

Marma Yoogi
 
மனதில் ஆசைகள் மட்டுமே இருக்கும்.. ஆசைகளில் உழன்று, உழன்று கனவுகளில் மிதந்து மிதந்து காலத்தை கடக்கும் சோம்பல் நிலையை மட்டுமே மனதில் இருக்கும்.. அந்த மனம் அற்ற நிலையான தோன்றா நிலையில் விழிப்பு என்ற தெய்வீக நிலையில் செயல் பாடு ஒன்று மட்டும் தான் இருக்கும்.. செயல் பாடு எத்தனை சிரமமாக இருந்தாலும், அதனை வெல்ல வீரமும் விவேகமும் கொண்டு முடித்தே தீரும்.. சுவாசத்தில் உடன்பாடு சுவாசத்திற்கு ஏற்ற சூழ்நிலை
ஏற்படும் போது மனம் கடந்த நிலையான தோன்றாநிலையில் மனதின் சோம்பல் அறவே முறியடிக்கப் பட்டு, எழுச்சியும் வேகமும் விழிப்பு நிலையால் பெறுகின்ற அற்புதத்திற்கு இணையான ஒன்று எதுவும் இல்லை.. வீறு கொண்டு எழ தோன்றா நிலையை உடனே பிடிக்கவும் அதில் நிலையாய் நிற்கவும் பழகினாலே போதும்.. அனைத்தும் தானாக செயல் கூடும்.... காரணம் மனம் கடந்த நிலையில் நடப்பதால், தானாக நடப்பது போல மனிதருக்கு தெரியும்...
 
 
 

மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி ஏழு


மர்ம யோகத்தில் கனல் வீரம்--- பகுதி ஏழு
**************************************************************
சிவகலப்பின் மறுக்கப் பட்ட மறைக்கப் பட்ட மர்மம்
மனம் ஒன்றோடு கலக்கும் செயல்பாடு உடையது.. மண் பொன் பெண் விசயங்களில் மனம் கலக்கும் விதம் வேறு.. அன்பு தயை கருணை நல் ஒழுக்கம் போன்றவைகளில் கலக்கும் விதம் வேறு.. இந்த இரண்டிற்கும் மனதின் கலப்பு திறன், மிகுந்த வித்தியாசம் உடையது.. மேல் பரப்பாக மனம் கலக்கும் போது மனதிறன் மிக குறைவாக இருக்கும்.. ஆழ ஆழ ஆழ் நிலையில் மனம் கலக்கும் போது, மனதிறன் எல்லை இல்லாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.. எப்படி வானத்திற்கு எல்லை இல்லையோ அப்படியே இந்த ஆழ் நிலை மனதிறனுக்கு எல்லையே இல்லை..
மனதை ஒன்றில் பொருந்துதல் அல்லது பொருத்துதல்,- இணைத்தல் அல்லது இணைதல்- கலத்தல் அல்லது கலப்பு - இவற்றிற்கு ஒரு அளவு கோல் உண்டு.. தமிழ் யோகத்தில் இதற்கு அளவு கோல் உண்டு.. அது பௌதிக கலப்பு, இரசாயன கலப்பு, அணுக்கூட்டு கலப்பு, அணுக்கலப்பு, அணு துகள் நிலை கலப்பு என ஐந்து வகை கலப்புகள் இருக்கின்றன.. இவைகளின் கருத்து மிக முக்கியமானது.. உண்மையான ஆன்மீக முன்னேற்றம் இந்த கலப்பில் மட்டுமே உள்ளது.. பௌதிக கலப்பு மிக மேலோட்டமான கலப்பு தேக கலப்பு.. இரசாயண கலப்பு என்பது மன கலப்பு.. அணுக்கூட்டு கலப்பு என்பது ஆன்மா கலப்பு அல்லது உயிர் கலப்பு.. அணுக் கலப்பு என்பது அருளோடு கூடிய துவைத கலப்பு.. அணு துகள் கலப்பு என்பது அருளாய் ஆன அத்துவைத கலப்பு.. அத்துவைத கலப்பே முடிவான கலப்பு.. அது எல்லையே இல்லாத மிக ஆழமான கலப்பு.. அதுவே சிவ கலப்பு ஆகும்.. சிவ சிவ என சொல்லுவதில் உள்ள பொருள் அளவில்லா எல்லை கடந்த நிலைக்கு செல்லவே தமிழில் இரண்டு தடவை தொடர்ந்து சொல்லும் பழக்கமாக உள்ளது...
மேலே சொன்ன கலப்புகள் தரம் மிக முக்கியமானது.. பெரும்பாலும் ஆன்மீகத்தில் பௌதிக கலப்பில் மட்டுமே இன்றைய நிலை உள்ளது.. அதனால் தான் எந்த விதத்திலும் ஆன்மீகம் பலன் தராமல் இருக்கிறது.. ஆன்மீகத்தில் பௌதிக கலப்பில் இருந்து இரசாயண கலப்பாகிய மன கலப்புக்கு செல்லவே இன்றைய ஆன்மீகம் மிகவும் தடுமாறுகிறது.. அதற்கு மேல் உயிர் கலப்பு, அருளோடு கலப்பு, அருளான கலப்பு என்பது இன்றைய ஆன்மீக குருக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.. மன கலப்பிற்கே அவர்களுடைய குரு பீடமும் குரு மரியாதையும் மிக பெரிய தடைகளாக உள்ளது.. ஒரு குருவையே வேறு படுத்தி அவரை கடவுள் நிலைக்கு எட்ட தள்ளி வைக்கும் போது, பௌதிக கலப்பிற்கே சிரமமாக உள்ளது.. அவ்வளவு கேவலமான முறையில் நமது ஆன்மீகம் உள்ளது.. கண்ணப்பர் நாயனார் சரித்திரத்தை சற்று உற்று கவனித்தோமானால், காட்டிலே இருந்த சிவனை ஏழு நாட்கள் தான் தொழுதார்.. சிவனை தொழ எந்த குருவும் வழி காட்டவில்லை.. அவர் வெறும் பௌதிக கலப்பிலே இருக்கவில்லை.. அவர் அருள் கலப்பு வரை சென்றதால் தான் சிவ தரிசனம் காண முடிந்தது.. அதே சிவனை இருபது வருடங்கள் பௌதிக கலப்பிலே பூசை செய்த பூசாரிக்கு சிவ தரிசனம் காண இயலவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது..
நம்முடைய மர்ம யோகம் அருளான கலப்புக்கு செல்லும் நுணுக்களை உடையது.. மர்ம யோகமான தமிழ் யோகத்தால் விரைவில் அன்பர்கள் மிக பெரிய முன்னேற்றம் காண்பார்கள்.. மலையேற்றம் காணும் அன்பர்கள் தங்கள் உடன் பாடு சுவாசத்தில் இப்போது பௌதிக கலப்பிலிருந்தும், மன கலப்பாகிய இரசாயண கலப்பிலிருந்தும் விடுபட்டு சுவாத்தோடு ஆன்மா அல்லது உயிர் கலப்பிற்கு சென்று விட்டார்கள்.. இதனால் சற்று தேக்க நிலையில் இருந்த அன்பர்கள் அளவுக்கு அதிகமான அண்ட ஆற்றலை பெற்றதால் எட்டு தடவை தொடர்ந்து மலை ஏறி இறங்கியும் சற்றும் தேக அலுப்பு இன்றி கால் வலி இன்றி உற்சாகமாக இருக்க முடிந்தது சற்று ஆச்சரியமான செய்தி தானே!!.. இதுவே துளி அளவு சாதனைதான்... இன்னும் அன்பர்கள் அருளான கலப்பாகிய சிவ கலப்பிற்கு செல்லும் போது சித்தர் தரத்திற்கு மேல் நிறை நிலை மனித தரத்திற்கு நிச்சயம் உயருவார்கள்.. கோவையிலும் மற்ற இடங்களிலும் பயிலும் அன்பர்கள் சுவாசத்தோடு கலக்கும் கலப்பின் தரத்தை நன்கு உணர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்..

Marma Yoogi
Marma Yoogi கேள்வி :--உற்சாகம் தரக்கூடிய பதிவு நன்றி அய்யா...பெளதிக கலப்பு இரசாயன கலப்பு புரியவில்லை?கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அய்யா

பதில்:-- பௌதிக கலப்பு என்பது விலங்கியல் கலப்பு போன்றது.. யானை கூட்டம், மான் கூட்டம், தெரு நாய்கள் கூட்டம் ஏதாவது பிரச்சனை என்று வ
ந்தால் எல்லாம் சிதறி ஓடி போய் விடும்.. அதை போல் தான் அரசியல்வாதிகள் மேடை கூட்டம், சாலையில் விபத்து நடந்தால் வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம், எந்த மன கலப்பும் இல்லாமல் மனிதர்கள் இன்று கூடுவது போல், ஆன்மீகத்திலும் மக்கள் கூடுகிறார்கள்... கோவில்களிலும் மசூதிகளிலும் சர்ச்களிலும், பிரார்த்தனைகளில் எந்த மன கலப்பும் இல்லாமல் தேக அளவில் மட்டுமே கூடுகிறார்கள்... மன கலப்பில் இறை நிலையோடு மனம் உருகி கண்ணீர் பெருகி நிற்கும் நிலை என்றோ காணாமல் போய் விட்டது.. கிருஸ்துவ ஆலயங்களில் கண்ணீர் பெருகி நிற்கும் நிலையை அடிக்கடி பார்க்கலாம்.. அது பெரும்பாலும் தன் தேவைக்கு இறைவன் உதவாத இறைவனின் அவல நிலையை எண்ணி பார்த்தே கண்ணீர் வரும்.. இறைவனின் புனிதத்தோடு கலக்க துளியும் மனம் தயாராக இருப்பதில்லை.. மற்ற இடங்களில் இருக்கும் இறை வேண்டுதல் எல்லாம் தன்முக ஆணவ நிலையாக இருக்கும்... எது கிடைத்தால் எல்லாம் கிடைக்கும் அதற்கு மனம் ஒரு போதும் நாடுவதில்லை.. ஒரு ஊரோ ஒரு நாடோ உலகமோ நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலில் அதில் தானும் நன்றாகவே இருக்க முடியும் என்ற எண்ணம் மனதிற்கு துளி அளவும் எழுவதில்லை.. உலக சமாதானத்திற்க்காக நடக்கும் பிரார்த்தனைகள் எல்லாம் பக்குவப் படாத மனிதர்களால் வெறும் கேலி கூத்தாகவே இருக்கும்.. தன்னை தவிர்த்து தான் இருக்கும் சமூகத்திற்காக மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது அங்கே அன்பு என்ற கனலால் மட்டுமே இரசாயன மாற்றம் நிகழுகிறது.. எப்படி உலகியலில் இரண்டு வேதியல் பொருள்கள் ஒன்று கூடி பிரிக்க முடியாத இரசாயண மாற்றம் நிகழ நெருப்பு தேவைப் படுகிறதோ, அது போல் இருவரது மனம் ஒன்று கூட, அன்பு என்ற கனல் தேவை படுகிறது.. இன்றைய சூழ்நிலையில் பெரும் பாலும் ஒன்று கூடி நின்று வாழ்வியல் நடத்தும் குடும்பத்தில் கூட குடும்ப உறுப்பினர்கள் இடையே அந்த இரசாயண மாற்றம் நிகழுவதில்லையே !!!.. பொது மனிதனின் தரம் உண்மையான அன்பு இல்லாமையால் பெரும் பாலும் இரசாயண மாற்றத்திற்கே வகை கிடைக்காமல் இன்று தவிக்கிறது..