Saturday 7 November 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி மூன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி மூன்று
************************************************************************************
அக நானே செய்யும் அடுத்த கட்ட அற்புத பயிற்சி
ஒவ்வொரு செயல் பாடும் ஏதோ ஒரு உந்தலால், இனம் தெரியாத தவிப்பால், நடக்கிறது.. அந்த உந்தல் தவிப்பு சில நேரங்களில் மட்டுமே சற்று தெளிவாக தெரியும்.. பெரும்பாலான மற்ற நேரங்களில் அந்த தவிப்பும் உந்தலும் தனது தோன்றத்தை தெளிவாக காட்டாது.. அதனால் இனம் தெரியாத ஏதோ ஒரு தவிப்பில் ஏதோ ஒரு காரியம் நடைபெறும்.. பெரும் பாலான கம்பெனி மீட்டிங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் எந்த காரணத்திற்காக ஏற்பாடு செய்யப் பட்டதோ அதிலிருந்து பெரும் பாலும் மாறுபட்டே நடக்கும்.... திசை மாறி போன அவைகள் பிரச்சனைகளை தீர்க்காமல் ஆணவ சம்பந்தப் பட்ட பிரச்சனைகளில் சிக்கி வேறு புதிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டே போகும்.. அதற்கு முக்கிய காரணம் ஆதிக்க எண்ணம் கொண்ட மனம் பிளவு பட்டு அந்த அந்த பிளவுக்கு ஏற்றால் போல் புது புது காரணங்களை தேடி கண்டு பிடித்து, அற்ப காரணங்களை எல்லாம் பூதகரமாக ஆக்கி விடும்... மகா பாரதத்தில் திரௌபதியின் அந்த சிரிப்பு ஒன்று தான் மற்றைய பிரச்சனைகளை சின்னதாக்கி அது பூதகரமாக ஆகி, பாரத போருக்கு வழி வகுத்தது...

எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையில் வெளிபடும் அககுருவின் துணையோடு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது, அது புது பிரச்சனைகளை எழ செய்யாமல் பழைய பிரச்சனைகளையும் தீர்த்து விடும்... உருவாவதற்கும் வெளிப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. இல்லாதது ஒன்று தோற்றத்திற்கு வந்தால் அது கருவாகி உருவாகி வந்தது எனலாம்.. ஏற்கனவே உள்ள ஒன்று மறைக்கப் பட்டதின் விளைவாக தோற்றத்திற்கு வராத ஒன்று, அந்த மறைப்பு நீங்கிய உடன் அதன் தோற்றம் காணப் படுவதே வெளிப்படுவது..

வாசியோகப் பயிற்சியே அகநான் ஆகிய அக குருவை வெளிப் படுத்துவதே.. இதில் அகநான் அககுரு என சுட்டி காட்டப் படும் பொருளாக ஒன்று இருந்தால் மட்டுமே மனம் ஏற்றுக் கொள்ளும்.. அதுவே நாம் என்ற பெரும் உண்மையை சொன்னால், மனம் ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது... ஒன்று சேர ஒருமை பட மனம் ஒரு போதும் சம்மதம் தெரிவிக்காது.... அதனால் தான் மனம் அற்ற நிலையை உணரவேண்டிய அவசியம் ஆகிறது... அதில் மட்டுமே அக நான் வெளிபடுகிறது... ஒரு வேலையை மனதாலும் செய்யலாம்.. அக நான் மூலமும் செய்யலாம்.. ஒரு காரியத்தை மனதால் செய்தால் அது வேலை.. அதே காரியத்தை அகநான் மூலம் செய்தால் அது வேல்.. சற்று புரிவதற்கு கடினமாக இருக்கலாம்.. தெளிவு தரும் தமிழ் நிலை ஒன்றே இதற்கு சரியான பதில் கூற முடியும்..

வேலையை பிரித்தால் வேல்+ஐ எனலாம்.. வேல் என்பதில் வேந்தனாகிய இறைவன் லயமாகி செய்யும் ஒன்று.. அது தெய்வீகமானது.. அதில் ஐ என்ற பஞ்ச பூதங்களில் ஒன்றான மனம் ஐக்கியமாகி மிக அதிக அளவில் பங்கு கொள்ளும் போது, அந்த இறை செயலில் பிரிவினைகள்,களங்கங்கள் கலந்து குறைபட்டு போகிறது... எந்த வேலையும் அது கடவுளையே பிரார்த்தனை பண்ணக்கூடிய வேலையாக இருந்தாலும், மனதால் செய்யப் படுவதால், சத் விசாரத்தில் நன்கு ஆராயும் போது அதில் களங்கம் இருக்கவே செய்யும்.... அதே காரியத்தை அகநான் மூலம் செய்யும் போது அதன் தன்மை புனிதமானதாகவும் மிக சரியாகவும் இருக்கும்... அதே நேரத்தில் அகநான் உணர்வு வளரவும் செய்யும்.. இதனால் செயல் பாட்டில் துல்லிதம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும்.. அகநான் உணர்வு தோன்றும் பொழுது அது நம்மில் மகன் தோன்றுகின்றான்.. ஒரு காரியத்தை அகநானே புறத்தே செய்யும் பொழுது முருகன் வெளிப்படுகிறான்.. இதனை முன் பதிவுகளில் பார்க்கலாம்...

முருகன் என்றால் அழகு என்பர்.. முருக நிலையிலே செய்யப் படும் வேலை எல்லாம் வேலை அல்ல.. அது வேல் நிலை.. அதாவது வேந்தனே செய்யும் காரியம்.. ஆகவே அதில் முழுமையான அழகு தன்மை நிறைந்து இருக்கும்.. முருகன் கையில் வேல்.. ஆம் முருக நிலையிலே செய்யும் அனைத்தும் வெற்றி வேல் ஆக இருக்கும்.. ஏனென்றால் வேல் என்ற வேலையில் எந்த குறை பாடும் இல்லாததால் அது வெற்றி ஒன்றையே தரும்... அது என்றும் வெற்றி வேல் தான்.. மரண தேவனான தோன்றாநிலையில் இருக்கும் சிவனாரின் நெற்றி கண் வழியாக பெரும் கனலாக வரும் முருக சக்தி என்றும் வெற்றியையே தரும்.. அதே போல் மரண நிலைக்கு ஒத்த தோன்றா நிலையில் முருக நிலையில் உள்ள அக நான் வெளிப்பட்டு ஒரு காரியத்தை பண்ணும் போது அது முழுமையான வெற்றியே தரும்.. மலை ஏறும் பயிற்சியில் தோன்றா நிலையில் வெளிப்படும் அக நானால் ஒரு காரியத்தை அன்பர்கள் செய்ய முயலுமாறு வேண்டுகின்றனன்.. அப்படி செய்யும் எந்த ஒர் காரியமும் வெற்றி ஒன்றையே தரும் என்பதை அன்பர்கள் உறுதி பட நம்பலாம்... நிறை நிலை மனிதன் ஆவது அப்படி ஒரு கடினமானது அல்ல.. சேரும் இடம் அறிந்து, இதனை இவன் முடிப்பான் என்று அதனை அவனாகிய அகநானிடம் ஒப்படைக்கும் போது எல்லாம் செயல் கூடும் என்பது நிகழ் கால உண்மை...

No comments:

Post a Comment