Saturday 7 November 2015

மலை ஏற்ற அனுபவங்கள் -- இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்

மலை ஏற்ற அனுபவங்கள் 
****************************************
இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்
அற்புதத்தை அற்பமாக்கி விட்டதால் உலகம் என்றும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.. இன்றைய சூழ்நிலையில் அதிகம் தடுமாறுகிறது.. அற்புதத்திற்கு வரையறுக்க முடியாத அண்ட ஆற்றலும் அதன் எல்லையில்லா தனி பெருங்கருணையும் இன்று மனித குலம் மிக அற்பமாக நினைப்பதை தான் சித்தர்கள் நெஞ்சு பொறுக்குவதில்லையே என புலம்பினர்... அந்த அற்புதத்தை அற்புதமாக நினைக்கும் தருணம் மனிதன் மிக பெரிய அற்புதம் செய்யும் வல்லமை அடைகிறான் என்ற ஒரு மிக சாதாரண உண்மையை அறிந்து கொள்ள முடியாது இருக்கிறான்... அறிவு நிலையாகிய ஆகாயமும் அதன் ஆற்றலையும் என்ன சொன்னாலும் உளமாற மனிதன் நம்பத் தயாராக இல்லை.. நிஜத்தை நம்பிக்கையாகவே வைத்துக் கொண்டு நடைமுறைக்கு வராமல் சில மாயை கோட்பாடுகளை அதை சுற்றி புனைந்து நிஜத்தை முற்றிலும் மறைத்தே விட்டார்கள்.. அந்த மறைப்பிற்கு பின்னால் இருக்கும் நிசத்தை உண்மையை நொடியில் கண்டு அறிந்து ஒவ்வொரு நொடியும், அந்த உண்மையோடு ஒவ்வொரு மலை படி ஏறும் போது ஒவ்வொரு அடியும் வைக்கும் போது, அது தெய்வீகமாக மாறுகிறது.. தெய்வீகத்தை இதுவரை துளியும் அனுபவப் படாத மனித குலம் அந்த அண்ட ஆற்றலால் இந்த தேகம் இயங்குகிறது என்பதை உணரும் போது, ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு அடியும் ஒரு இனம் தெரியாதஉணர்வு தோன்றுகிறது... அந்த உணர்வு வேறு ஒன்றும் இல்லை.. எல்லையில்லா அகண்டகார பெருவெளியில் அங்கு இங்கு என குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்துள்ள புனித பரிசுத்த அண்ட ஆற்றல், தேகத்தில் ஊடுருவும் போது தேக சக்தியான கனலாய் மாறும் மாற்றம் தான் அது.. அப்படி பட்ட உணர்வினை நாம் உணவு உண்ணும் போது எவ்வளவு இழிவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது நாமே நமக்கு தெரிந்த ஒன்றே.. ஒவ்வொரு தொழிலாளியும் தன் தேக உழைப்பு ஒரு தெய்வீக பேர் இயக்கம் என்பதை அறியாது வேலை செய்கிறார்..

நொடிக்கு நொடி மறக்காமல் ஒவ்வொரு படியும் ஏறும் போது அந்த தெய்வீக பேர் இயக்கம் செயல் படுகிறது என்ற உணர்வோடு செல்ல செல்ல என்ன நிகழ்கிறது என்பதை அனுபவப் படும் அன்பர்கள் தான் சொல்ல வேண்டும்... காலிலே தேகத்திலே உள்ள உணர்வோடு மனம் இணைந்து படி ஏறும் போது தோன்றா நிலை அனுபவப் படுவது மட்டும் அல்ல, தோன்றாநிலை வலு படுவதையும் உணரலாம்.. அதனால் அதிக அண்ட ஆற்றல் வரவின் காரணமாக படிகளில் ஏறும் போது ஒரு சுலப தன்மையை மேலும் மேலும் உணரும் போது வியப்பினை தரும்..

அண்ட ஆற்றலின் அதிக வரவால் படிகளே நம்மை தாங்கி தாங்கி ஏற்றிச் செல்லுகிறதோ என சந்தேகிக்கும் அளவிற்கு நம் நிலைமை மாறலாம்.. அப்படி அனுபவப் பட்டதால் தான் படி பூஜையில் ஒவ்வொரு படிக்கும் சந்தனம் குங்குமம் 
கற்பூரம் வைத்து வழிபட்டனர்.. இழந்து போன அந்த அனுபவத்தை நாமாவது இரண்டு மூன்று வாரங்களில் பெறுவோமாக.. அதனை அந்த சத்தியத்தை உணர்ந்து நடப்பதால் இதுவும் நிச்சயம் நமக்கு சாத்தியமாகும்...

நிதானமாக ஆரம்பத்தில் படியேற வேண்டும்.. முதல் மூன்று வாரங்கள் பயின்ற அன்பர்கள் தோன்றா நிலை அனுபவத்தோடு படியேற வேண்டும்.. ஒவ்வொரு படியும் உணர்வினை தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.. எந்த படியையும் உணர்வின்றி மனதால் வேகமாக கடந்து போகக் கூடாது..அப்படி படிகளில் கடக்கும் போது பெரு மூச்சு என்ற இளைப்பு வந்தால் சற்று நின்றோ உட்கார்ந்தோ உடன் பாடு சுவாசத்தில் பயில வேண்டும்.. மூன்று வாரங்களில் முறையோடு அக்கரையோடு பயின்றவர்களுக்கு அப்படி பெருமூச்சு வர சந்தர்ப்பம் இல்லை... அப்படி வந்தால் தாங்கள் பயிற்சியில் பின் தங்கிய நிலையை கருத்தில் கொண்டு தீவிர பயிற்சியை இனி மேலாவது வரும் நாட்களில் மேற் கொள்ள வேண்டும்...

4,5&6 வாரங்கள் உணர்வு வாரங்களாக பயின்றால் தான் அடுத்து 7வது 8வது வாரத்தில் மூன்றாம் கட்ட பயிற்சி சுலபமாக கைகூடும்.. மிக சிக்கலான மூன்றாம் கட்ட நான்காம் பயிற்சியின் தன்மையை மனதில் கொண்டு மிகுந்த சுய ஒழுக்கத்தோடும் சுய சிந்தனையோடும் பயிலுவது அன்பர்களின் பொறுப்பு..உடம்பினுள் உரு பொருள் கண்டேன், உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டுள்ளான், என்ற திருமூலர் வாக்குப் படி, உடம்பினுள் புகுந்து இறை வாழும் கோவிலில் நுழையும் இந்த அரிய பயிற்சி செய்யும் போது வெளியே நம் நடவடிக்கைகளை சுத்தமாக குறைத்துக் கொள்வது மிகுந்த பயன் அளிக்கும்.. நிகழ் கால தெய்வமாகிய அண்ட ஆற்றலை விட்டு விட்டு கடந்த கால எண்ண அலைகளின் ஆதிக்கத்தில் நாம் நம்மை இழப்பது, நம்மை நாமே வருத்திக் கொள்வதாகும்... ஆகவே பேச்சை முடிந்த மட்டும் அதிகப் பட்சம் குறைத்துக் கொண்டு, நிகழ் கால இறையாகிய அண்ட ஆற்றலோடு ஒன்றித்து பயின்று பெருத்த ஆன்ம இலாபம் அடைவோமாக...

மலை ஏற்ற அனுபவங்கள் -- இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி

மலை ஏற்ற அனுபவங்கள் 
****************************************
இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி
அன்பர்கள் மூன்று ஞாயிற்று கிழமைகளில் மலை ஏற்றம் பயின்று, தொடர்ந்து மற்ற நாட்களிலும் வீட்டு மாடி படிகளில் ஏறியோ அல்லது மைதானத்தில் ஓடியோ பயிலும் போது பெரும் சுவாசம் என்ற மூச்சு இளைப்பில் மனம் தன் செயற்ற தன்மையில் எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையினை அனுபவப் பட்டீர்கள்.. அந்த எண்ண ஆதிக்கங்கள் இல்லாத நிலையில் தங்கள் மனதின் எல்லைக்கு அப்பால் மனம் அறியாத வண்ணம் அண்ட ஆற்றலின் அதிக வரவால் கடினமாக வேகமாக மலை அல்லது படியேறியும் மூச்சு இளைப்பு வெகுவாக குறைந்து போய் இருக்கிறது என சில நண்பர்கள் சொன்னார்கள்.. இதை தான் எதிர் பார்க்கப் பட்டது.. இது மிகவும் நல்லது.. நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.. இது தோன்றாநிலையில் மட்டுமே அண்ட ஆற்றல் வரவு அதிகமானதின் அடையாளம்.. தோன்றா நிலையில் பெறப் படும் அண்ட ஆற்றல் காரியப் பட்ட செயல் பாடுகளில் மட்டுமே வெளிப் படும்.. அதனை காண மனதால் ஒரு போதும் முடியாது.. ஊக்கமும் உற்சாகமும் செயல் பாட்டின் திறனில் மேன்பட்ட நிலைதான் அதிக அண்ட ஆற்றலின் வரவின் வெளிப்பாடு.. அதனை காண முடியவில்லை என எவராவது புலம்பினால் மர்ம யோகத்திற்கு அவர்கள் தகுதி அற்றவர்கள்.. மர்மத்தை மர்மமாகவே ஏற்றுக் கொண்டு பயின்றால் மட்டுமே பெருத்த ஆதாயம் காண முடியும்.. கடவுளும் ஒரு மர்மமே.. ஒரு மறைவான அருவ நிலையில் உள்ளவரே.. அவரை மனதால் அறிய முயன்று முயன்று இன்று மனித குலம் அவரை விட்டு விலகி விலகி நிற்கிறது..

மர்ம நிலையிலும் அருவ நிலையிலும் இருக்க வேண்டிய பேரறிவு, மன கற்பனையின் குளறுபடியால் திரிபு களங்கம் ஏற்பட்டு இன்றைய சூழ்நிலையில் அந்த பேரறிவு சரியான விதத்தில் செயல் படாமல் உள்ளது.. அடியாளம் காண்பிப்பது அவசியம் ஆயினும் அந்த உருவநிலை அடையாளம் பெரிய அளவிலே ஆதிக்கம் செலுத்தி அருவ நிலையாகிய தோன்றா நிலையினை அழித்து விட்டதால் தான் இன்று உலகில் ஆற்றல் குறைபாட்டால் மனித குலம் மகிழ்ச்சியை இழந்து, அந்த மகிழ்ச்சியை திரும்ப பெற தகாத வழியை தேர்ந்து எடுக்கிறது.. தகாத வழியில் மகிழ்ச்சியை பெற என்றுமே முடியாதது.. ஆகவே மறைவு நிலையான மர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது.. புரியாத மர்மத்தை புரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது.. இதில் மனதால் நுழைய துடிப்பவர்கள் எவரும் கரை ஏறவே மாட்டார்கள்... இன்றைய ஒட்டு மொத்த மதங்களும் ஆன்மீகங்களும் மனதால் நுழைய துடித்து பல தடவை தோற்று போயும் பாடங்களை எதுவும் கற்றுக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அதே தவறு செய்து கொண்டு இருக்கிறது.. அந்த தவறை நீக்கி தோன்றா நிலையை மனதால் ஏற்றுக் கொள்ள பயிலுவதற்கு தான் இந்த மலை ஏற்றப் பயிற்சி..

தோன்றா நிலையை விழிப்பு நிலையால் உணரும் அன்பர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்ல வேண்டும்.. உணர்வு என்றாலே விழிப்பு நிலை அது தோன்றா நிலையில் மட்டுமே உணரப் படும்... நினைப்பு என்றாலே மனத்தின் செயல் பாடு.. அது தோன்றும் நிலையாலே மட்டுமே நடக்கும்.. தோன்றா நிலையில் ஆற்றல் வரவும், தோன்றும் நிலையில் ஆற்றல் செலவும் நடை பெறுவது அன்பர்கள் நன்கு அறிந்ததே.. மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நினைப்பு சதா காலமும் உணர்வினை கெடுத்துக் கொண்டே, அல்லது சீரழித்துக்கொண்டே இருக்கிறது என்பது தான்.. உணர்வினை பிடித்துக் கொள்வதின் மூலம் நாம் தோன்றா நிலையில் நீடிக்க முடியும்.. இப்பொழுது தோன்றா நிலையை, உடன் பாடு சுவாச மூலம் அடையாளம் தெரிந்து உணர்ந்து கொண்ட நாம், அதில் நீடிக்க உணர்வு மயமாக இருக்க முயல வேண்டும்... இது மிக கடினமான பயிற்சி.. முந்தைய பயிற்சி வேகத்தில் நடந்தது.. இப்பொழுது மிக நிதானமாக நடக்க வேண்டிய ஒன்று...

இனி வரும் மூன்று வாரங்களில் அதாவது 4, 5, 6, வது வார ஞாயிற்றுக்கிழமைகளில் பயிலக்கூடிய பயிற்சி மிக முக்கியமானது.. இந்த மூன்று வாரங்கள் உணர்வு வாரங்கள்.. கடந்த கால அனுபவ இறப்பு தன்மையை ஒழித்து நிகழ்கால புத்துணர்ச்சியும் வாழ்வும் பெற, பெரிய மாற்றத்திற்கான பயிற்சி.. விழிப்பு நிலை ஏற்றத்திற்கான, வலுவடைவதற்கான பயிற்சி.. வரும் ஞாயிறு முதல் மூன்று வாரங்கள் அன்பர்கள் மிக நிதானமாக மலை ஏற வேண்டும்.. அண்ட ஆற்றல் தேக ஆற்றலான கனலாக மாறும் போது ஏற்படுகின்ற இரசாயன மாற்றம் தான் உணர்வு.. மலையேறும் அன்பர்கள் இந்த இரசாயன மாற்றமான உணர்வில் மனம் பொருந்தும் போது, மனம் வெளிச்சத்தை விட்டு விலகி கனலை நோக்கி நகருகிறது.. கனல் பெருக்கத்திற்கு அது மிக உதவுகிறது.. இரசாயன மாற்றம் விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற, அந்த உணர்வில் மனம் பொருந்தும் போது, நிகழ்கிறது.. உணர்வோடு மனம்.. இது தாரக மந்திரம்.. என்றும் மறக்கக் கூடாது.. உணர்வோடு மனம் கனல் என்ற அக்கரை சேர்க்கும்.. அந்த அக்கரை, வெளிச்சம் என்ற இக்கரையான அக கறையை, அக அழுக்கை நீக்கும்.. இதில் புரித்தலில் சிக்கல் இருந்தால் கேள்வி எழுப்பலாம்..

வெளிச்சமான மனதை தான் எண்ண ஆதிக்கங்களோடு கூடிய வழக்கமான மனம் என்று சொல்லிகொண்டு வருகிறோம்.. கனலோடு பொருந்திய மனம் ஒன்று மட்டுமே சுத்த கனலான விழிப்பு நிலையோடு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.. உணர்வோடு மனம் பொருந்தும் போது கனலோடு தொடர்பு கொள்வதால் இந்த மனம் அகநான் என்ற மனமாக மாறி தெய்வீக தொடர்புடன் இருக்கிறது.. இந்த தெய்வீக அக நான் வேலையை வேல் ஆக மாற்றும் வித்தையை செய்கிறது.. ஆனால் வேல் ஒன்றை ஏவும் வேலவன் அதாவது முருகன் இன்னும் உதிக்க வில்லை.. வேலவன் தோற்றம் அடுத்தக் கட்ட பயிற்சி.. தற்போது குழப்பிக் கொள்ள வேண்டாம்.. வேலவனுக்கு அதாவது முருகனுக்கு முன்பே வேல் தோன்றியது என்பது புராணம்.. தற்போது அகநானாகிய வேல் தோன்ற உணர்வு ஒன்றிலே மனம் பொருந்த வேண்டிய அவசியம் ஆகிறது... எண்ண ஆதிக்கங்கள் நிறைந்த ஒரு வேலை ஒன்றினை கனல் நிறைந்த தோன்றா நிலையான, வேல் ஆக வடிவெடுத்து நாம் புறத்தே திறம் பட இயங்க உணர்வு மயமாய் மனம் ஆக வேண்டும்.. புறத்தே செயல் பாட்டின் திறனை மேலும் மேலும் பெருக்க செயல் பாடு வீரர்களாய் மாறவும், நிறை நிலை மனிதனாய் மாறவும், அடுத்த கட்ட பயிற்சிகளை தொடர்வதற்கு நம்மை தயார் படுத்த, தற்போது உணர்வோடு மனம் பொருந்த, மலை ஏற்றும் பயிற்சியை வரும் மூன்று வாரங்கள் மிகுந்த உணர்வோடு பயில்வோமாக.. ஞாயிற்று கிழமை மற்றும் அல்லாது மற்ற வார நாட்களில் பயில்வது மிக அவசியம் ஆகிறது.. வாழும் நெறியான சிவகலப்பை நோக்கி நகர்ந்து நிறை நிலை மனிதனாக மாறும் நோக்கம் ஒன்றையே குறிக் கோளாக கொள்வோமாக...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி நான்கு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி நான்கு (5-11-15) 
****************************************************************** ***************************
இயல் ஆற்றல்--- நெருப்பாற்றல்
நமது மறையோகமாகிய மர்மயோகத்தில் ஆற்றல் பெரும் விதமே தனி விதம்.. அன்பின் அடிப்படையில் இயங்கும் மர்மயோகம் அவ்வாறு தனி விதமாக இருக்க வேண்டியதிருக்கிறது.. ஒரு சுவாசத்தில் சூரிய கலையில் பெற்ற ஆற்றலை சந்திர கலையில் வானத்தில் ஒரு பெரிய மின்னலை உருவாக்கலாம்.. இது நெருப்பாற்றல் பெற்ற நிலையில் நொடியில் அடைந்து சாதிக்கக் கூடியது... அந்த நொடி என்ற சொல்லில் தான் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.. மொத்த மர்ம யோகத்தின் சாரமும் உள்ளது.. இந்த நிலையில் உள்ளவர்களோடு சாதாரணமானவர்கள் எப்படி இணைந்து செயலாற்ற முடியாது... சாதாரணமானவர்களோடு இணைய முடியாதவர்கள் எப்படி அன்பை செலுத்த முடியும்.. சர்வ வல்லமை வாய்ந்த இறைவன் இதனால் தான் அன்பை நேரடியாக உடனே செலுத்த முடியாமல் போய் விடுகிறானோ ? அன்பினை செலுத்த என்றும் இயல்பாய் இருக்க, இயல்பான ஆற்றலுக்கு, திரும்ப மாறும் தகுதிக்கு வர வேண்டும்.. மீண்டும் இயல் ஆற்றல் பெற்று இயல்பாக இருந்தால் மட்டுமே ஒருவன் தனது அன்பை வெளிபடுத்த முடியும்..

அன்றைய புராணத்தில் அகிலத்தையே ஆளும் இறைவன் பிச்சாண்டியாய் உலகில் பிச்சை எடுத்தாராம்.. ஒரு ஏழையின் கூரையிலிருந்து தங்க நாணயங்களை கொட்டி தந்த சங்கரர் பிச்சை எடுக்கும் பொழுது தான் ஏழையை சந்தித்து நெல்லிக்கனியை பிச்சையாக பெற்றார்.. பட்டினத்தாரும் ஆதி சங்கரரும் என்னதான் மகான் நிலைக்கு உயர்ந்தாலும் தாய் இறந்த உடன் பதறி அடித்துக் கொண்டு இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள்.. இறைவனுடைய அவதாரங்களும் அன்பின் வெளிபாடே.. ஆனால் இன்றைய வசதிப் படைத்த குருமார்களை, சாதாரணமானவர்கள் பார்ப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது... அதற்கு அன்பின் குறைபாடே காரணம்.. அன்பு கலவாத எந்த யோகமும் அர்த்தமற்றது..

மர்ம யோகிகள் தாங்கள் பெற்ற அல்லது பெறப்போகும் அளவற்ற ஆற்றலை எந்த நிலையிலும் வெளிக்காட்டாது மறைத்து வைத்தே இருப்பார்கள்.. வானத்தில் ஒரு சுவாசத்தில் மின்னலை உருவாக்கினாலும் அது எவரால் உருவாக்கப் பட்டது என எவரும் அறியாத வண்ணம் தங்களை மறைத்துக் கொள்வதால் அவர்கள் மர்மயோகியர் ஆகிறார்கள்.. பேரும் புகழும் பிறரிடம் காட்டி கையேந்தி பெறவேண்டியது எதுவும் அவசியம் இல்லை.. தங்கள் தவ ஆற்றல் மூலம் தங்களை தனிமை படுத்த ஒருபோதும் விரும்புவே மாட்டார்கள்.... ஆனால் அளவற்ற தனது அன்பின் வெளிபாட்டால் எல்லோரையும் தன்னிடம் இணைத்து கொள்வார்கள்.. இதிலிருந்து தெரிய வேண்டியது முக்கியமான செய்தி ஒன்று உண்டு...

அண்ட ஆற்றல் பெறும் பயிற்சியை செய்பவர்கள் அதில் பலவகையான வினோதமான அனுபவங்களை பெறுகிறார்கள்.. பலரின் வருத்தம் என்ன வென்றால் தொடர்ந்து அதில் இருக்க முடிவதில்லை என்பது தான்.. தொடர்ந்து இருக்க முடியாத பட்சத்தில் தாங்கள் யதார்த்த நிலையில் இயல்பான நிலையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைய வேண்டும்... இயல்பு நிலையில் இருந்து கொண்டு நினைத்த மாத்திரத்தில் அளவற்ற அண்ட ஆற்றலை பெறும் திறனை பெற வேண்டும்.. வலுவுக்கும் திறனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. வலு ( strength ) என்பது நிரந்தரமாக இருந்தாலும், ஒரு வரையறைக்கு மேல் செல்ல முடியாது.. ஆனால் திறன் ( efficiency ) என்பது இயல்பான நிலையில் இருந்தாலும் வலுவின் எல்லைக்கு அப்பால் சென்று அளவற்ற நிலையில் விரிந்து விரிந்து செல்லக் கூடியது.. மற்றைய யோக முறைகள் வலுவை பெருக்கி பெருக்கி ஒரு மனிதனை தனிமை படுத்துவது.. ஆனால் எதிலும் சிக்கி கொள்ளாமல் விரிந்து விரிந்து ஓங்கிய நிலைக்கு செல்லும் திறனை வளர்க்கும் நெறிதான் மர்ம யோகம்.. அதனால் தான் இதில் அவ்வளவு குறுகிய காலத்தில் பெருத்த ஆன்ம இலாபம் கிடைக்கிறது..

பயிற்சியின் காலத்தில் பயிற்சியின் சமயம் மட்டுமே தீவிரம் காட்டுதல் மூலம் திறனை வளர்த்து பௌதிக கலப்பிலிருந்து முடிவான அருள் கலப்பாகிய சிவ கலப்பிற்கு நாம் செல்ல முடியும்... தீவிரமும் திறனும் கலப்பின் மேன்மையும் ஒன்றுக்கு ஒன்று பிரிக்கமுடியாத தொடர்பு உண்டு... முக்கிய இரகசியம் என்னவென்றால் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் வாய்த்த நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே பயில வேண்டும்.. மற்ற 22 மணி நேரமும் இயல்பான நிலையில் இருக்க வேண்டும்..

XXX ஒரு கால கட்டத்தில் பயிற்சியை காட்டிலும் இயல்பாய் இருப்பது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்... அந்த நேரத்தில் விழிப்பு நிலை தன்னை பலத்திக் கொண்டு பயிற்சியின் சமயம் திறனை பெருக்கி கொள்ள ஆயத்தமாகும் ... இயல்பு நிலை ஒன்றே திறனை வளர்க்க உதவும் XXX..

மற்றபடி இயல்பு நிலையை கெடுத்துக் கொண்டு தன் உடல் முழுவதும் கரையான் புற்று சூழ தவம் செய்பவர்கள் வலு அடைவார்களே தவிர திறனை அடையமாட்டார்கள்... இயல் நிலையை தவற விட்டவர்கள் ஆன்மீகத்தில் தோற்றே போய் விட்டார்கள்... ஆரம்ப சுவாச ஒழுங்கு பயிற்சி செய்யும் போது மட்டுமே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.. அது இயல் நிலையிலே செய்யப் படுவதால் இயல் நிலையை பாதிக்காது... பின்னால் வரும் மாற்றம் தரக்கூடிய நிலைக்கு வரும் போது கால அளவிலே பயில வேண்டியது அவசியமாகிறது...

மலையேறும் பயிலும் அன்பர்கள் தோன்றா நிலையை உணர்ந்து விட்டால் அண்ட ஆற்றல் சற்று அதிகமாக வரத் தொடங்கும்.. அதுவும் பற்றாது.. மேலும் மேலும் அதிகப் படுத்துவதற்கான பயிற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் போது, பழையவற்றில் பற்று வைக்கக் கூடாது.. காரணம் மேல் பயிற்சியிலேயே கீழ் பயிற்சியின் விளைவுகள் 
தொடர்ந்தே வரும்.. மேல் சொன்னவற்றை நன்கு உணர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி மூன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி மூன்று
************************************************************************************
அக நானே செய்யும் அடுத்த கட்ட அற்புத பயிற்சி
ஒவ்வொரு செயல் பாடும் ஏதோ ஒரு உந்தலால், இனம் தெரியாத தவிப்பால், நடக்கிறது.. அந்த உந்தல் தவிப்பு சில நேரங்களில் மட்டுமே சற்று தெளிவாக தெரியும்.. பெரும்பாலான மற்ற நேரங்களில் அந்த தவிப்பும் உந்தலும் தனது தோன்றத்தை தெளிவாக காட்டாது.. அதனால் இனம் தெரியாத ஏதோ ஒரு தவிப்பில் ஏதோ ஒரு காரியம் நடைபெறும்.. பெரும் பாலான கம்பெனி மீட்டிங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் எந்த காரணத்திற்காக ஏற்பாடு செய்யப் பட்டதோ அதிலிருந்து பெரும் பாலும் மாறுபட்டே நடக்கும்.... திசை மாறி போன அவைகள் பிரச்சனைகளை தீர்க்காமல் ஆணவ சம்பந்தப் பட்ட பிரச்சனைகளில் சிக்கி வேறு புதிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டே போகும்.. அதற்கு முக்கிய காரணம் ஆதிக்க எண்ணம் கொண்ட மனம் பிளவு பட்டு அந்த அந்த பிளவுக்கு ஏற்றால் போல் புது புது காரணங்களை தேடி கண்டு பிடித்து, அற்ப காரணங்களை எல்லாம் பூதகரமாக ஆக்கி விடும்... மகா பாரதத்தில் திரௌபதியின் அந்த சிரிப்பு ஒன்று தான் மற்றைய பிரச்சனைகளை சின்னதாக்கி அது பூதகரமாக ஆகி, பாரத போருக்கு வழி வகுத்தது...

எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையில் வெளிபடும் அககுருவின் துணையோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது, அது புது பிரச்சனைகளை எழ செய்யாமல் பழைய பிரச்சனைகளையும் தீர்த்து விடும்... உருவாவதற்கும் வெளிப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. இல்லாதது ஒன்று தோற்றத்திற்கு வந்தால் அது கருவாகி உருவாகி வந்தது எனலாம்.. ஏற்கனவே உள்ள ஒன்று மறைக்கப் பட்டதின் விளைவாக தோற்றத்திற்கு வராத ஒன்று, அந்த மறைப்பு நீங்கிய உடன் அதன் தோற்றம் காணப் படுவதே வெளிப்படுவது..

வாசியோகப் பயிற்சியே அகநான் ஆகிய அக குருவை வெளிப் படுத்துவதே.. இதில் அகநான் அககுரு என சுட்டி காட்டப் படும் பொருளாக ஒன்று இருந்தால் மட்டுமே மனம் ஏற்றுக் கொள்ளும்.. அதுவே நாம் என்ற பெரும் உண்மையை சொன்னால், மனம் ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது... ஒன்று சேர ஒருமை பட மனம் ஒரு போதும் சம்மதம் தெரிவிக்காது.... அதனால் தான் மனம் அற்ற நிலையை உணரவேண்டிய அவசியம் ஆகிறது... அதில் மட்டுமே அக நான் வெளிபடுகிறது... ஒரு வேலையை மனதாலும் செய்யலாம்.. அக நான் மூலமும் செய்யலாம்.. ஒரு காரியத்தை மனதால் செய்தால் அது வேலை.. அதே காரியத்தை அகநான் மூலம் செய்தால் அது வேல்.. சற்று புரிவதற்கு கடினமாக இருக்கலாம்.. தெளிவு தரும் தமிழ் நிலை ஒன்றே இதற்கு சரியான பதில் கூற முடியும்..

வேலையை பிரித்தால் வேல்+ஐ எனலாம்.. வேல் என்பதில் வேந்தனாகிய இறைவன் லயமாகி செய்யும் ஒன்று.. அது தெய்வீகமானது.. அதில் ஐ என்ற பஞ்ச பூதங்களில் ஒன்றான மனம் ஐக்கியமாகி மிக அதிக அளவில் பங்கு கொள்ளும் போது, அந்த இறை செயலில் பிரிவினைகள்,களங்கங்கள் கலந்து குறைபட்டு போகிறது... எந்த வேலையும் அது கடவுளையே பிரார்த்தனை பண்ணக்கூடிய வேலையாக இருந்தாலும், மனதால் செய்யப் படுவதால், சத் விசாரத்தில் நன்கு ஆராயும் போது அதில் களங்கம் இருக்கவே செய்யும்.... அதே காரியத்தை அகநான் மூலம் செய்யும் போது அதன் தன்மை புனிதமானதாகவும் மிக சரியாகவும் இருக்கும்... அதே நேரத்தில் அகநான் உணர்வு வளரவும் செய்யும்.. இதனால் செயல் பாட்டில் துல்லிதம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும்.. அகநான் உணர்வு தோன்றும் பொழுது அது நம்மில் மகன் தோன்றுகின்றான்.. ஒரு காரியத்தை அகநானே புறத்தே செய்யும் பொழுது முருகன் வெளிப்படுகிறான்.. இதனை முன் பதிவுகளில் பார்க்கலாம்...

முருகன் என்றால் அழகு என்பர்.. முருக நிலையிலே செய்யப் படும் வேலை எல்லாம் வேலை அல்ல.. அது வேல் நிலை.. அதாவது வேந்தனே செய்யும் காரியம்.. ஆகவே அதில் முழுமையான அழகு தன்மை நிறைந்து இருக்கும்.. முருகன் கையில் வேல்.. ஆம் முருக நிலையிலே செய்யும் அனைத்தும் வெற்றி வேல் ஆக இருக்கும்.. ஏனென்றால் வேல் என்ற வேலையில் எந்த குறை பாடும் இல்லாததால் அது வெற்றி ஒன்றையே தரும்... அது என்றும் வெற்றி வேல் தான்.. மரண தேவனான தோன்றாநிலையில் இருக்கும் சிவனாரின் நெற்றி கண் வழியாக பெரும் கனலாக வரும் முருக சக்தி என்றும் வெற்றியையே தரும்.. அதே போல் மரண நிலைக்கு ஒத்த தோன்றா நிலையில் முருக நிலையில் உள்ள அக நான் வெளிப்பட்டு ஒரு காரியத்தை பண்ணும் போது அது முழுமையான வெற்றியே தரும்.. மலை ஏறும் பயிற்சியில் தோன்றா நிலையில் வெளிப்படும் அக நானால் ஒரு காரியத்தை அன்பர்கள் செய்ய முயலுமாறு வேண்டுகின்றனன்.. அப்படி செய்யும் எந்த ஒர் காரியமும் வெற்றி ஒன்றையே தரும் என்பதை அன்பர்கள் உறுதி பட நம்பலாம்... நிறை நிலை மனிதன் ஆவது அப்படி ஒரு கடினமானது அல்ல.. சேரும் இடம் அறிந்து, இதனை இவன் முடிப்பான் என்று அதனை அவனாகிய அகநானிடம் ஒப்படைக்கும் போது எல்லாம் செயல் கூடும் என்பது நிகழ் கால உண்மை...

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி இரண்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி இரண்டு
********************************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி:-- தோன்றா நிலை என்பது அமைதி நிலையா ?
தோன்றா நிலை என்பது அமைதி நிலைதான்.. ஆனால் அமைதி நிலை எல்லாம் தோன்றா நிலை கிடையாது.. தோன்றா நிலை தரும் அமைதிக்கு எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது.. அமைதியை தேடி, சுற்றுலா தலங்கள் கோவில்கள் பிரார்த்தனை தலங்கள், மத சார்புள்ள இடங்கள், மடாலயங்கள், இயற்கை காட்சிகள் நிறைந்த மலை வாசஸ்தலங்கள், சென்று அலைவோர் எத்தனை நாட்கள், அவர்கள் அங்கே அமைதியாக இருக்க முடிகிறது என்பது ஒரு மிக பெரிய கேள்வி குறி... ஐந்தாறு நாட்களிலேயே அவர்களீடம் ஒரு பெரும் தவிப்பு ஏற்பட தொடங்குகிறது.. ஏதாவது ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்ற தவிப்பு இருப்பதில்லை.. எதையாவது ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்ற தவிப்பு தான் இருக்கும்... ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்பதற்கும், எதையாவது ஒன்றை பண்ண வேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... ஏதாவது ஒன்றை பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் மனிதர்கள் தன் நிலை குலைந்து போகிறார்கள்.. நன்றாக நாம் சிந்தித்தால், மனிதர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒன்றை பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்.. இதில் தேவைகள் குறிக்கோள்கள் எதுவும் இருப்பதில்லை.. திசை மாறி போவதே மனித இயல்பாய் இருக்கிறது... அப்படி சூழ்நிலைகளால் தூண்டப் பட்ட அமைதியால், மனிதன் இழந்த இழப்பிற்கு, அளவே இல்லை.. அதனால் தான் புற அமைதியில் எல்லாம் தோன்றா நிலை இல்லை என்பது.. இந்த உண்மை மனித குலத்திற்கு திகைப்பு தருவதாகவும், வியப்பு தருவதாக இருக்கலாம்.. ஆனால் உண்மை என்றும் உண்மை தான்..

ஆனால் தோன்றா நிலையில் உள்ள அமைதி என்பது மிக தெய்வீகமானது.. உண்மையானது.. நிரந்தரமானது.. இந்த தோன்றா நிலையில் உள்ள அமைதி, அண்ட ஆற்றல் வரவுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தி, உணர்வு மயமான பேரின்ப நிலையை ஏற்படுத்தக் கூடியது.. மனம், தான் செயல் படுவதற்காக ஆற்றலை தேடும் இடம், திசை மாறிய, தவறான முயற்சி தான் வெளிச்சத்தை நோக்கி பாய்வது.. அதற்கு வேண்டிய ஆற்றல் தோன்றா நிலையில் உள்ள கனலில் இருப்பதை அறியாது பொறி புலன் வாயிலாக வெளியே வெளிச்சத்தில் பாய்கிறது.. மனம் ஆற்றலை தேடி தன்னுக்குள் மறைந்து இருக்கும் கனலில் ஆற்றல் மறைந்துள்ளது என அறியாமல் இருக்கிறது,,, ஆனால் அந்த கனல் ஆற்றலையே பயன் படுத்திக் கொண்டு, ஆற்றலை வெளியே வெளிச்சத்தில் தேடும் அவல நிலையை மனம் செய்து கொண்டு இருக்கிறது... கடல் நீரிரே வாழும் மீன் தன் அறியாமையால் வாழ்நாள் முழுமைக்கும் நீரை தேடி கொண்டே இருந்ததாம்... நீரை விட்டு வெளியே வர சந்தர்ப்பம் கிடைக்க வில்லையாதலால் கடல் மீனானது நீரை தேடி கொண்டே இருந்தது போல் கனல் இருக்கும் தோன்றா நிலையை மனம் அனுபவப் படவில்லையாதலால், நீரை தேடும் கடல் மீனை போல் கனலால் வாழும் மனம் வெளியே வெளிச்சத்தில் கனலை தேடிக் கொண்டு இருக்கிறது..

எப்பொழுது மனம் வெளிச்சத்திலிருந்து விடுபட்டு, தான் இருக்கும் நிலையே கனல் என்று உணர்ந்து கொள்ளும் போது, அது தேடலை நிறுத்துகிறது... அப்படி தேடலை நிறுத்தும் போது, முதலில் கனலை, விரையம் பண்ணுவதை மனம் நிறுத்துகிறது... மேலும் கனல் பெருக்கம் அடைவதற்கு உதவுகிறது.. ஆற்றல் பெருக்கத்தால் மட்டுமே ஆனந்தம் மேலும் மேலும் கைகூடும் என்ற உண்மையை எப்பொழுதும் மறக்கக் கூடாது... இந்த நிலையில், தோன்றாநிலையில் வெளிச்சம் நீங்கிய, எண்ணம் ஆதிக்கமற்ற மனம் ஆனந்த பரவச உணர்வு அடைகிறது.. அந்த ஆனந்த பரவச உணர்வில் மனம் எந்த தவிப்பும் கொள்வதில்லை.. அந்த உணர்வு நித்தியமானது.. அந்த உள் அமைதியை மனம் பூரணமாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் அதன் தவிப்பு முற்றிலும் நீங்கப் பெற்று, முழுமையான நிறைவினை கனலால் அடைகிறது...

ஆனால் வெளியே சூழ்நிலைகளால் உண்டாக்கப் பட்ட, வெளிச்சத்தில் உருவான, அமைதியால், பூரண நிறைவு கொள்ள முடியாத மனம் சிறிது நேரத்தில், அதற்கு தவிப்பு ஏற்பட்டு கனல் ஆற்றலின் குறைபாடு ஏற்படுவதால், புலன் பொறிகள் வாயிலாக வெளியே செல்ல துடித்து தேடுதலை துவக்கி துன்பம் அடைகிறது.. இதன் மூலம் மனதிற்கு தோன்றா நிலை அவசியமாகிறது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.. மனம் தன் சுய முயற்சியால் தோன்றா நிலைக்கு ஒரு போதும் செல்ல முடியாது.. எப்படி கடல் மீனானது நீரை விட்டு வெளியே வர முடியாதோ, அதே போல் வெளிச்சத்தில் வாழும் மனம் வெளிச்சத்தை விட்டு தோன்றா நிலைக்கு வர இயலாது... வாசியோகம் என்பது, முடியாத அந்த மனதிற்கு தோன்றா நிலைக்கு வர செய்யும் ஒரு உபாயமே..

தேக ஆற்றலை அதிகம் செலவு செய்யும் போது தேகம் தன் ஆற்றலில் குறைபாடு காண்கிறது.. இந்த நிலையில் மனம் இயங்குவதற்கு கூட ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்து போகிறது... குறைவு பட்ட தேக ஆற்றலை ஈடு செய்ய அண்ட பேரறிவு விரைவான அழுத்தமான இளைப்பு போன்ற சுவாசத்தின் மூலம் கனலாக ஆற்றலை தேகத்தில் புகுத்தும் போது, மனம், கனலை நோக்கி திரும்புகிறது.. வெளிச்சம் நீங்கிய அந்த ஓரிரு நிமிடம் மனம் ஒரு இனம் தெரியாத தோன்றா நிலையான கனல் அனுபவத்தை பெறுகிறது..

ஆரம்பத்தில் மலை ஏற்றம் பயிலும் போது அப்படி ஒரு இனம் தெரியாத அனுபவத்தை அனுபவிக்கும் மனம், தொடர்ந்து அது போல் அனுபவிக்கும் போது தோன்றா நிலையையும் அதில் கலக்கும் கனலையும் விரைவில் அடையாளம் தெரிந்து கொண்டு பரவசம் அடைகிறது.. தன் சுய இயல்பு நிலையே, ஆதார நிலையே கனல் என அறிந்து கொண்ட மனம் தேடலை நிறுத்தி உண்மையான நிறைவு கொண்டு அமைதி அடைகிறது.. அந்த அமைதி தான் உண்மையான அமைதி.. மற்ற புற சூழ்நிலைகளால் உண்டான அமைதி பொய்யானது.. அது தோன்றா நிலையை ஒருபோதும் காட்டாது.. கனல் பெருக்கத்திற்கும் உதவாது... அது உயிருக்கும் தேகத்திற்கும் தீமை ஒன்றையே தரும்.. 
 
ஆகவே தான் தோன்றா நிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது... தி என்ற எழுத்து முழுமையாக ( த்+இ ) இருத்தல் எனப்படும்.. தேடுதலை நீக்கிய மனம் தன் இருப்பிடத்தை விட்டு விலகாது, வெளிச்சத்தை நோக்கி நகராமல் தன் இருப்பிடத்தில் முழுமையாக இருத்தல் எனலாம்... அந்த சூழ்நிலையை அமைப்பது எதுவோ அதாவது அமைதியை ஏற்படுத்துவது எதுவோ அது தோன்றா நிலையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.. இதனை அன்பர்கள் நன்கு புரிந்து இருப்பார்கள் என நம்புகின்றேன்.. தோன்றா நிலை ஏற்படுத்தும் அமைதியை பணம் பதவியால் நிச்சயம் தர இயலாது.. அந்த அமைதி ஏற்படுத்தும் நிறைவுக்காக, பணம் பதவிக்கு அலைவது முரண் பட்ட செயல்..

கோடீஸ்வரன் அம்பானிக்கு 600 க்கு மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளனவாம்.. இன்னும் நிறைவு கொள்ளாததால் புது புது மாடல் கார்களுக்கு ஆர்டர்கள் வேறு.. என்றுமே நிறைவு, அமைதி கொள்ளாத நிலைதான் அம்பானிக்கும், அம்பானி போன்றவர்களுக்கும்.. ஆகவே நாம் சேரும் இடம் அறிந்து சேர்ந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டுமே பெற முனைவோமாக...