Wednesday 5 August 2015

சித்தர் ஆவது எப்படி -- பகுதி ஐம்பது

ஒட்டு மொத்த இரகசியமும் ஒரே வரியில்
அன்பர்களே ஒட்டு மொத்த இரகசியமும் ஒரே வரியில் கொடுக்க முடியுமா ? புரிந்தவர்களுக்கு இந்த வரி ஒன்றே போதும்.. அதற்கு மேலே புரியாதவர்களுக்கு பல ஆயிர புத்தகங்கள் தேவைப்படும்.. அந்த ஒரே வரி இது தான்....
உடலின் உறவு, இருப்பின் துறவு, அருளின் வரவு, பெற்றால் சித்தராகலாம்...
சற்று புரியாததாக இருந்தாலும், ஏனைய முந்தைய பதிவுகளை படித்து உணர்ந்தவர்களுக்கு ஓரளவு புரியலாம்... இருந்தாலும் புரிய முயற்சி செய்கின்றோம்..
உடலின் உறவு ;- மனிதன் உலகில் உள்ள அத்தனையும் தன் கைவசப்படுத்திக் கொண்டாலும், தன் உடலை கைவசப்படுத்திக் கொள்ள தெரியவில்லை.. தன் உடலில் இருக்கும் ஜீரண உறுப்புகள் அசைவையும், இதய துடிப்பையும், இதய இயக்கத்தையும் அளவிட முடியவில்லை.. இரத்த ஓட்டத்தை உணர முடிவதில்லை.. அத்தனையும் இயக்க கூடிய ஆற்றலையும் துளியும் உணர முடிவதில்லை.. அந்த ஆற்றலையும் பெருக்கி தேகம் அழியா வகை அறியப்படவில்லை.. அப்படியே சித்தர்களால் உணர்த்தப் பட்டாலும், அதில் மனம் துளியும் ஈடு பட விரும்புவதில்லை.. மனம் எதிர்பார்க்கின்ற வகையில், வழியில், சத்தியம் உண்மை இல்லை.. மனம் துளியும் ஈடுபடாத வழியில் மட்டுமே உண்மை சத்தியம் இருக்கின்றது... மனதை திசை திருப்ப போதுமான பலத்தோடு புத்தி என்ற விழிப்பு நிலை இல்லை.. அந்த விழிப்பில் வல்லமை பெற உதவும் வாசியோகத்தில் மனத்திற்கு பிடிமானம் துளியும் இல்லை.. இருக்கின்ற விழிப்பு சக்தியை பயன் படுத்தி முன்னேறவும் தெரியவில்லை..
சரி இதலெல்லாம் எதற்கு ? உடலோடு உறவு அற்ற நிலையில் அந்த உடலை சரி செய்ய எந்த வழியும் இல்லை.. மனம் உடலில் உள்ள உணர்வோடு தொடர்பு இல்லாத நிலையில் எந்த ஆற்றலையும் மனம் தேகத்திற்குள் எடுத்த செல்ல முடியாது.. மரணப் படுக்கையில் கூட மனம் தன் கடைசி ஆசையை புற உலகில் தேடவே முயலும்.. அதனால் தேகத்தை காக்க அதனால் துளியும் இயலாது.. காரணம் உடலுக்குள் செல்ல மனதிற்கு துளியும் பயிற்சி கிடையாது.. அதனால் உடலை காக்க மனதால் துளியும் முடியாததாகவே உள்ளது.. உள் கடந்து போனால் கடவுளை பார்க்கலாம் என்று எத்தனை முறை மனதிற்கு போதித்தாலும், தேகத்தின் உள் கடக்க மனதால் முடியாததாகவே உள்ளது.. ஒரே வழிதான் உள்ளது.. உடலுக்கு உள்ளே செல்ல முடிந்த வலிமை வாய்ந்த விழிப்பு நிலையால் மட்டுமே ஆகக் கூடிய அந்த காரியத்தை விழிப்பு நிலை பெருக்கத்தால் மட்டுமே நடக்கும்... ஆற்றலை எடுத்து செல்ல மனதால் மட்டுமே முடியும் ஆதலால், மனம் வலிமையான விழிப்பு நிலைக்கு கட்டுப் படவேண்டும்.. ஆகவே தான் விழிப்பு நிலை அதிபதியான அகக்குருவுக்கு அத்தனை முக்கியத்துவம் தருவது... உடலோடு உறவு, விழிப்பு நிலையால் சாத்தியமாகும் மனதால், தேகத்தை எந்த நிலையிலும் பேணிக் காக்கலாம்... குணங்குடி மஸ்தான் போல தேகம் நூறு துண்டுகளாக நைந்து போனாலும், தேகத்தை சீர் செய்து பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும்.. அப்படி நடக்க மனம் என்ன நிலையில் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்...
இருப்பின் துறவு :--- விழிப்பு இருக்கும் இடமே இருப்பு நிலைதான்.. இருப்பு நிலை என்பது சித்தத்தின் எண்ண ஆதிக்கம் அற்ற நிலையானது.... எந்த ஒரு எண்ணமும் மனதில் தலை தூக்கினாலும் மனதிற்கு ஏதோ பொறுப்பு வந்து விடுகிறது.. பொறுப்பினை, எண்ணத்தால் பெற்ற மனம், தன் இருப்பு நிலையிலிருந்து விலகி, பொறுப்பு என்ற வெளிச்சத்திற்கு புறம் அதாவது வெளியே வந்து விடை தேட தொடங்கி விடுகிறது... இருப்பு தன்மை என்பது விழிப்பு செயல் பட இருக்கின்ற ஆயத்த நிலை.. அந்த நிலையில் இருந்தால் மட்டுமே விழிப்பு நிலை செயல் பட முடியும்.. மனதை வைத்து செயல் படும் விழிப்பு, பொறுப்பினை ஏற்று வெளியே சென்ற மனம் இல்லாமல் தேகத்தின் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கிறது.. இருப்பில் மனம் இருந்தால் மட்டுமே விழிப்பு மனதை வைத்து தெய்வீக செயலையும் செய்ய முடியும்... எண்ணங்களை துறந்த நிலையில் மனம் இருப்பில் இருக்க வேண்டும்.. அப்படிபட்ட மனதின் துறவு தான் உண்மையான துறவு... இருப்பிலே மனம் துறவு கொள்ளும் போது மட்டுமே விழிப்பு தெய்வீக செயல்களை செய்ய இயலும்.. அந்த இருப்பே மனதின் கனல் நிலை.. மனம் கனல் நிலையில் இருந்தால் மட்டுமே தெய்வீகத்தோடும், நித்தியத்தோடும் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்... வெளிச்சத்தில் மனம், அதாவது இருப்பு நிலை நீங்கிய நிலையில் அநித்திய உறவுகளில் மட்டுமே உறவு வைத்துக் கொள்ள முடியும்.. மனம் அப்படி எண்ணங்களை, துறவு பூண்டு இருப்பில் இருக்கும் போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..
அருளின் வரவு :--- இருப்பு தன்மையில் மனம் எண்ணங்களை துறந்து வெறுமையாக சூனியமாக இருக்கும் போது தன்னில் தானாய் இருக்கும் அந்த அதி அற்புத விழிப்பு நிலை மையம் கொள்கிறது.. அந்த அமைதி சூனிய நிலையில் தான் எதையும் படைக்கும் எங்கும் நிறைந்துள்ள அண்ட ஆற்றல் பெரு வெள்ளமாக வருகிறது.. விழிப்பு நிலையில் புகும் அந்த புனித உயிர் ஆற்றல் உடலிலும் புகுந்து உயிரை மேன்மை படுத்துகிறது... உயிர் துன்பத்தை, மனம் அறிய விழிப்பு நிலை கனல் மயமான மனதிற்கு உதவுவதால், மனமானது அண்ட ஆற்றலை, தேகத்தில் சேர்க்கிறது.. தேகத்தில் சேர்ந்த அந்த ஆற்றல் தூல தேக சக்தியாகவும் எதையும் செய்ய வல்ல சூட்சம தேக சக்தியாகவும் விளங்க தொடங்குகிறது.. வல்லமை வாய்ந்த சூட்சம தேக சக்தி பலப் பட்டவுடன் சூட்சம தேகம், தூல தேகத்தை விட்டு பிரிந்து சென்று மீண்டும் கூடும் ஆற்றலை அடைவதோடு மட்டும் அல்லாமல், தூல தேகத்தை காட்டிலும் பல ஆயிரம் மடங்கு செயல் திறன் உடையதாய் விளங்குகிறது.. சித்தர்கள் என்பவர்கள் சூட்சம தேகத்தில் வலு பெற்றவர்களே.. போதும்
இப்போது உடன் பாடுடன் கூடிய சுவாச ஒழுங்கில் என்ன நடக்கிறது ? வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையில் பேர் அமைதியும் மகா மௌனமும் பெற்று, அதனால் சூனிய நிலையாகிய விழிப்பு நிலைபெறவும், உள்வாங்கும் மூச்சாகிய சந்திரகலை தேகத்தில் புகுந்த மதியான, மனம் பெறவும், பயிலுகின்றோம்.. சூரிய கலையில் இருப்பின் துறவால் அருள் வரவால் பெற்ற ஆற்றலை சந்திர கலையில் மதியான மனத்தால் தேகத்தில் சேர்க்கிறோம்.. தேகத்தில் புகுந்த மனமே உடலின் உறவான மதியான மனம்..
அருளின் வரவினை இருப்பின் துறவால் பெற்று உடல் உறவால் சித்தராகலாம் என்பது முற்றிலும் உண்மை...
இத்துடன் 
சித்தர் ஆவது எப்படி?
என்ற தொடர் பதிவு
முடிவடைகிறது...

No comments:

Post a Comment