Monday, 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஏழு ( 18-11-27 )

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஏழு ( 18-11-27 ) 
**************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி :--- அய்யா மலை ஏறும் சமயம் உடன் பாடு சுவாசம் செய்கின்ற போது சிறிது தலை வலிக்கிறது.. காரணத்தை அறிய விரும்புகிறேன்...

நாம் மனம் என்ற சிலந்தி வலையில் சிக்கி மிகவும் தவிக்கிறோம்... வானத்திலிருந்து மண்ணில் விழும் போது, புனித மழை நீர் எப்படியாவது மண்ணின் மாசுவால் கெட்டுப் போவது போல, விழிப்பு நிலையிலிருந்து வரும் ஒவ்வொரு செயலும் அண்ட ஆற்றலால் நடக்கும் போது, அதனை விழிப்பு நிலையில் உணராமல் மனம் அந்த செயலின் பலன்களை எல்லாம் வெளிச்சமாக மாற்றி விரையமாக்குகிறது.. மழை நீர் பூமிக்கு உதவாது கடலில் கலப்பது போல் நமது ஒவ்வொரு செயலின் பயன்களை உணர்வின் மூலமாக அதனை உடல் வளத்திற்கும், உடல் மேன்மைக்கும் பயன் படாமல், மனதால் அந்த பலன்களை எல்லாம் உடலுக்கு வெளியே பாய்ந்து விரையம் ஆகுகிறது.. அப்படி பாய்கின்ற போது அந்த ஆற்றலோடு ஏற்கனவே தேகத்தில் தங்கிய ஆற்றலையும் சேர்ந்து கணிசமான முறையில் வெளியே பாய்ந்து ஓடுகிறது... அதனால் விழிப்பு நிலையில் கால் ஊன்றாத எந்த யோகப் பயிற்சியும் முடிவில் உடல் சோர்வை மட்டுமே தருகிறது... நமது பயிற்சிகள் அனைத்தும் விழிப்பு நிலையில் கால் ஊன்றி பயிலும் பயிற்சிகளாகவே வடிவமைக்கப் படுகின்றன.... ஆனாலும் பழக்கத்தால் பயிற்சிகள் செய்யும் போது மனம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நான் செய்கின்றேன் நான் செய்கின்றேன் என்ற இறுமாப்போடு தன்னை ஈடு படுத்தி கொள்ளும் போது, ஆற்று வெள்ளம் கிணற்று நீரை அள்ளிக் கொண்டு சென்றது போல் உடல் ஆற்றல் இழந்து, இழந்ததின் காரணமாக உடலில் அங்காங்கே வலி தோன்றுகிறது.. சற்று பயின்று தேறி வரும் வரை நாம் வலி இருக்கும் இடத்தை விட்டு வேறு சில பயிற்சிகளை செய்தால் வலி உடனே காணாமல் போய்விடும்.. தலை வலி வரும் போது கால் பயிற்சியாக சற்று நடைபயணம் மேற் கொண்டால், கண்டிப்பாக தலைவலி நீங்கி விடும்... கால் வலி வரும் போது சற்று கைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கால் வலி குறையலாம்.. எந்த பயிற்சியும் செய்யும் போது மனதினுடைய ஆர்பாட்டம், கணிப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்யும் போது நாம் உணர்வோடு பொருந்தி அண்ட ஆற்றலின் தேக கலப்பை நாம் பெருக்கி பயன் கொள்ள முடியும்...

நான் பயிலுகின்றேன், இதோ நான் உணர்வோடு பொருந்தி யாரும் அடையாத பெரிய நிலைக்கு செல்லுகின்றேன், இனி நானே நாளைய இந்த நாட்டின் அதிபதி, எல்லோரையும் விட நானே உயர்ந்து நிற்பேன் போன்ற மன ஆர்பாட்டங்கள் துளி அளவும் தலை தூக்கினால் போதும் பயிற்சியின் தன்மை கீழ் நிலைக்கு போய் விடும்... ஆகவே பயிற்சி செய்யும் போது வலி தோன்றினால் சற்று விழிப்பு நிலையால் ஆராய்ந்து பார்த்தால் இந்த தவறுகள் மனதால் நடந்து இருப்பதை உணரலாம்.. அந்த வலியை மனதால் அறிய வைக்க வைக்க மனதிற்கு ஒரு பய உணர்வு ஏற்படும்.. இதுவும் சிறந்த உபாயம்.. பய உணர்வு மனதை ஓரளவு கட்டுப் படுத்தும்.. வலி வந்தால் அதனை பயன்படுத்தி அந்த வலியை நீடிக்க வைத்து அந்த வலிக்கான காரணம் மனம் தன் செயல் பாட்டினால் தான் என மனதிற்கு உணர வைக்கும் போது மனதிற்கு பய உணர்வு வருகிறது.. இப்படியாக நாம் போராடி போராடி விழிப்பு நிலையில் வாழும் அகநான் ஆகிய அககுருவை எழுப்பி விட்டால் அதன் பின் செய்யும் காரியங்கள் எல்லாம் சித்தி பெறும்...

நாம் அகநான் நிலையில் எந்த காரியத்தை செய்தாலும், அது முழு சித்தி பெறும்.. பயன் தரும்.. புற நானாகிய மனதின் மூலம் செய்யும் ஒவ்வொரு காரியமும் சீர் கெட்டே போகும்.. ஆனால் புற நானில் கலந்த பய உணர்வால் விழிப்பு நிலை செயல் படும் போது, செயல் படும் அளவிற்கு ஒரு காரியம் வெற்றி பெறுகிறது... பக்தியில் பயபக்தி அதிக பலன் தரும் என்பது இதனால் தான்.. ஆனாலும் அது ஓர் அளவிற்கே... அந்த அளவிற்குள் விழிப்பு நிலை பெருக்கம் அடைந்து, அந்த பயத்தை போக்கா விட்டால் அந்த பயமே மேல் பயிற்சிக்கு தடையாகி விடும்.. பய உணர்வில் கண்டுண்ட மதங்களில் உள்ளோர் விரிந்து ஓங்கிய நிலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கு காரணம் அந்த பய உணர்வே.. விழிப்பு நிலையை மையமாக வைத்து, அந்த விழிப்பு நிலையால் விழிப்பு நிலை பெருக்கத்தை அடைவது மிக சிறந்த வழி... நம்மில் இருக்கும் குறைந்த நிலையில் உள்ள விழிப்பு நிலையை பயன் படுத்தி மெல்ல மெல்ல முன்னேறி செல்வது சிறந்த வழியாகும்..

உலக அமைதிக்காகவும் மழைக்காவும் செய்யும் பூஜைகள் அனைத்தும் புறநான் நிலையில், செய்யப் படுவதால் உலக அமைதி மேலும் மேலும் கெடுகிறது.. சென்ற நான்கு ஆண்டுகள் தமிழ்நாட்டில் மழைக்காக செய்த பூஜைகள் ஏராளம்.. ஆனால் மழை பொய்த்துப் போய் ஏமாற்றி விட்டது.. ஆனால் இந்த வருடம் மழைக்காக தீவிரமாக எதுவும் செய்யவில்லை.. அதிக அளவு மழை பெய்து பூமி தேவைக்கு மேலே குளிர்ந்து விட்டது.. வானிலை மைய எச்சரிக்கையை மனதால் பொருட் படுத்தாமல் 15-11-15 அன்று குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து கூடிய அன்பர்கள், மழை நிற்பதற்காக எந்த வேண்டுதலும் செய்யாமல் கீழ் மண்டபத்தில் விழிப்பு நிலையில் காத்து இருந்தனர்.. சற்று நேரத்தில் மழை நின்றது.. 45 நிமிடங்கள் வரை சிறு இதமான சாரல் மட்டுமே விழுந்தது.. பின் கோவில் உள்ளே வகுப்பு நடந்த போது கன மழை பெய்தது.. வகுப்பு முடிந்து வெளியே வந்த உடன் மழை நின்றது.. மீண்டும் பயிற்சி 30 நிமிடங்கள் தொடர்ந்த நிலையில் மழை சுத்தமாக நின்று விட்டது.. மீண்டும் வகுப்பு இரண்டாம் முறையாக கூடிய போது கன மழை பெய்தது.. வகுப்பும் பயிற்சியும் முடிந்த உடன் சற்று கன மழை பெய்தது.. சிறிது நேரம் மழை தாழ்ந்த உடன் அன்பர்கள் கலைந்து சென்றனர்.. அவர்கள் வீடு சேரும் வரை கன மழை இல்லை.. பின் தொடர்ந்த கன மழையில் குன்றத்தூரே நீரில் மூழ்கியது.. ஒரு மணி நேர தாமத மழையால் அன்பர்கள் பத்திரமாக வீடு போய் சேர முடிந்தது.. எந்த நிலையிலும் அவர்கள் மழையை கட்டுப் படுத்த, மனதளவில் நினைக்க வில்லை என்பது மிக முக்கியமானது.. விழிப்பு நிலையில் இருந்த அவர்கள் அண்ட பேரறிவோடு தொடர்பு கொண்டதால் வேண்டியவற்றை வேண்டிய வண்ணம் அண்ட அறிவே பார்த்துக் கொண்டது... பயிற்சிக்கு முன் இரண்டு நாட்கள் முன்பாக அய்யா மழை, பயிற்சியின் சமயம் நிற்க நீங்கள் ஏதாவது பிரார்த்தனை பண்ண வேண்டும் என அன்பர்கள் வேண்டிக் கொண்டனர்.. நான் முற்றிலுமாக மறுத்து விட்டேன்.. நமது விழிப்பு நிலையால் அண்ட அறிவே அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்றேன்.. அதே போலவே அன்பர்களின் கூட்டு விழிப்பு நிலையால் எல்லாமே சிறப்பாக, பாதுகாப்பாக நடந்தது... விழிப்பு நிலையில் அண்ட பேரறிவு செய்யும் அனைத்து சீரான காரியங்களை கனல் பக்கம் சாயாத, வெளிச்சம் பக்கம் சாய்ந்த மனம் காரியங்களை கெடுத்து விடும் என்பது முற்றிலும் உண்மை... அகநான் மூலம் ஒரு காரியத்தை செய்ய முடியுமா ?.. அதன் மூலம் மட்டுமே ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும்... அகநானாய் மாறுவது என்பதே மர்ம யோகத்தில் முதல் அடிப்படை தகுதி.. பேரறிவுடனும் பேராற்றலுடனும் சிவகலப்பிலே கலந்து நிறை நிலை மனிதன் ஆவது முடிவானது...

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஆறு ( 15-11-15)

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஆறு ( 15-11-15)
***************************************************************************
வானிலை மைய எச்சரிக்கையையும், தொடர் மழையையும், பொருட்படுத்தாமல் பல பகுதிகளிலிருந்து அன்பர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.. சில வழிமுறைகள் கேட்டு அறிந்த பின் பயிற்சியை தொடங்கினர்... மலை கோவிலில் கந்த சஷ்டி பாடல் எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக ஒலிபெருக்கியின் மூலம் ஒலித்துக் கொண்டு இருந்தது.. ஒருவர்கொருவர் பேசிக் கொள்வதற்கே முடியாத அளவிற்கு பாடல் ஒலி மிக அதிகமாக இருந்தது.. இந்த நிலையில் மழையின் வேகமும் குறைந்து, குற்றால சாரல் போல் விழுந்த நிலையில் பயிற்சியின் நெறி முறை பிரகாரம் மலை ஏறி பயின்றனர்... ஒருவர் கூட தவறாமல் எல்லோருமே தன் தோன்றா நிலையில் தானும் தன் தேக உணர்வு மட்டுமே அனுபவப் படுவது போல் , பயின்றது மிகவும் வியப்பு அளித்தது... தங்களுடைய முந்தைய பயிற்சியில் தீவிரமாக பயின்று தேறிய நிலையை இது சுட்டி காட்டியது... படிகளில் நிதானமாகவும் மிகுந்த விழிப்போடும் நடந்த விதம் அவர்கள் தன்னில் தானாய் எண்ண ஆதிக்கங்களில் சிக்காத நிலையில் முக பாவனை எப்படி இருக்குமோ அப்படியான மிக பாவனையில் இருந்து பயின்றார்கள்.. இது மிகவும் உற்சாகத்தை அளித்தது.. பயிற்சியின் நடுவில் 20 நிமிடமும் பயிற்சியின் கடைசியில் 40 நிமிடமும் சற்று கன மழைகாரணமாக கோவில் உள்ளே வகுப்பு நடை பெற்றது... அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்கள் எடுத்து சொல்லப் பட்டன.. 7 & 8 வது வார புது பயிற்சிக்கு தங்களை ஆயத்தப் படுத்த இந்த இரண்டு வாரங்கள் தீவிர பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லப் பட்டது...

7 & 8 வது வார பயிற்சி என்னவாக இருக்கும் என்பதை பற்றி துளியும் சொல்லவில்லை.. யாரும் கேட்க வில்லை.. காரணம் அதை தெரிந்தால் மனம் அதற்கு தாண்டி விடும் என்பதை தங்கள் விழிப்பு நிலையால் நன்கு அறிந்து இருந்தது அவர்களின் பக்குவ நிலையை எடுத்துக் காட்டியது... கேள்விகள் மறைய தொடங்கி தன்னில் தானாய் இருப்பதில் ஒரு அற்புத நிறைவு அன்பர்கள் அனுபவப் படுவதையே இது காட்டியது... உணர்வு மயமாய் அன்பர்கள் படியேறி பயின்ற போது ஒரு இனம் தெரியாத முன்னேற்றமான மாற்றம் அவர்களிடம் தென்பட்டது பயிற்சியில் அவர்கள் கொண்ட ஈடுபாட்டை சுட்டிக் காட்டியது... வகுப்பில் மனம் படுத்து பாட்டில் எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப் படுகிறோம் என்ற குறிப்புகள் நல்ல சிரிப்பலைகளை மட்டும் உருவாக்கியது... பெரும்பாலும் அன்பர்கள் ஒலி பெருக்கியின் பெருத்த சத்தத்தின் தாக்கத்தாலும் மழையின் தாக்கத்தாலும் சிறிது பாதிக்கப் படாமல் பயிற்சியில் தன்னில் தானாய் மூழ்கி பயிற்சியில் முழு நிலையில் இருந்தது தெய்வீகமாக இருந்தது... முருகனின் இறை அருள் அவர்களை நன்கு சூழ்ந்து செயல் பட்டது போல் தெரிந்தது... அடுத்தப் பயிற்சிக்கு தங்களை தயார் படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது திண்ணம்...

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஐந்து

மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஐந்து 
*************************************************************
வள்ளலார் தமிழ் நெறியில் உள்ள நான்கு பயிற்சி நிலைகளை சொல்லுகிறார்,, இது யோக நிலைக்கு மிகவும் பொருந்தும்.. அந்த நான்கு நிலைகளில் ஒவ்வொன்றிலும் உட் பிரிவுகள் உண்டு.. ஆக மொத்த 16 பயிற்சி நிலைகள் உள்ளன... அந்த நான்கு முக்கிய பயிற்சி நிலைகள் 1) சரியை 2) கிரியை 3) யோகம் 4) ஞானம் .. வாசி யோகத்தில் இந்த நிலைகள் என்ன என்ன என கவனிப்போம்..

1) சரியை:-- உடன்பாடு சுவாசம், சுவாச ஒழுங்கு, உணர்வு நிலையில் பொருந்துதல்
2) கிரியை :-- கதி சுவாசம்
3) யோகம் :-- கனல் சுவாசம்
4) ஞானம் :--- கரு நிலை சுவாசம்

நாம் இப்போது மலை ஏறும் பயிற்சியில் சரியை நிலையில் இருக்கிறோம்.. இந்த சரியை நிலை நான்காக பிரிகிறது.. 
1) சரியையில் சரியை
2) சரியையில் கிரியை
3) சரியையில் யோகம்
4) சரியையில் ஞானம்

சரியையில் சரியையில் நாம் சரியான நேரத்தில் திட சிந்தனையோடு தியாகமும் அன்பும் நிறைந்த உள்ளத்தோடு வாழ வேண்டும் என்ற குறிகோள் உடன் வருகின்றோம்.. காலம் தவறாமையும் திட சிந்தனையும் செயலில் இறங்குவதும்
இதன் முக்கிய பங்குகள்..

சரியையில் கிரியையில் மலை ஏறும் பயிற்சியில் உடன் பாடு சுவாசம் மூலம் நமது தோன்றா நிலையை பிடித்து, அண்ட ஆற்றல் வரவினை அதிகப் படுத்துவது...

சரியையில் யோகத்தில் உணர்விலே மனதை பொருத்தி கால அளவினை அதிகப் படுத்துவதின் மூலம் அண்ட ஆற்றல் வரவினை ஒழுங்கு படுத்தி நினைத்த மாத்திரத்தில் தேகத்தின் துணை இல்லாமல் சுவாசத்திலேயே அண்ட ஆற்றலை ஒழுங்கு படுத்தி சுவாச ஒழுங்கினை பெறுவது..

சரியையில் ஞானத்தில் அகநானை அடையாளம் கண்டு அகநானில் செயல் படுவதும், அப்படி அகநானில் செயல் படும் போது அண்ட ஆற்றலே அகநானாய் இருந்து செயல் படுகின்ற உயர்ந்த ஞானத்தை தெளிவை பெறுவது..

சரியையில் சரியை-- திருமண நிலை
சரியையில் கிரியை-- கருவுற்ற நிலை
சரியையில் யோகம் --- குழந்தை பிறந்த நிலை
சரியையில் ஞானம்--- மகனாய் வளர்ந்து வளர்த்தவனையே தாங்கும் நிலை..

தோன்றா நிலையில் கருவுற்ற நிலையில் அகநான் தோன்றியாயிற்று.. அந்த அக நான் வளர்க்கும் விதமாக சரியையில் யோகம் என்ற நிலைக்கு நாம் அடியெடுத்து வைத்து இருக்கிறோம்.. அந்த அக நான் குழந்தைக்கு உணர்வு என்ற உணவு ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.. அன்பும் கடமையும் இரு கண்களாக கொண்டு உணர்வோடு இருந்து 4, 5 &6 வாரங்களில் அகநானை வளர்ப்போம்... இப்பொழுது 5 வது வாரத்தில் ( 15-11-15 அன்று ) அடியெடுத்து வைக்கிறோம் .. மிகவும் கவனமாக பயில வேண்டுகிறோம்...

காலத்தை விரையம் பண்ணாது அக்கரையுடன் பயிலும் போது நாம் அடுத்த நிலையாகிய கிரியையில் காலெடுத்து வைக்க முடியும்... கிரியை நிலைக்கு தங்களை தயாராக்க முனைப்போடு பயிலுமாறு வேண்டுகின்றேன்.. டிசம்பர் மாதம் 27 ந்தேதி கிரியை நிலை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.. அதற்குள் சரியையில் ஞானம் என்ற பயிற்சியை அந்த குன்றத்தூர் முருகன் அருளால் முடித்து யோக குழந்தையை, முருகனாய், நம்மில் காண விழைவோம்...

Saturday, 7 November 2015

மலை ஏற்ற அனுபவங்கள் -- இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்

மலை ஏற்ற அனுபவங்கள் 
****************************************
இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்
அற்புதத்தை அற்பமாக்கி விட்டதால் உலகம் என்றும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.. இன்றைய சூழ்நிலையில் அதிகம் தடுமாறுகிறது.. அற்புதத்திற்கு வரையறுக்க முடியாத அண்ட ஆற்றலும் அதன் எல்லையில்லா தனி பெருங்கருணையும் இன்று மனித குலம் மிக அற்பமாக நினைப்பதை தான் சித்தர்கள் நெஞ்சு பொறுக்குவதில்லையே என புலம்பினர்... அந்த அற்புதத்தை அற்புதமாக நினைக்கும் தருணம் மனிதன் மிக பெரிய அற்புதம் செய்யும் வல்லமை அடைகிறான் என்ற ஒரு மிக சாதாரண உண்மையை அறிந்து கொள்ள முடியாது இருக்கிறான்... அறிவு நிலையாகிய ஆகாயமும் அதன் ஆற்றலையும் என்ன சொன்னாலும் உளமாற மனிதன் நம்பத் தயாராக இல்லை.. நிஜத்தை நம்பிக்கையாகவே வைத்துக் கொண்டு நடைமுறைக்கு வராமல் சில மாயை கோட்பாடுகளை அதை சுற்றி புனைந்து நிஜத்தை முற்றிலும் மறைத்தே விட்டார்கள்.. அந்த மறைப்பிற்கு பின்னால் இருக்கும் நிசத்தை உண்மையை நொடியில் கண்டு அறிந்து ஒவ்வொரு நொடியும், அந்த உண்மையோடு ஒவ்வொரு மலை படி ஏறும் போது ஒவ்வொரு அடியும் வைக்கும் போது, அது தெய்வீகமாக மாறுகிறது.. தெய்வீகத்தை இதுவரை துளியும் அனுபவப் படாத மனித குலம் அந்த அண்ட ஆற்றலால் இந்த தேகம் இயங்குகிறது என்பதை உணரும் போது, ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு அடியும் ஒரு இனம் தெரியாதஉணர்வு தோன்றுகிறது... அந்த உணர்வு வேறு ஒன்றும் இல்லை.. எல்லையில்லா அகண்டகார பெருவெளியில் அங்கு இங்கு என குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்துள்ள புனித பரிசுத்த அண்ட ஆற்றல், தேகத்தில் ஊடுருவும் போது தேக சக்தியான கனலாய் மாறும் மாற்றம் தான் அது.. அப்படி பட்ட உணர்வினை நாம் உணவு உண்ணும் போது எவ்வளவு இழிவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது நாமே நமக்கு தெரிந்த ஒன்றே.. ஒவ்வொரு தொழிலாளியும் தன் தேக உழைப்பு ஒரு தெய்வீக பேர் இயக்கம் என்பதை அறியாது வேலை செய்கிறார்..

நொடிக்கு நொடி மறக்காமல் ஒவ்வொரு படியும் ஏறும் போது அந்த தெய்வீக பேர் இயக்கம் செயல் படுகிறது என்ற உணர்வோடு செல்ல செல்ல என்ன நிகழ்கிறது என்பதை அனுபவப் படும் அன்பர்கள் தான் சொல்ல வேண்டும்... காலிலே தேகத்திலே உள்ள உணர்வோடு மனம் இணைந்து படி ஏறும் போது தோன்றா நிலை அனுபவப் படுவது மட்டும் அல்ல, தோன்றாநிலை வலு படுவதையும் உணரலாம்.. அதனால் அதிக அண்ட ஆற்றல் வரவின் காரணமாக படிகளில் ஏறும் போது ஒரு சுலப தன்மையை மேலும் மேலும் உணரும் போது வியப்பினை தரும்..

அண்ட ஆற்றலின் அதிக வரவால் படிகளே நம்மை தாங்கி தாங்கி ஏற்றிச் செல்லுகிறதோ என சந்தேகிக்கும் அளவிற்கு நம் நிலைமை மாறலாம்.. அப்படி அனுபவப் பட்டதால் தான் படி பூஜையில் ஒவ்வொரு படிக்கும் சந்தனம் குங்குமம் 
கற்பூரம் வைத்து வழிபட்டனர்.. இழந்து போன அந்த அனுபவத்தை நாமாவது இரண்டு மூன்று வாரங்களில் பெறுவோமாக.. அதனை அந்த சத்தியத்தை உணர்ந்து நடப்பதால் இதுவும் நிச்சயம் நமக்கு சாத்தியமாகும்...

நிதானமாக ஆரம்பத்தில் படியேற வேண்டும்.. முதல் மூன்று வாரங்கள் பயின்ற அன்பர்கள் தோன்றா நிலை அனுபவத்தோடு படியேற வேண்டும்.. ஒவ்வொரு படியும் உணர்வினை தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.. எந்த படியையும் உணர்வின்றி மனதால் வேகமாக கடந்து போகக் கூடாது..அப்படி படிகளில் கடக்கும் போது பெரு மூச்சு என்ற இளைப்பு வந்தால் சற்று நின்றோ உட்கார்ந்தோ உடன் பாடு சுவாசத்தில் பயில வேண்டும்.. மூன்று வாரங்களில் முறையோடு அக்கரையோடு பயின்றவர்களுக்கு அப்படி பெருமூச்சு வர சந்தர்ப்பம் இல்லை... அப்படி வந்தால் தாங்கள் பயிற்சியில் பின் தங்கிய நிலையை கருத்தில் கொண்டு தீவிர பயிற்சியை இனி மேலாவது வரும் நாட்களில் மேற் கொள்ள வேண்டும்...

4,5&6 வாரங்கள் உணர்வு வாரங்களாக பயின்றால் தான் அடுத்து 7வது 8வது வாரத்தில் மூன்றாம் கட்ட பயிற்சி சுலபமாக கைகூடும்.. மிக சிக்கலான மூன்றாம் கட்ட நான்காம் பயிற்சியின் தன்மையை மனதில் கொண்டு மிகுந்த சுய ஒழுக்கத்தோடும் சுய சிந்தனையோடும் பயிலுவது அன்பர்களின் பொறுப்பு..உடம்பினுள் உரு பொருள் கண்டேன், உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டுள்ளான், என்ற திருமூலர் வாக்குப் படி, உடம்பினுள் புகுந்து இறை வாழும் கோவிலில் நுழையும் இந்த அரிய பயிற்சி செய்யும் போது வெளியே நம் நடவடிக்கைகளை சுத்தமாக குறைத்துக் கொள்வது மிகுந்த பயன் அளிக்கும்.. நிகழ் கால தெய்வமாகிய அண்ட ஆற்றலை விட்டு விட்டு கடந்த கால எண்ண அலைகளின் ஆதிக்கத்தில் நாம் நம்மை இழப்பது, நம்மை நாமே வருத்திக் கொள்வதாகும்... ஆகவே பேச்சை முடிந்த மட்டும் அதிகப் பட்சம் குறைத்துக் கொண்டு, நிகழ் கால இறையாகிய அண்ட ஆற்றலோடு ஒன்றித்து பயின்று பெருத்த ஆன்ம இலாபம் அடைவோமாக...

மலை ஏற்ற அனுபவங்கள் -- இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி

மலை ஏற்ற அனுபவங்கள் 
****************************************
இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி
அன்பர்கள் மூன்று ஞாயிற்று கிழமைகளில் மலை ஏற்றம் பயின்று, தொடர்ந்து மற்ற நாட்களிலும் வீட்டு மாடி படிகளில் ஏறியோ அல்லது மைதானத்தில் ஓடியோ பயிலும் போது பெரும் சுவாசம் என்ற மூச்சு இளைப்பில் மனம் தன் செயற்ற தன்மையில் எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையினை அனுபவப் பட்டீர்கள்.. அந்த எண்ண ஆதிக்கங்கள் இல்லாத நிலையில் தங்கள் மனதின் எல்லைக்கு அப்பால் மனம் அறியாத வண்ணம் அண்ட ஆற்றலின் அதிக வரவால் கடினமாக வேகமாக மலை அல்லது படியேறியும் மூச்சு இளைப்பு வெகுவாக குறைந்து போய் இருக்கிறது என சில நண்பர்கள் சொன்னார்கள்.. இதை தான் எதிர் பார்க்கப் பட்டது.. இது மிகவும் நல்லது.. நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.. இது தோன்றாநிலையில் மட்டுமே அண்ட ஆற்றல் வரவு அதிகமானதின் அடையாளம்.. தோன்றா நிலையில் பெறப் படும் அண்ட ஆற்றல் காரியப் பட்ட செயல் பாடுகளில் மட்டுமே வெளிப் படும்.. அதனை காண மனதால் ஒரு போதும் முடியாது.. ஊக்கமும் உற்சாகமும் செயல் பாட்டின் திறனில் மேன்பட்ட நிலைதான் அதிக அண்ட ஆற்றலின் வரவின் வெளிப்பாடு.. அதனை காண முடியவில்லை என எவராவது புலம்பினால் மர்ம யோகத்திற்கு அவர்கள் தகுதி அற்றவர்கள்.. மர்மத்தை மர்மமாகவே ஏற்றுக் கொண்டு பயின்றால் மட்டுமே பெருத்த ஆதாயம் காண முடியும்.. கடவுளும் ஒரு மர்மமே.. ஒரு மறைவான அருவ நிலையில் உள்ளவரே.. அவரை மனதால் அறிய முயன்று முயன்று இன்று மனித குலம் அவரை விட்டு விலகி விலகி நிற்கிறது..

மர்ம நிலையிலும் அருவ நிலையிலும் இருக்க வேண்டிய பேரறிவு, மன கற்பனையின் குளறுபடியால் திரிபு களங்கம் ஏற்பட்டு இன்றைய சூழ்நிலையில் அந்த பேரறிவு சரியான விதத்தில் செயல் படாமல் உள்ளது.. அடியாளம் காண்பிப்பது அவசியம் ஆயினும் அந்த உருவநிலை அடையாளம் பெரிய அளவிலே ஆதிக்கம் செலுத்தி அருவ நிலையாகிய தோன்றா நிலையினை அழித்து விட்டதால் தான் இன்று உலகில் ஆற்றல் குறைபாட்டால் மனித குலம் மகிழ்ச்சியை இழந்து, அந்த மகிழ்ச்சியை திரும்ப பெற தகாத வழியை தேர்ந்து எடுக்கிறது.. தகாத வழியில் மகிழ்ச்சியை பெற என்றுமே முடியாதது.. ஆகவே மறைவு நிலையான மர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது.. புரியாத மர்மத்தை புரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது.. இதில் மனதால் நுழைய துடிப்பவர்கள் எவரும் கரை ஏறவே மாட்டார்கள்... இன்றைய ஒட்டு மொத்த மதங்களும் ஆன்மீகங்களும் மனதால் நுழைய துடித்து பல தடவை தோற்று போயும் பாடங்களை எதுவும் கற்றுக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அதே தவறு செய்து கொண்டு இருக்கிறது.. அந்த தவறை நீக்கி தோன்றா நிலையை மனதால் ஏற்றுக் கொள்ள பயிலுவதற்கு தான் இந்த மலை ஏற்றப் பயிற்சி..

தோன்றா நிலையை விழிப்பு நிலையால் உணரும் அன்பர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்ல வேண்டும்.. உணர்வு என்றாலே விழிப்பு நிலை அது தோன்றா நிலையில் மட்டுமே உணரப் படும்... நினைப்பு என்றாலே மனத்தின் செயல் பாடு.. அது தோன்றும் நிலையாலே மட்டுமே நடக்கும்.. தோன்றா நிலையில் ஆற்றல் வரவும், தோன்றும் நிலையில் ஆற்றல் செலவும் நடை பெறுவது அன்பர்கள் நன்கு அறிந்ததே.. மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நினைப்பு சதா காலமும் உணர்வினை கெடுத்துக் கொண்டே, அல்லது சீரழித்துக்கொண்டே இருக்கிறது என்பது தான்.. உணர்வினை பிடித்துக் கொள்வதின் மூலம் நாம் தோன்றா நிலையில் நீடிக்க முடியும்.. இப்பொழுது தோன்றா நிலையை, உடன் பாடு சுவாச மூலம் அடையாளம் தெரிந்து உணர்ந்து கொண்ட நாம், அதில் நீடிக்க உணர்வு மயமாக இருக்க முயல வேண்டும்... இது மிக கடினமான பயிற்சி.. முந்தைய பயிற்சி வேகத்தில் நடந்தது.. இப்பொழுது மிக நிதானமாக நடக்க வேண்டிய ஒன்று...

இனி வரும் மூன்று வாரங்களில் அதாவது 4, 5, 6, வது வார ஞாயிற்றுக்கிழமைகளில் பயிலக்கூடிய பயிற்சி மிக முக்கியமானது.. இந்த மூன்று வாரங்கள் உணர்வு வாரங்கள்.. கடந்த கால அனுபவ இறப்பு தன்மையை ஒழித்து நிகழ்கால புத்துணர்ச்சியும் வாழ்வும் பெற, பெரிய மாற்றத்திற்கான பயிற்சி.. விழிப்பு நிலை ஏற்றத்திற்கான, வலுவடைவதற்கான பயிற்சி.. வரும் ஞாயிறு முதல் மூன்று வாரங்கள் அன்பர்கள் மிக நிதானமாக மலை ஏற வேண்டும்.. அண்ட ஆற்றல் தேக ஆற்றலான கனலாக மாறும் போது ஏற்படுகின்ற இரசாயன மாற்றம் தான் உணர்வு.. மலையேறும் அன்பர்கள் இந்த இரசாயன மாற்றமான உணர்வில் மனம் பொருந்தும் போது, மனம் வெளிச்சத்தை விட்டு விலகி கனலை நோக்கி நகருகிறது.. கனல் பெருக்கத்திற்கு அது மிக உதவுகிறது.. இரசாயன மாற்றம் விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற, அந்த உணர்வில் மனம் பொருந்தும் போது, நிகழ்கிறது.. உணர்வோடு மனம்.. இது தாரக மந்திரம்.. என்றும் மறக்கக் கூடாது.. உணர்வோடு மனம் கனல் என்ற அக்கரை சேர்க்கும்.. அந்த அக்கரை, வெளிச்சம் என்ற இக்கரையான அக கறையை, அக அழுக்கை நீக்கும்.. இதில் புரித்தலில் சிக்கல் இருந்தால் கேள்வி எழுப்பலாம்..

வெளிச்சமான மனதை தான் எண்ண ஆதிக்கங்களோடு கூடிய வழக்கமான மனம் என்று சொல்லிகொண்டு வருகிறோம்.. கனலோடு பொருந்திய மனம் ஒன்று மட்டுமே சுத்த கனலான விழிப்பு நிலையோடு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.. உணர்வோடு மனம் பொருந்தும் போது கனலோடு தொடர்பு கொள்வதால் இந்த மனம் அகநான் என்ற மனமாக மாறி தெய்வீக தொடர்புடன் இருக்கிறது.. இந்த தெய்வீக அக நான் வேலையை வேல் ஆக மாற்றும் வித்தையை செய்கிறது.. ஆனால் வேல் ஒன்றை ஏவும் வேலவன் அதாவது முருகன் இன்னும் உதிக்க வில்லை.. வேலவன் தோற்றம் அடுத்தக் கட்ட பயிற்சி.. தற்போது குழப்பிக் கொள்ள வேண்டாம்.. வேலவனுக்கு அதாவது முருகனுக்கு முன்பே வேல் தோன்றியது என்பது புராணம்.. தற்போது அகநானாகிய வேல் தோன்ற உணர்வு ஒன்றிலே மனம் பொருந்த வேண்டிய அவசியம் ஆகிறது... எண்ண ஆதிக்கங்கள் நிறைந்த ஒரு வேலை ஒன்றினை கனல் நிறைந்த தோன்றா நிலையான, வேல் ஆக வடிவெடுத்து நாம் புறத்தே திறம் பட இயங்க உணர்வு மயமாய் மனம் ஆக வேண்டும்.. புறத்தே செயல் பாட்டின் திறனை மேலும் மேலும் பெருக்க செயல் பாடு வீரர்களாய் மாறவும், நிறை நிலை மனிதனாய் மாறவும், அடுத்த கட்ட பயிற்சிகளை தொடர்வதற்கு நம்மை தயார் படுத்த, தற்போது உணர்வோடு மனம் பொருந்த, மலை ஏற்றும் பயிற்சியை வரும் மூன்று வாரங்கள் மிகுந்த உணர்வோடு பயில்வோமாக.. ஞாயிற்று கிழமை மற்றும் அல்லாது மற்ற வார நாட்களில் பயில்வது மிக அவசியம் ஆகிறது.. வாழும் நெறியான சிவகலப்பை நோக்கி நகர்ந்து நிறை நிலை மனிதனாக மாறும் நோக்கம் ஒன்றையே குறிக் கோளாக கொள்வோமாக...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி நான்கு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி நான்கு (5-11-15) 
****************************************************************** ***************************
இயல் ஆற்றல்--- நெருப்பாற்றல்
நமது மறையோகமாகிய மர்மயோகத்தில் ஆற்றல் பெரும் விதமே தனி விதம்.. அன்பின் அடிப்படையில் இயங்கும் மர்மயோகம் அவ்வாறு தனி விதமாக இருக்க வேண்டியதிருக்கிறது.. ஒரு சுவாசத்தில் சூரிய கலையில் பெற்ற ஆற்றலை சந்திர கலையில் வானத்தில் ஒரு பெரிய மின்னலை உருவாக்கலாம்.. இது நெருப்பாற்றல் பெற்ற நிலையில் நொடியில் அடைந்து சாதிக்கக் கூடியது... அந்த நொடி என்ற சொல்லில் தான் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.. மொத்த மர்ம யோகத்தின் சாரமும் உள்ளது.. இந்த நிலையில் உள்ளவர்களோடு சாதாரணமானவர்கள் எப்படி இணைந்து செயலாற்ற முடியாது... சாதாரணமானவர்களோடு இணைய முடியாதவர்கள் எப்படி அன்பை செலுத்த முடியும்.. சர்வ வல்லமை வாய்ந்த இறைவன் இதனால் தான் அன்பை நேரடியாக உடனே செலுத்த முடியாமல் போய் விடுகிறானோ ? அன்பினை செலுத்த என்றும் இயல்பாய் இருக்க, இயல்பான ஆற்றலுக்கு, திரும்ப மாறும் தகுதிக்கு வர வேண்டும்.. மீண்டும் இயல் ஆற்றல் பெற்று இயல்பாக இருந்தால் மட்டுமே ஒருவன் தனது அன்பை வெளிபடுத்த முடியும்..

அன்றைய புராணத்தில் அகிலத்தையே ஆளும் இறைவன் பிச்சாண்டியாய் உலகில் பிச்சை எடுத்தாராம்.. ஒரு ஏழையின் கூரையிலிருந்து தங்க நாணயங்களை கொட்டி தந்த சங்கரர் பிச்சை எடுக்கும் பொழுது தான் ஏழையை சந்தித்து நெல்லிக்கனியை பிச்சையாக பெற்றார்.. பட்டினத்தாரும் ஆதி சங்கரரும் என்னதான் மகான் நிலைக்கு உயர்ந்தாலும் தாய் இறந்த உடன் பதறி அடித்துக் கொண்டு இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள்.. இறைவனுடைய அவதாரங்களும் அன்பின் வெளிபாடே.. ஆனால் இன்றைய வசதிப் படைத்த குருமார்களை, சாதாரணமானவர்கள் பார்ப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது... அதற்கு அன்பின் குறைபாடே காரணம்.. அன்பு கலவாத எந்த யோகமும் அர்த்தமற்றது..

மர்ம யோகிகள் தாங்கள் பெற்ற அல்லது பெறப்போகும் அளவற்ற ஆற்றலை எந்த நிலையிலும் வெளிக்காட்டாது மறைத்து வைத்தே இருப்பார்கள்.. வானத்தில் ஒரு சுவாசத்தில் மின்னலை உருவாக்கினாலும் அது எவரால் உருவாக்கப் பட்டது என எவரும் அறியாத வண்ணம் தங்களை மறைத்துக் கொள்வதால் அவர்கள் மர்மயோகியர் ஆகிறார்கள்.. பேரும் புகழும் பிறரிடம் காட்டி கையேந்தி பெறவேண்டியது எதுவும் அவசியம் இல்லை.. தங்கள் தவ ஆற்றல் மூலம் தங்களை தனிமை படுத்த ஒருபோதும் விரும்புவே மாட்டார்கள்.... ஆனால் அளவற்ற தனது அன்பின் வெளிபாட்டால் எல்லோரையும் தன்னிடம் இணைத்து கொள்வார்கள்.. இதிலிருந்து தெரிய வேண்டியது முக்கியமான செய்தி ஒன்று உண்டு...

அண்ட ஆற்றல் பெறும் பயிற்சியை செய்பவர்கள் அதில் பலவகையான வினோதமான அனுபவங்களை பெறுகிறார்கள்.. பலரின் வருத்தம் என்ன வென்றால் தொடர்ந்து அதில் இருக்க முடிவதில்லை என்பது தான்.. தொடர்ந்து இருக்க முடியாத பட்சத்தில் தாங்கள் யதார்த்த நிலையில் இயல்பான நிலையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைய வேண்டும்... இயல்பு நிலையில் இருந்து கொண்டு நினைத்த மாத்திரத்தில் அளவற்ற அண்ட ஆற்றலை பெறும் திறனை பெற வேண்டும்.. வலுவுக்கும் திறனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. வலு ( strength ) என்பது நிரந்தரமாக இருந்தாலும், ஒரு வரையறைக்கு மேல் செல்ல முடியாது.. ஆனால் திறன் ( efficiency ) என்பது இயல்பான நிலையில் இருந்தாலும் வலுவின் எல்லைக்கு அப்பால் சென்று அளவற்ற நிலையில் விரிந்து விரிந்து செல்லக் கூடியது.. மற்றைய யோக முறைகள் வலுவை பெருக்கி பெருக்கி ஒரு மனிதனை தனிமை படுத்துவது.. ஆனால் எதிலும் சிக்கி கொள்ளாமல் விரிந்து விரிந்து ஓங்கிய நிலைக்கு செல்லும் திறனை வளர்க்கும் நெறிதான் மர்ம யோகம்.. அதனால் தான் இதில் அவ்வளவு குறுகிய காலத்தில் பெருத்த ஆன்ம இலாபம் கிடைக்கிறது..

பயிற்சியின் காலத்தில் பயிற்சியின் சமயம் மட்டுமே தீவிரம் காட்டுதல் மூலம் திறனை வளர்த்து பௌதிக கலப்பிலிருந்து முடிவான அருள் கலப்பாகிய சிவ கலப்பிற்கு நாம் செல்ல முடியும்... தீவிரமும் திறனும் கலப்பின் மேன்மையும் ஒன்றுக்கு ஒன்று பிரிக்கமுடியாத தொடர்பு உண்டு... முக்கிய இரகசியம் என்னவென்றால் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் வாய்த்த நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே பயில வேண்டும்.. மற்ற 22 மணி நேரமும் இயல்பான நிலையில் இருக்க வேண்டும்..

XXX ஒரு கால கட்டத்தில் பயிற்சியை காட்டிலும் இயல்பாய் இருப்பது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்... அந்த நேரத்தில் விழிப்பு நிலை தன்னை பலத்திக் கொண்டு பயிற்சியின் சமயம் திறனை பெருக்கி கொள்ள ஆயத்தமாகும் ... இயல்பு நிலை ஒன்றே திறனை வளர்க்க உதவும் XXX..

மற்றபடி இயல்பு நிலையை கெடுத்துக் கொண்டு தன் உடல் முழுவதும் கரையான் புற்று சூழ தவம் செய்பவர்கள் வலு அடைவார்களே தவிர திறனை அடையமாட்டார்கள்... இயல் நிலையை தவற விட்டவர்கள் ஆன்மீகத்தில் தோற்றே போய் விட்டார்கள்... ஆரம்ப சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் போது மட்டுமே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.. அது இயல் நிலையிலே செய்யப் படுவதால் இயல் நிலையை பாதிக்காது... பின்னால் வரும் மாற்றம் தரக்கூடிய நிலைக்கு வரும் போது கால அளவிலே பயில வேண்டியது அவசியமாகிறது...

மலையேறும் பயிலும் அன்பர்கள் தோன்றா நிலையை உணர்ந்து விட்டால் அண்ட ஆற்றல் சற்று அதிகமாக வரத் தொடங்கும்.. அதுவும் பற்றாது.. மேலும் மேலும் அதிகப் படுத்துவதற்கான பயிற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் போது, பழையவற்றில் பற்று வைக்கக் கூடாது.. காரணம் மேல் பயிற்சியிலேயே கீழ் பயிற்சியின் விளைவுகள் 
தொடர்ந்தே வரும்.. மேல் சொன்னவற்றை நன்கு உணர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி மூன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி மூன்று
************************************************************************************
அக நானே செய்யும் அடுத்த கட்ட அற்புத பயிற்சி
ஒவ்வொரு செயல் பாடும் ஏதோ ஒரு உந்தலால், இனம் தெரியாத தவிப்பால், நடக்கிறது.. அந்த உந்தல் தவிப்பு சில நேரங்களில் மட்டுமே சற்று தெளிவாக தெரியும்.. பெரும்பாலான மற்ற நேரங்களில் அந்த தவிப்பும் உந்தலும் தனது தோன்றத்தை தெளிவாக காட்டாது.. அதனால் இனம் தெரியாத ஏதோ ஒரு தவிப்பில் ஏதோ ஒரு காரியம் நடைபெறும்.. பெரும் பாலான கம்பெனி மீட்டிங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் எந்த காரணத்திற்காக ஏற்பாடு செய்யப் பட்டதோ அதிலிருந்து பெரும் பாலும் மாறுபட்டே நடக்கும்.... திசை மாறி போன அவைகள் பிரச்சனைகளை தீர்க்காமல் ஆணவ சம்பந்தப் பட்ட பிரச்சனைகளில் சிக்கி வேறு புதிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டே போகும்.. அதற்கு முக்கிய காரணம் ஆதிக்க எண்ணம் கொண்ட மனம் பிளவு பட்டு அந்த அந்த பிளவுக்கு ஏற்றால் போல் புது புது காரணங்களை தேடி கண்டு பிடித்து, அற்ப காரணங்களை எல்லாம் பூதகரமாக ஆக்கி விடும்... மகா பாரதத்தில் திரௌபதியின் அந்த சிரிப்பு ஒன்று தான் மற்றைய பிரச்சனைகளை சின்னதாக்கி அது பூதகரமாக ஆகி, பாரத போருக்கு வழி வகுத்தது...

எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையில் வெளிபடும் அககுருவின் துணையோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது, அது புது பிரச்சனைகளை எழ செய்யாமல் பழைய பிரச்சனைகளையும் தீர்த்து விடும்... உருவாவதற்கும் வெளிப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. இல்லாதது ஒன்று தோற்றத்திற்கு வந்தால் அது கருவாகி உருவாகி வந்தது எனலாம்.. ஏற்கனவே உள்ள ஒன்று மறைக்கப் பட்டதின் விளைவாக தோற்றத்திற்கு வராத ஒன்று, அந்த மறைப்பு நீங்கிய உடன் அதன் தோற்றம் காணப் படுவதே வெளிப்படுவது..

வாசியோகப் பயிற்சியே அகநான் ஆகிய அக குருவை வெளிப் படுத்துவதே.. இதில் அகநான் அககுரு என சுட்டி காட்டப் படும் பொருளாக ஒன்று இருந்தால் மட்டுமே மனம் ஏற்றுக் கொள்ளும்.. அதுவே நாம் என்ற பெரும் உண்மையை சொன்னால், மனம் ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது... ஒன்று சேர ஒருமை பட மனம் ஒரு போதும் சம்மதம் தெரிவிக்காது.... அதனால் தான் மனம் அற்ற நிலையை உணரவேண்டிய அவசியம் ஆகிறது... அதில் மட்டுமே அக நான் வெளிபடுகிறது... ஒரு வேலையை மனதாலும் செய்யலாம்.. அக நான் மூலமும் செய்யலாம்.. ஒரு காரியத்தை மனதால் செய்தால் அது வேலை.. அதே காரியத்தை அகநான் மூலம் செய்தால் அது வேல்.. சற்று புரிவதற்கு கடினமாக இருக்கலாம்.. தெளிவு தரும் தமிழ் நிலை ஒன்றே இதற்கு சரியான பதில் கூற முடியும்..

வேலையை பிரித்தால் வேல்+ஐ எனலாம்.. வேல் என்பதில் வேந்தனாகிய இறைவன் லயமாகி செய்யும் ஒன்று.. அது தெய்வீகமானது.. அதில் ஐ என்ற பஞ்ச பூதங்களில் ஒன்றான மனம் ஐக்கியமாகி மிக அதிக அளவில் பங்கு கொள்ளும் போது, அந்த இறை செயலில் பிரிவினைகள்,களங்கங்கள் கலந்து குறைபட்டு போகிறது... எந்த வேலையும் அது கடவுளையே பிரார்த்தனை பண்ணக்கூடிய வேலையாக இருந்தாலும், மனதால் செய்யப் படுவதால், சத் விசாரத்தில் நன்கு ஆராயும் போது அதில் களங்கம் இருக்கவே செய்யும்.... அதே காரியத்தை அகநான் மூலம் செய்யும் போது அதன் தன்மை புனிதமானதாகவும் மிக சரியாகவும் இருக்கும்... அதே நேரத்தில் அகநான் உணர்வு வளரவும் செய்யும்.. இதனால் செயல் பாட்டில் துல்லிதம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும்.. அகநான் உணர்வு தோன்றும் பொழுது அது நம்மில் மகன் தோன்றுகின்றான்.. ஒரு காரியத்தை அகநானே புறத்தே செய்யும் பொழுது முருகன் வெளிப்படுகிறான்.. இதனை முன் பதிவுகளில் பார்க்கலாம்...

முருகன் என்றால் அழகு என்பர்.. முருக நிலையிலே செய்யப் படும் வேலை எல்லாம் வேலை அல்ல.. அது வேல் நிலை.. அதாவது வேந்தனே செய்யும் காரியம்.. ஆகவே அதில் முழுமையான அழகு தன்மை நிறைந்து இருக்கும்.. முருகன் கையில் வேல்.. ஆம் முருக நிலையிலே செய்யும் அனைத்தும் வெற்றி வேல் ஆக இருக்கும்.. ஏனென்றால் வேல் என்ற வேலையில் எந்த குறை பாடும் இல்லாததால் அது வெற்றி ஒன்றையே தரும்... அது என்றும் வெற்றி வேல் தான்.. மரண தேவனான தோன்றாநிலையில் இருக்கும் சிவனாரின் நெற்றி கண் வழியாக பெரும் கனலாக வரும் முருக சக்தி என்றும் வெற்றியையே தரும்.. அதே போல் மரண நிலைக்கு ஒத்த தோன்றா நிலையில் முருக நிலையில் உள்ள அக நான் வெளிப்பட்டு ஒரு காரியத்தை பண்ணும் போது அது முழுமையான வெற்றியே தரும்.. மலை ஏறும் பயிற்சியில் தோன்றா நிலையில் வெளிப்படும் அக நானால் ஒரு காரியத்தை அன்பர்கள் செய்ய முயலுமாறு வேண்டுகின்றனன்.. அப்படி செய்யும் எந்த ஒர் காரியமும் வெற்றி ஒன்றையே தரும் என்பதை அன்பர்கள் உறுதி பட நம்பலாம்... நிறை நிலை மனிதன் ஆவது அப்படி ஒரு கடினமானது அல்ல.. சேரும் இடம் அறிந்து, இதனை இவன் முடிப்பான் என்று அதனை அவனாகிய அகநானிடம் ஒப்படைக்கும் போது எல்லாம் செயல் கூடும் என்பது நிகழ் கால உண்மை...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி இரண்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி இரண்டு
********************************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி:-- தோன்றா நிலை என்பது அமைதி நிலையா ?
தோன்றா நிலை என்பது அமைதி நிலைதான்.. ஆனால் அமைதி நிலை எல்லாம் தோன்றா நிலை கிடையாது.. தோன்றா நிலை தரும் அமைதிக்கு எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது.. அமைதியை தேடி, சுற்றுலா தலங்கள் கோவில்கள் பிரார்த்தனை தலங்கள், மத சார்புள்ள இடங்கள், மடாலயங்கள், இயற்கை காட்சிகள் நிறைந்த மலை வாசஸ்தலங்கள், சென்று அலைவோர் எத்தனை நாட்கள், அவர்கள் அங்கே அமைதியாக இருக்க முடிகிறது என்பது ஒரு மிக பெரிய கேள்வி குறி... ஐந்தாறு நாட்களிலேயே அவர்களீடம் ஒரு பெரும் தவிப்பு ஏற்பட தொடங்குகிறது.. ஏதாவது ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்ற தவிப்பு இருப்பதில்லை.. எதையாவது ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்ற தவிப்பு தான் இருக்கும்... ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்பதற்கும், எதையாவது ஒன்றை பண்ண வேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... ஏதாவது ஒன்றை பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் மனிதர்கள் தன் நிலை குலைந்து போகிறார்கள்.. நன்றாக நாம் சிந்தித்தால், மனிதர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒன்றை பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்.. இதில் தேவைகள் குறிக்கோள்கள் எதுவும் இருப்பதில்லை.. திசை மாறி போவதே மனித இயல்பாய் இருக்கிறது... அப்படி சூழ்நிலைகளால் தூண்டப் பட்ட அமைதியால், மனிதன் இழந்த இழப்பிற்கு, அளவே இல்லை.. அதனால் தான் புற அமைதியில் எல்லாம் தோன்றா நிலை இல்லை என்பது.. இந்த உண்மை மனித குலத்திற்கு திகைப்பு தருவதாகவும், வியப்பு தருவதாக இருக்கலாம்.. ஆனால் உண்மை என்றும் உண்மை தான்..

ஆனால் தோன்றா நிலையில் உள்ள அமைதி என்பது மிக தெய்வீகமானது.. உண்மையானது.. நிரந்தரமானது.. இந்த தோன்றா நிலையில் உள்ள அமைதி, அண்ட ஆற்றல் வரவுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தி, உணர்வு மயமான பேரின்ப நிலையை ஏற்படுத்தக் கூடியது.. மனம், தான் செயல் படுவதற்காக ஆற்றலை தேடும் இடம், திசை மாறிய, தவறான முயற்சி தான் வெளிச்சத்தை நோக்கி பாய்வது.. அதற்கு வேண்டிய ஆற்றல் தோன்றா நிலையில் உள்ள கனலில் இருப்பதை அறியாது பொறி புலன் வாயிலாக வெளியே வெளிச்சத்தில் பாய்கிறது.. மனம் ஆற்றலை தேடி தன்னுக்குள் மறைந்து இருக்கும் கனலில் ஆற்றல் மறைந்துள்ளது என அறியாமல் இருக்கிறது,,, ஆனால் அந்த கனல் ஆற்றலையே பயன் படுத்திக் கொண்டு, ஆற்றலை வெளியே வெளிச்சத்தில் தேடும் அவல நிலையை மனம் செய்து கொண்டு இருக்கிறது... கடல் நீரிரே வாழும் மீன் தன் அறியாமையால் வாழ்நாள் முழுமைக்கும் நீரை தேடி கொண்டே இருந்ததாம்... நீரை விட்டு வெளியே வர சந்தர்ப்பம் கிடைக்க வில்லையாதலால் கடல் மீனானது நீரை தேடி கொண்டே இருந்தது போல் கனல் இருக்கும் தோன்றா நிலையை மனம் அனுபவப் படவில்லையாதலால், நீரை தேடும் கடல் மீனை போல் கனலால் வாழும் மனம் வெளியே வெளிச்சத்தில் கனலை தேடிக் கொண்டு இருக்கிறது..

எப்பொழுது மனம் வெளிச்சத்திலிருந்து விடுபட்டு, தான் இருக்கும் நிலையே கனல் என்று உணர்ந்து கொள்ளும் போது, அது தேடலை நிறுத்துகிறது... அப்படி தேடலை நிறுத்தும் போது, முதலில் கனலை, விரையம் பண்ணுவதை மனம் நிறுத்துகிறது... மேலும் கனல் பெருக்கம் அடைவதற்கு உதவுகிறது.. ஆற்றல் பெருக்கத்தால் மட்டுமே ஆனந்தம் மேலும் மேலும் கைகூடும் என்ற உண்மையை எப்பொழுதும் மறக்கக் கூடாது... இந்த நிலையில், தோன்றாநிலையில் வெளிச்சம் நீங்கிய, எண்ணம் ஆதிக்கமற்ற மனம் ஆனந்த பரவச உணர்வு அடைகிறது.. அந்த ஆனந்த பரவச உணர்வில் மனம் எந்த தவிப்பும் கொள்வதில்லை.. அந்த உணர்வு நித்தியமானது.. அந்த உள் அமைதியை மனம் பூரணமாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் அதன் தவிப்பு முற்றிலும் நீங்கப் பெற்று, முழுமையான நிறைவினை கனலால் அடைகிறது...

ஆனால் வெளியே சூழ்நிலைகளால் உண்டாக்கப் பட்ட, வெளிச்சத்தில் உருவான, அமைதியால், பூரண நிறைவு கொள்ள முடியாத மனம் சிறிது நேரத்தில், அதற்கு தவிப்பு ஏற்பட்டு கனல் ஆற்றலின் குறைபாடு ஏற்படுவதால், புலன் பொறிகள் வாயிலாக வெளியே செல்ல துடித்து தேடுதலை துவக்கி துன்பம் அடைகிறது.. இதன் மூலம் மனதிற்கு தோன்றா நிலை அவசியமாகிறது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.. மனம் தன் சுய முயற்சியால் தோன்றா நிலைக்கு ஒரு போதும் செல்ல முடியாது.. எப்படி கடல் மீனானது நீரை விட்டு வெளியே வர முடியாதோ, அதே போல் வெளிச்சத்தில் வாழும் மனம் வெளிச்சத்தை விட்டு தோன்றா நிலைக்கு வர இயலாது... வாசியோகம் என்பது, முடியாத அந்த மனதிற்கு தோன்றா நிலைக்கு வர செய்யும் ஒரு உபாயமே..

தேக ஆற்றலை அதிகம் செலவு செய்யும் போது தேகம் தன் ஆற்றலில் குறைபாடு காண்கிறது.. இந்த நிலையில் மனம் இயங்குவதற்கு கூட ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்து போகிறது... குறைவு பட்ட தேக ஆற்றலை ஈடு செய்ய அண்ட பேரறிவு விரைவான அழுத்தமான இளைப்பு போன்ற சுவாசத்தின் மூலம் கனலாக ஆற்றலை தேகத்தில் புகுத்தும் போது, மனம், கனலை நோக்கி திரும்புகிறது.. வெளிச்சம் நீங்கிய அந்த ஓரிரு நிமிடம் மனம் ஒரு இனம் தெரியாத தோன்றா நிலையான கனல் அனுபவத்தை பெறுகிறது..

ஆரம்பத்தில் மலை ஏற்றம் பயிலும் போது அப்படி ஒரு இனம் தெரியாத அனுபவத்தை அனுபவிக்கும் மனம், தொடர்ந்து அது போல் அனுபவிக்கும் போது தோன்றா நிலையையும் அதில் கலக்கும் கனலையும் விரைவில் அடையாளம் தெரிந்து கொண்டு பரவசம் அடைகிறது.. தன் சுய இயல்பு நிலையே, ஆதார நிலையே கனல் என அறிந்து கொண்ட மனம் தேடலை நிறுத்தி உண்மையான நிறைவு கொண்டு அமைதி அடைகிறது.. அந்த அமைதி தான் உண்மையான அமைதி.. மற்ற புற சூழ்நிலைகளால் உண்டான அமைதி பொய்யானது.. அது தோன்றா நிலையை ஒருபோதும் காட்டாது.. கனல் பெருக்கத்திற்கும் உதவாது... அது உயிருக்கும் தேகத்திற்கும் தீமை ஒன்றையே தரும்.. 
 
ஆகவே தான் தோன்றா நிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது... தி என்ற எழுத்து முழுமையாக ( த்+இ ) இருத்தல் எனப்படும்.. தேடுதலை நீக்கிய மனம் தன் இருப்பிடத்தை விட்டு விலகாது, வெளிச்சத்தை நோக்கி நகராமல் தன் இருப்பிடத்தில் முழுமையாக இருத்தல் எனலாம்... அந்த சூழ்நிலையை அமைப்பது எதுவோ அதாவது அமைதியை ஏற்படுத்துவது எதுவோ அது தோன்றா நிலையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.. இதனை அன்பர்கள் நன்கு புரிந்து இருப்பார்கள் என நம்புகின்றேன்.. தோன்றா நிலை ஏற்படுத்தும் அமைதியை பணம் பதவியால் நிச்சயம் தர இயலாது.. அந்த அமைதி ஏற்படுத்தும் நிறைவுக்காக, பணம் பதவிக்கு அலைவது முரண் பட்ட செயல்..

கோடீஸ்வரன் அம்பானிக்கு 600 க்கு மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளனவாம்.. இன்னும் நிறைவு கொள்ளாததால் புது புது மாடல் கார்களுக்கு ஆர்டர்கள் வேறு.. என்றுமே நிறைவு, அமைதி கொள்ளாத நிலைதான் அம்பானிக்கும், அம்பானி போன்றவர்களுக்கும்.. ஆகவே நாம் சேரும் இடம் அறிந்து சேர்ந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டுமே பெற முனைவோமாக...

Saturday, 17 October 2015

மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு

மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு
***************************************************************************
1) பொதுவாக மலை ஏறும் போதும் இறங்கும் போதும், தேகத்தில் செயல் படும் சக்தி, அண்ட ஆற்றல் என்பதை உண்மையாக உணர வேண்டும்...
2) அந்த அண்ட ஆற்றல் உண்மையை மனம் நொடிக்கு நொடி பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..
3) தேகத்திற்கு சக்தியை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் சக்தியை அளிப்பதால் அந்த நிலையில் சுவாசத்தை ஒரு போதும் கவனிக்கக் கூடாது.. கவனிக்க கூடாது என்பது மிக முக்கியம்...
4) ஏறும் போதும் இறங்கும் போது,, தேகத்தில் அனைத்து சக்தியும் அதிக பட்ச செலவு செய்யும் விதமாக மிகுந்த விழிப்பு நிலையோடு பயிற்சியில் வேகம் கொள்ள வேண்டும்.. விழிப்பு நிலையில் மட்டுமே நிதானமும் எச்சரிக்கையும் கைகூட கவனமாக ஏற்றம் இறக்கம் செய்ய வேண்டும்..
5) ஒவ்வொரு தேக அசைவும், அண்ட ஆற்றலால் இயக்கப் படுவதையும், ஆற்றலும் தேகமும் கலக்கும் போது அது உணர்வாக வெளிப் படுவதையும் உணர வேண்டும்..எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்றம் இறக்கம் சமயம் மூச்சை கவனிக்கக் கூடாது.. தேக உணர்வோடு இருக்கவேண்டும்..
6) இதுவரை தேகம் சுவாசத்தின் மூலம் பெற்ற ஆற்றலை மனம் கவர்ந்து வெளிச்சமாக செயல் பட்ட பழக்கத்தாலும் மலை ஏற்ற இறக்க பயிற்சியால் தேகம் அதிக ஆற்றலை செலவு செய்வதை தடுக்கவும் தனக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் போவதை தடுக்கவும், மலை ஏற்றத்தில் மெத்தனம் காட்டும்.. ஆனால் தேக உணர்வோடு பற்றி கொள்ளும் போது ஏற்படும் விழிப்பு தன்மை பயிற்சியில் மனதை வெல்லும் நிலைக்கு செல்ல சற்று வேகம் பயிற்சியில் காட்ட வேண்டும்...
7) அப்படி வேகம் கொண்ட தேகம் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்வதால், அதை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் அதிகமாக வர தொடங்குவதால் பெரும் சுவாசம் அல்லது மூச்சு இளைப்பு வர தொடங்கும்.. இந்த நிலையில் ஏற்றம் இறக்க செயல் பாட்டினை நிறுத்தி விட்டு அமைதியாக நிற்க வேண்டும்.. இடம் கிடைத்தால் அமர்ந்து கொள்ளலாம்.. இந்த நிலையில் இப்படி வரும் பெரும் சுவாச வேகத்தோடு மனதை பொருத்தும் போது, பழக்கமில்லாத சுவாச வேகத்தோடு மனம் பொருந்த முடியாமல் நின்று விடுவது போல் இருக்கும்.. இந்த பொன்னான நேரத்தில் விழிப்பு என்ற அக குரு நம்மில் தோன்றுவதை உணர வேண்டும்.. யார் உணருவது என்ற கேள்வி எழலாம்.. நிச்சயமாக செயல் படாத மனம் இல்லை.. விழிப்பே தான் உணரும்.. விழிப்பே உணரும் போது இதனை விழித்தல் என்கிறோம்..
8) இந்த விழித்தல் என்ற செயல் பாடு தான் தனக்குள் ஒருவன் பிறப்பதற்கு சமம்.. அவன் தான் மகன்.. மகன் என்றால் மறைவாய் (ம்) அகத்தில் ( அகன் ) தோன்றியவன் என பொருள்.. அகத்தில் தோன்றியவன் அகத்திலிருந்து தோன்றியவனாய் உருவெடுத்து புறத்தே செயல் படும் விழிப்பு நிலையே முருகன் எனலாம்.. மகன் என்பதில் ம் அடுத்து உரு ஆன உருவானதை இணையும் போது அது ம்+ உரு + அகன் என இணைந்து முருகன் ஆகிறான்.. முதலில் நம்மில் மகன் பிறக்கட்டும்.. பின் முருகன் நிலைக்கு வரலாம்... அக நிலையில் மகன் பிறப்பதை உணர வேண்டும்..
9) மனதிற்கு ஏற்ற சுவாச வேகம் குறையும் போது, மனம் எண்ண ஆதிக்கங்களோடு விழிப்பு என்ற கருவறையான தோன்ற நிலைக்கு உள் புக முனையும்.. உடனே ஏற அல்லது இறங்க தொடங்க வேண்டும்..
10 ) இப்படி ஒரு முறை அனுபவப் பட்டது போல் பத்து முறை அனுபவப் பட வேண்டும்.. அதற்காக இரண்டு அல்லது மூன்று முறை மலை ஏறி இறங்க வேண்டியதிருக்கும்..
11) அன்பர்கள் இதனை தேகப் பயிற்சியாக ஒரு போதும் நினைக்கக் கூடாது.. விழிப்பு நிலை பெறுவதற்க்கான உன்னத பயிற்சி.. மற்றவர்களோடு ஒத்து பார்த்து, அவர்களோடு இணையாக மலை ஏறவோ இறங்கவோ ஒரு போதும் கூடாது.. மற்றவர்களை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்.. படியின் மேல் மட்டும் பார்வை, இளைப்பு என்ற பெரும் சுவாசம், அதில் மனம் பொருத்தி விழித்தல் என்ற செயலை உணர்தல், இதை தவிர மனம் எதையும் நாடக்கூடாது...
12) அன்பர்கள் மலை அடிவாரத்தில் கூடும் போதும் பிரியும் போதும் ஒருவர்க்கு ஒருவர் பேச்சில் ஈடுபடுவது மிகவும் பயிற்சிக்கு ஆபத்தானது... இதில் மிகவும் கவனம் தேவை... மன அமைதியில் மட்டுமே விழித்தல் என்ற செயல் பாட்டினை திறம் பட செய்ய முடியும்...
13) முதல் நாள் அகத்தில் மகன் கரு உற்ற நிலையில், கரு வளர்க்கும் பயிற்சியை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து முடிந்த வரை வர வேண்டும்.. ஒவ்வொரு ஞாயிறுக்கும் இடைப் பட்ட நாட்களில் மாடி படி ஏறி பயில வேண்டும்..
14 ) தொடர்ந்து 10 ஞாயிறு கிழமைகளில் வர முடிந்தவர்கள் மட்டும் நேரடி பயிற்சிக்கு வரவும்.. உறுதி பாடு இல்லாதவர்கள் நேரடி பயிற்சியினை தவிர்கலாம்..

இது முதல் கட்ட நிலைக்கான செயல் பாட்டு விளக்க முறைகள்... பின்னால் பயிற்சியின் இடையே புதிய விளக்க முறைகள் அளிக்கப் படும்.. எல்லாமே முகநூல் பக்கத்தில் நேரடி பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத, வெளி ஊர் அன்பர்களுக்காக பதிவு செய்யப் படும்... வெளி ஊர் அன்பர்கள் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை வேண்டாம்.. நுணுக்களை கவனமாக அறிந்து மாடி படிகளில் ஏறி இறங்கியோ மைதானத்தில் ஓடியோ நோக்கத்தோடு பயின்று செயல் படும் வெளி ஊர் அன்பர்கள் மிகவும் பயன் அடைந்து கொண்டு வருகிறார்கள்.. பதிவினை மட்டும் நன்றாக படித்து பயிலுமாறு வெளி ஊர் அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஒன்று


Marma Yoogi
மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஒன்று
            ***********************************************************
தேவைகளை கெடுப்பது ஆசைகளே
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.. கேட்டு கேட்டு சலித்துப் போன புத்திமதி.. ஆனாலும் இந்த புத்திமதி மனதை தாண்டி மேலே துளியும் செல்லவில்லை... துன்பத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம்.. துன்பம் என்ற கேள்வி எழும் போது அதற்கான விடை ஒன்றில் மட்டுமே உள்ளது.. ஆம் அது தான் நிறைவேற்றபடாத தேவைகள்... ஆசைகளிலே உழலும் மனம், தேவைகளை கவனிப்பதே இல்லை.. இந்த ஆசைகளை உருவாக்குகின்ற சுற்றுப் புற சூழ்நிலைகளில் மனம் சிக்கி ஒடுங்கி போவதால், அதனால் அது அதிலிருந்து மீள முடியாமல் போய் விடுகிறது.. அந்த சுற்று புற சூழ்நிலைகள் போலவே ஆகவேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொள்வதால் தேவைகளில் மனம் கவனம் செலுத்த முடிவதில்லை....

உடல் துயரம் உயிர் துயரத்தினால் ஏற்படும் மன துயரம் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும், மனம் அவைகளை போக்குவதற்கு துளியும் முனைவதில்லை... ஆசைகளின் உந்துதலால் ஆசைகளை நாடும் மனம் அந்த ஆசைகளை துளியும் நிறைவேற்ற முடியாத நிலையில் கற்பனைகளிலும் கனவுகளிலும் மனம் வாழத் தொடங்குகிறது.. ஒவ்வொரு மதமும் அந்த ஆசைகளை மட்டுமே காட்டி பிழைப்பை நடத்துகின்றன.. கேட்டதெல்லாம் இறைவன் கொடுப்பார் என சொல்லாத மதங்கள் உலகில் ஏதாவது உண்டா ? ஆசைகளை காட்டி, தேவைகளை தட்டி கழித்து, உடல் உயிர் துயரங்களை பெற்றுக் கொண்டு இருக்கும் தருணம் இந்த மதங்கள் மிக அழகாக சொல்லும் வார்த்தை என்னவென்றால், எல்லாம் இறைவன் சித்தம் பிரகாரம் நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பது தான்....

இறைவனிடம் பெற வேண்டியது எதுவுமே இல்லை.. இது தான் வலுவான உண்மை.. அதனிலும் வலுவான உண்மை எதுவென்றால், இறைவன் நமக்கு எல்லாவற்றையும் குறைவில்லாமல் கொடுத்து இந்த மண்ணிற்கு அனுப்பி இருக்கின்றான்.. அதனிலும் வலுவான உண்மை எதுவென்றால், ஐம்பூதங்களிலே குறைவில்லாமல் கொடுத்ததை முறையாக பயன் படுத்தினால் அவனோடு கலந்து நிற்க முடியும் என்பது தான்.. தேவைகளும் குறைகளும் இல்லாத முழுமையான வாழ்வாகிய இறை கலப்பே முடிவானது.. அதற்காக வேண்டிய அனைத்தையும் கொடுத்து இருக்கிறான் இறைவன்... அப்படி கொடுக்க காரணம் அவனின் தனி பெருங்கருணையே..

தனிப்பெருங்கருணையின் அருமை தெரியாமல் அதனை வேடிக்கை பார்க்கும் செயல் ஒன்றே இன்று நடைபெறுகிறது.. இறைவன் கொடுத்ததை கைபிடிக்க தெரியாமல் அறியாமையில் வாழ்கிறோம்.. கையில் கூடியதை கையில் பிடிக்க தெரியவில்லை என்றால் குற்றம் யாருடையது என்பதை உணராமல் சதா காலமும் இறைவனிடம் முறையிட்டு, முறையிட்டு கண்ணிர் மல்கி நிற்கின்றான்.. பாவம் இறைவன் என்ன செய்வான் ? மீண்டும் மீண்டும் கொடுத்தாலும், கொடுத்த ஒன்று ஏற்கனவே கொடுத்ததோடு கலக்க முடிவதில்லை.. ஒன்று ஏற்கனவே கொடுத்ததோடு கலக்க முடியாமல் புதியது நீங்கி விடும்.. இல்லையென்றால் ஏற்கனவே கொடுத்ததை நீக்கி விட்டு அதன் இடத்தில் புதிதாக கொடுத்தது அமர்ந்து விடும்.. முடிவில் இறைவன் நமக்கு எதுவும் கொடுக்க வில்லை என்ற ஏக்கம் மட்டுமே மனிதனுக்கு மிஞ்சும்.. கணணியில் ( computer ) ஒரு கோப்பு இருக்கும் போது அதே போன்ற கோப்பு ( file ) பதிக்கும் போது ஏற்படும் நிலையை நாம் நன்கு அறிவோம்.. அதே போன்ற நிலைதான்.. இறைவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கின்றான்.. அவன் நம் உரிமை நாயகன்.. நமக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்ற உரிமை நமக்கு அவனிடம் உள்ளதால் கருணை வடிவான சத்திய நிலையில் உள்ள கடவுள் நமக்கு ஏற்கனவே எல்லாவற்றையும் கொடுத்து இருக்கின்றார்.. இவைகளை எல்லாம் நினைவு படுத்தவும் அதனை பயன் படுத்த கூடிய விழிப்பு நிலை இல்லாத காரணத்தினால் மனிதனுக்கு இத்தனை துயரம்.. ழ் என்ற ழகரமெய் தாங்கிய தமிழ் என்ற சொல்லே ஒரு நிலையில் விழிப்பு என்றும் பொருள் கொள்ளும்..

ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்த நாட்டின் கபட நிர்வாகிகள் எதுவேண்டுமானாலும் இலவசமாக கொடுப்பார்கள்.. ஆனால் விழிப்பினை கொடுக்கும் எந்த ஒரு செயலையும் செய்யவே மாட்டார்கள்.. விழிப்பினை கெடுக்கும் குடியை, மதுவை ஊக்கப் படுத்தவே பார்ப்பார்கள்.. பல ஆண்டுகள் நம் நாட்டை விட பொருளாதாரத்தில் மிக பின் தங்கிய நாடாக இருந்த சீனா கலாச்சார புரட்சியின் மூலம் அனைத்து போதை பொருள்களையும் ஒழித்துக் கட்டியது.. போதை கருத்துகளை தந்த மதங்களையும் - புத்த மதம் உள்பட-- ஒழித்துக் கட்டியது.. முப்பதே ஆண்டுகளில் உலகில் இன்று பெரிய வல்லரசாக விளங்குகிறது.. சமீபத்தில் மோடி அவர்கள் இந்தியா விரைவில் சீனாவை மிஞ்சும் என்றார்.. அதற்கு சீன பத்திரிக்கை மிக அற்புதமான நாகரீகமான பதில் தந்தது.. சீனர்களின் உழைப்பிலும் ஒழுக்கத்திலும் விழிப்பாற்றலிலும் மிஞ்சும் தகுதி இந்தியர்களுக்கு தற்போது இல்லை.. ஆகவே பொருளாதாரத்தில் மிஞ்சும் பேச்சுக்கே இடம் இல்லை என்றது.. மிகவும் உண்மையான சத்தியமான சொல் அது.. விழிப்பினை கெடுக்கும் குடியும் மதுவும் கற்பனை பாத்திரத்தை அடையாளம் காட்டும் சின்ன திரை பெரிய திரை உள்ளவரை, இந்தியாவை எவராலும் வல்லரசாக்க முடியாது.. குடி குடியை கெடுக்கும், புகை மரணத்தை தரும் என்ற விளம்பரத்தை தொடர்ந்து அவைகளின் விற்பனையும் அதிகப் படுத்துவது கேவலத்திலும் மகா கேவலம்.... விழிப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக ஓரிரு நிறைநிலை மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றினால் மட்டுமே இந்த மண்ணிற்கு விடிவு காலம் வரும்.. இந்த மண்ணை காக்க பூரண விழிப்பு நிலையில் பல அற்புதங்களை செய்து இந்த மண்ணில் உள்ளோரை மாற்ற செய்ய வேண்டியது நமது கடமை.. அதற்காக முனைவோமாக...

Thursday, 15 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபது

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபது
********************************************************************
அந்த ஒன்றே போதும்
கேள்வி :--- ஐயா நான் உங்கள் பதிவுகளை நன்றாக படித்தேன்.. அதில் நான் நிறை நிலை மனிதனாகி மற்றவர்களை காட்டிலும் ஒரு உயர்ந்த நிலை அடைந்து பலர் போற்ற நான் பெரு மகிழ்ச்சி அடைவேன் என்பது உறுதியாக தெரிகிறது... பயிற்சியை தீவிரமாக பயில தொடங்கும் எனக்கு தாங்கள் தனி பட்ட முறையில் உதவி செய்வீர்களா ?
நோக்கம் சரிதான்.. ஆனால் அதில் இரண்டு பெரும் பாரங்களை, சுமைகளை சுமந்து கொண்டு, அந்த அன்பரை போன்றோர் இம்மி அளவும் முன்னேற முடியாது... அந்த இரண்டு பாரங்களில் ஒன்று, மற்றவர்களை காட்டிலும் ஒரு உயர்ந்த நிலை.. மற்றொன்று பலர் போற்றும் எதிர் பார்ப்பு... ஒரு பெரும் குடிகாரன், ஒரு ஊனமுற்றவரை விட இந்த இரண்டு பாரங்களை உடையவர் துளியும் முன்னேற முடியாது... ஏதோ ஒரு உத்வேகத்தில் முன்னேறி சென்றாலும், முயல் ஆமை கதையில் வருவது போல முடிவில் பின் தங்கியே போவார்கள்...
பெரும் பாலும் மனித குலம் இந்த இரண்டு சுமைகளை சுமந்து கொண்டு இருக்கிறது... இவர்களுக்கு பெரு மகிழ்ச்சி என்பது கானல் நீரை போலவே இருக்கும்.. இன்று மனித குலம் வேதனையில் மூழ்கி இருப்பதற்கு காரணம் இந்த சுமைகளே.. இந்த வேதனையில் இருப்பவர்கள், மற்றவர்களையும் சந்தோசத்தில் இருக்க விட மாட்டார்கள்...
பெரு மகிழ்ச்சி அடைய ஒரே வழி அண்ட ஆற்றலை பெறுவது தான்.. அந்த மகிழ்ச்சியில் நீடித்து இருக்க ஒரே வழி மனம் அந்த ஆற்றலை கொள்ளை அடித்து செல்லாத வண்ணம், விழிப்பு நிலையிலே இருப்பது தான்.. பலரை கொன்றான், பல நாட்டை வென்றான், குறிக்கோள் அடையும் முன் தன்னை இழந்தான் அலெக்சாண்டர்.. அந்த இரண்டு பாரங்களால் தன்னையே முடிவாக இழக்கும் முடிவு தான் எல்லா மனிதர்களுக்கும்... மனிதன் ஒன்றை மறந்து விட்டான்.. எங்கும் நீக்கமற இருக்கும் அண்ட ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை... ஒருவரை விட உயர்வாக தன்னை ஆக்கி கொள்ள நினைப்பவர்கள் அந்த ஒருவரிடம் உள்ள அண்ட ஆற்றலையே சவாலாக கொண்டு உயர்வடைய நினைப்பது, முற்றிலும் முரண் பட்ட செயல்... குறைந்த அண்ட ஆற்றலை உடையவர்களுக்கு தன் பேராற்றலை பயன் படுத்தி, தானாமாக வழங்கும் கருணை உள்ளவர்களுக்கு, அவர்களை வற்றாத நிலைக்கு அண்ட ஆற்றலும் அறிவும் பார்த்துக் கொள்ளும்..
ஆணவ மலத்தினால் வரும் அற்ப மகிழ்ச்சிக்கு ஆசை கொண்டவர்கள் முடிவில் அலெக்சாண்டரை போல் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள்... மனித குலமே ஆணவ மலத்தால் அவதி படும் போது அவர்களிடம் பெரும் மதிப்பு ஒன்றை எதிர்பார்ப்பது, அது போன்ற அறிவற்ற தன்மை உலகில் எதுவும் இல்லை.. இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகள் கூடும் எண்ணிக்கைக்கு அளவே இல்லாமல் போய் முடிவில் பலத்த ஏமாற்றமே ஏற்படும்... அந்த எதிர்பார்ப்புகள் மனதை மிகவும் பலப் படுத்தி ஒருவரிடம் உள்ள அண்ட ஆற்றலை முழுமையாக இழக்க வைத்து, மனிதனை மரணக்குழியில் தள்ளி விடும்...
வெறும் அண்ட ஆற்றல் என்பது ஆற்றல் மட்டும் இல்லை.. மனிதன் கண்ட மற்ற ஆற்றல்களுக்கும், எங்கும் நீக்கமற இருக்கும் ஆதி ஆற்றலுக்கும் ஒரு மிக பெரிய வித்தியாசம் உள்ளது.. இந்த ஆதி ஆற்றலான அண்ட ஆற்றலுக்கு எங்கும் இல்லாத, எதுவும் இணையாக இருக்க முடியாத அண்ட பேரறிவு உள்ளது... விழிப்பு நிலையோடு ஞான வடிவான பேரின்ப நிலையான அண்ட பேரறிவால் இந்த அண்டமே துல்லிதமாக இயங்கி கொண்டு இருக்கிறது... அப்படி பட்ட அண்ட ஆற்றலுக்கும் அண்ட பேரறிவுக்கும், இணையாக வேறு எதுவும் மனிதன் நாடினால், அதை விட மடமை எதுவும் இல்லை...

நிறை நிலை மனிதன் அன்பு வடிவானவன்.. மதிப்பும் புகழ்ச்சியும் தன்னை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்வான்.. காரணம் அவை தன்னை குறை நிலை மனிதனாக்கி விடும் என்பதை நன்றாகவே அறிந்து கொண்டவன்.. விழிப்பு நிலையிலே தனக்கு தகுந்தது, தகாது எது, என்பதை நன்கு அறிந்த காரணத்தினால் தான், நிறை நிலை மனிதன் ஆவதற்கான தகுதியை பெறுகிறான்.. இப்பொழுது உள்ள மார்க்கங்கள் மதங்கள் காட்டும் மதிப்பும் குரு மரியாதையும் அன்பற்ற செயல் பாடுகளில் உள்ள நிலைகளில் உள்ளவற்றில் ஒரு சிறு துளி பற்றிக் கொண்டால் கூட நிறைநிலை மனிதன் ஆக முடியாது.. காரணம் அந்த சிறு துளியே மனிதனை குறைநிலை மனிதனாக்கி விடும்.. எந்த மதங்களாலும் வழி சொல்லி தர முடியாததால் தான் இது மர்மயோகம் அல்லது காணாமல் போன மறந்து போன தமிழ் யோகம் என்பது... நிறை நிலை மனிதனான தமிழனாக மாற, அன்றைக்கு முல்லை கொடிக்கு தன் தேரை ஈந்த தமிழ் மன்னரை உயர் பண்பாக்கிய அந்த வீரமும் தீரமும் கருணையும் நல்கும் தமிழ் யோகம் வெளிப்பட்டால் மட்டுமே முடியும்... அந்த ஒன்றே போதும்.. எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றே போதும்...