Saturday 7 November 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி இரண்டு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி இரண்டு
********************************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி:-- தோன்றா நிலை என்பது அமைதி நிலையா ?
தோன்றா நிலை என்பது அமைதி நிலைதான்.. ஆனால் அமைதி நிலை எல்லாம் தோன்றா நிலை கிடையாது.. தோன்றா நிலை தரும் அமைதிக்கு எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது.. அமைதியை தேடி, சுற்றுலா தலங்கள் கோவில்கள் பிரார்த்தனை தலங்கள், மத சார்புள்ள இடங்கள், மடாலயங்கள், இயற்கை காட்சிகள் நிறைந்த மலை வாசஸ்தலங்கள், சென்று அலைவோர் எத்தனை நாட்கள், அவர்கள் அங்கே அமைதியாக இருக்க முடிகிறது என்பது ஒரு மிக பெரிய கேள்வி குறி... ஐந்தாறு நாட்களிலேயே அவர்களீடம் ஒரு பெரும் தவிப்பு ஏற்பட தொடங்குகிறது.. ஏதாவது ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்ற தவிப்பு இருப்பதில்லை.. எதையாவது ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்ற தவிப்பு தான் இருக்கும்... ஒரு காரியத்தை பண்ண வேண்டும் என்பதற்கும், எதையாவது ஒன்றை பண்ண வேண்டும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... ஏதாவது ஒன்றை பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் மனிதர்கள் தன் நிலை குலைந்து போகிறார்கள்.. நன்றாக நாம் சிந்தித்தால், மனிதர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒன்றை பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறார்கள்.. இதில் தேவைகள் குறிக்கோள்கள் எதுவும் இருப்பதில்லை.. திசை மாறி போவதே மனித இயல்பாய் இருக்கிறது... அப்படி சூழ்நிலைகளால் தூண்டப் பட்ட அமைதியால், மனிதன் இழந்த இழப்பிற்கு, அளவே இல்லை.. அதனால் தான் புற அமைதியில் எல்லாம் தோன்றா நிலை இல்லை என்பது.. இந்த உண்மை மனித குலத்திற்கு திகைப்பு தருவதாகவும், வியப்பு தருவதாக இருக்கலாம்.. ஆனால் உண்மை என்றும் உண்மை தான்..

ஆனால் தோன்றா நிலையில் உள்ள அமைதி என்பது மிக தெய்வீகமானது.. உண்மையானது.. நிரந்தரமானது.. இந்த தோன்றா நிலையில் உள்ள அமைதி, அண்ட ஆற்றல் வரவுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தி, உணர்வு மயமான பேரின்ப நிலையை ஏற்படுத்தக் கூடியது.. மனம், தான் செயல் படுவதற்காக ஆற்றலை தேடும் இடம், திசை மாறிய, தவறான முயற்சி தான் வெளிச்சத்தை நோக்கி பாய்வது.. அதற்கு வேண்டிய ஆற்றல் தோன்றா நிலையில் உள்ள கனலில் இருப்பதை அறியாது பொறி புலன் வாயிலாக வெளியே வெளிச்சத்தில் பாய்கிறது.. மனம் ஆற்றலை தேடி தன்னுக்குள் மறைந்து இருக்கும் கனலில் ஆற்றல் மறைந்துள்ளது என அறியாமல் இருக்கிறது,,, ஆனால் அந்த கனல் ஆற்றலையே பயன் படுத்திக் கொண்டு, ஆற்றலை வெளியே வெளிச்சத்தில் தேடும் அவல நிலையை மனம் செய்து கொண்டு இருக்கிறது... கடல் நீரிரே வாழும் மீன் தன் அறியாமையால் வாழ்நாள் முழுமைக்கும் நீரை தேடி கொண்டே இருந்ததாம்... நீரை விட்டு வெளியே வர சந்தர்ப்பம் கிடைக்க வில்லையாதலால் கடல் மீனானது நீரை தேடி கொண்டே இருந்தது போல் கனல் இருக்கும் தோன்றா நிலையை மனம் அனுபவப் படவில்லையாதலால், நீரை தேடும் கடல் மீனை போல் கனலால் வாழும் மனம் வெளியே வெளிச்சத்தில் கனலை தேடிக் கொண்டு இருக்கிறது..

எப்பொழுது மனம் வெளிச்சத்திலிருந்து விடுபட்டு, தான் இருக்கும் நிலையே கனல் என்று உணர்ந்து கொள்ளும் போது, அது தேடலை நிறுத்துகிறது... அப்படி தேடலை நிறுத்தும் போது, முதலில் கனலை, விரையம் பண்ணுவதை மனம் நிறுத்துகிறது... மேலும் கனல் பெருக்கம் அடைவதற்கு உதவுகிறது.. ஆற்றல் பெருக்கத்தால் மட்டுமே ஆனந்தம் மேலும் மேலும் கைகூடும் என்ற உண்மையை எப்பொழுதும் மறக்கக் கூடாது... இந்த நிலையில், தோன்றாநிலையில் வெளிச்சம் நீங்கிய, எண்ணம் ஆதிக்கமற்ற மனம் ஆனந்த பரவச உணர்வு அடைகிறது.. அந்த ஆனந்த பரவச உணர்வில் மனம் எந்த தவிப்பும் கொள்வதில்லை.. அந்த உணர்வு நித்தியமானது.. அந்த உள் அமைதியை மனம் பூரணமாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் அதன் தவிப்பு முற்றிலும் நீங்கப் பெற்று, முழுமையான நிறைவினை கனலால் அடைகிறது...

ஆனால் வெளியே சூழ்நிலைகளால் உண்டாக்கப் பட்ட, வெளிச்சத்தில் உருவான, அமைதியால், பூரண நிறைவு கொள்ள முடியாத மனம் சிறிது நேரத்தில், அதற்கு தவிப்பு ஏற்பட்டு கனல் ஆற்றலின் குறைபாடு ஏற்படுவதால், புலன் பொறிகள் வாயிலாக வெளியே செல்ல துடித்து தேடுதலை துவக்கி துன்பம் அடைகிறது.. இதன் மூலம் மனதிற்கு தோன்றா நிலை அவசியமாகிறது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொண்டோம் என நினைக்கின்றேன்.. மனம் தன் சுய முயற்சியால் தோன்றா நிலைக்கு ஒரு போதும் செல்ல முடியாது.. எப்படி கடல் மீனானது நீரை விட்டு வெளியே வர முடியாதோ, அதே போல் வெளிச்சத்தில் வாழும் மனம் வெளிச்சத்தை விட்டு தோன்றா நிலைக்கு வர இயலாது... வாசியோகம் என்பது, முடியாத அந்த மனதிற்கு தோன்றா நிலைக்கு வர செய்யும் ஒரு உபாயமே..

தேக ஆற்றலை அதிகம் செலவு செய்யும் போது தேகம் தன் ஆற்றலில் குறைபாடு காண்கிறது.. இந்த நிலையில் மனம் இயங்குவதற்கு கூட ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்து போகிறது... குறைவு பட்ட தேக ஆற்றலை ஈடு செய்ய அண்ட பேரறிவு விரைவான அழுத்தமான இளைப்பு போன்ற சுவாசத்தின் மூலம் கனலாக ஆற்றலை தேகத்தில் புகுத்தும் போது, மனம், கனலை நோக்கி திரும்புகிறது.. வெளிச்சம் நீங்கிய அந்த ஓரிரு நிமிடம் மனம் ஒரு இனம் தெரியாத தோன்றா நிலையான கனல் அனுபவத்தை பெறுகிறது..

ஆரம்பத்தில் மலை ஏற்றம் பயிலும் போது அப்படி ஒரு இனம் தெரியாத அனுபவத்தை அனுபவிக்கும் மனம், தொடர்ந்து அது போல் அனுபவிக்கும் போது தோன்றா நிலையையும் அதில் கலக்கும் கனலையும் விரைவில் அடையாளம் தெரிந்து கொண்டு பரவசம் அடைகிறது.. தன் சுய இயல்பு நிலையே, ஆதார நிலையே கனல் என அறிந்து கொண்ட மனம் தேடலை நிறுத்தி உண்மையான நிறைவு கொண்டு அமைதி அடைகிறது.. அந்த அமைதி தான் உண்மையான அமைதி.. மற்ற புற சூழ்நிலைகளால் உண்டான அமைதி பொய்யானது.. அது தோன்றா நிலையை ஒருபோதும் காட்டாது.. கனல் பெருக்கத்திற்கும் உதவாது... அது உயிருக்கும் தேகத்திற்கும் தீமை ஒன்றையே தரும்.. 
 
ஆகவே தான் தோன்றா நிலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது... தி என்ற எழுத்து முழுமையாக ( த்+இ ) இருத்தல் எனப்படும்.. தேடுதலை நீக்கிய மனம் தன் இருப்பிடத்தை விட்டு விலகாது, வெளிச்சத்தை நோக்கி நகராமல் தன் இருப்பிடத்தில் முழுமையாக இருத்தல் எனலாம்... அந்த சூழ்நிலையை அமைப்பது எதுவோ அதாவது அமைதியை ஏற்படுத்துவது எதுவோ அது தோன்றா நிலையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.. இதனை அன்பர்கள் நன்கு புரிந்து இருப்பார்கள் என நம்புகின்றேன்.. தோன்றா நிலை ஏற்படுத்தும் அமைதியை பணம் பதவியால் நிச்சயம் தர இயலாது.. அந்த அமைதி ஏற்படுத்தும் நிறைவுக்காக, பணம் பதவிக்கு அலைவது முரண் பட்ட செயல்..

கோடீஸ்வரன் அம்பானிக்கு 600 க்கு மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளனவாம்.. இன்னும் நிறைவு கொள்ளாததால் புது புது மாடல் கார்களுக்கு ஆர்டர்கள் வேறு.. என்றுமே நிறைவு, அமைதி கொள்ளாத நிலைதான் அம்பானிக்கும், அம்பானி போன்றவர்களுக்கும்.. ஆகவே நாம் சேரும் இடம் அறிந்து சேர்ந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டுமே பெற முனைவோமாக...

No comments:

Post a Comment