Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி ஒன்பது (28-11-15 )

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி ஒன்பது (28-11-15 )
**********************************************************************************
ஒரு அன்பரின் கேள்வி:-- அய்யா இந்த முறை விழிப்பு நிலையில் வேகமாக அல்லது மெதுவாக படி ஏறி இறங்க வேண்டுமா என்ற முறையினை தெரிவியுங்கள் அய்யா

விழிப்பு நிலை என்பது ஒன்று மனதிற்கு கட்டுப் பட்ட விழிப்பு நிலை.. மற்றொன்று மனதிற்கு கட்டு படாத விழிப்பு நிலை.. இந்த மனதிற்கு கட்டுப் பட்ட விழிப்பு நிலை என்பது மனம் எப்பொழுது எல்லாம் தோன்றா நிலைக்கு சென்று செயல் இழந்து போகிறதோ அப்பொழுது விழிப்பு நிலை சுதந்திரமாக கட்டுபடாத நிலையில் செயல் பட தொடங்கும்... இந்த வகையில் தோன்றா நிலை நமக்கு மிக மிக அவசியம் ஆகிறது... இந்த மாதிரி தோன்றா நிலை உருவாகும் சூழ் நிலையை ஏற்படுத்தி மனதை செயல் இழக்கச் செய்து, விழிப்பு நிலை பலப் படுத்தும் பயிற்சியை தான் நாம் மூச்சுப் பயிற்சி மூலம் மலை ஏறும் பயிற்சியிலும் மற்ற பயிற்சிகளிலும் செய்து கொண்டு வருகிறோம்.. இப்படியாக பயின்று பலப் பட்ட விழிப்பு நிலையை மனம் ஒருபோதும் கட்டுப் படுத்த முடியாது.. அதைதான் நாம் அகநான் என்கின்றோம்.. விழிப்பை தன் வசம் கொண்டுள்ள மனதை நாம் புற நான் என்கின்றோம்..

ஆகவே தோன்றா நிலை மூலம் விழிப்பு நிலை பெருக்கம் பலம் அடைவதே முக்கிய நோக்கம்... அதற்காக விரைவாக மெதுவாக மலை ஏற்றத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.. புறமனம் எந்த வகையிலாவது செயல்பாட்டின் மூலம் விழிப்பு நிலையை தன் அடிமையாக்கவே வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்... விரைவாகவோ அல்லது மெதுவாகவோ விழிப்பு நிலை ஏற்படாத வகையில் தேகத்தை புறத்தே இந்த மனம் இயக்க முயற்சி செய்யும்.. விழிப்பு நிலை மனதிற்கு கட்டுப் பட்ட நிலையில் இருந்த போதிலும் தேக உள் உணர்வில் விழிப்பு நிலை சுதந்திரமாகவே உள்ளது.. தேக உணர்வில் இருப்பது என்பது அகத்தில் சுதந்தரமான விழிப்பு நிலையில் இருப்பதற்கு சமம்.. ஆனால் அந்த உணர்வில் மனம் இருக்க விடாது... உணர்வை விட்டு வெளியே வரவே துடிக்கும்.. இதனால் தான் எதையும் நாம் உணர்வோடு உண்ணவோ எதையும் உணர்வு மயமாய் அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.. மறைமுகமான விழிப்பு நிலை உதவி இல்லையேல், மனதின் நிலைப் பாடு சீர் குலைந்து போய் விடும்.. தன்னை நிலை நிறுத்த தனக்கு மறைமுகமாக உதவும் தோன்றா நிலையில் உள்ள விழிப்பு நிலையை மனம் தோன்றும் நிலையில் உள்ள உலக பொருள்களிடத்தில் தேடுகிறது... அந்த தேடலில் தோல்வியை மட்டுமே மனம் அடைகிறது.. இது தான் மிக பெரிய சிக்கலாக நமது உயிர்நிலையான ஆன்மாவுக்கு உள்ளது...

நமது பயிற்சியில் உடன்பாடு சுவாசத்தின் மூலம் தோன்றா நிலை என்ற சூழ்நிலையை உருவாக்குகின்றோம்... அந்த நிலையில் உணர்வோடு மனம் பொருந்தி இருக்கும் கால அளவினை விரிவாக்கம் செய்கின்றோம்.. அதனால் விழிப்பு நிலையோடு இருக்கும் கால அளவு வளருகிறது... மூன்றாவது பயிற்சியில் உணர்வோடு ஆழ்ந்து இருந்து விழிப்பு நிலையின் கால அளவை வளர்த்து அகநானில் மையம் கொள்ள முயற்சி செய்கிறோம்... இது உடன்பாடு சுவாசத்தை தாண்டி தோன்றா நிலையில் அகப்படும் தன்னில் தானாய் இருக்கும் அகநான் அனுபவம் காண்பதாகும்.. சில ஆரம்ப பயிற்சிகளில் நாம் நன்கு பயின்று தேறி வரவில்லை என்றால் மேல் நிலை பயிற்சிகள் புலப்படாமல் போய்விடும்... நமது பயிற்சியில் சற்று வேகம் அதிகமே.. அதனால் தான் அன்பர்களை மிக கவனமாக விடாமல் தொடர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்... தேறி வந்தவர்கள் உடன்பாடு சுவாசத்தில் அதிக கவனம் செலுத்த தேவை இல்லை.. தேறாதவர்களுக்கு அது மிகவும் அவசியம்... தேறியவர்களுக்கு உணர்வில் ஆழ்நிலையில் அகநானில் மையம் கொள்ளும் பயிற்சியாக மூன்றாம் நிலையை தொடர வேண்டும்... தேறாதவர்கள் இன்னும் சற்று அதிகமாக முயன்று தோன்றா நிலையை உருவாக்கி பின் உணர்வில் ஆழ்ந்து தேறியவர்களை போல் அகநான் அனுபவத்தில் மையம் கொண்டு தேறியவர்களுக்கு சமமாக வர முயற்சி செய்ய வேண்டும்... நான்காம் நிலை பயிற்சி சற்று நுணுக்கமானது.. விசித்திரமானது.. அதோடு சரியை நிலை பயிற்சி முடிவுக்கு வந்து கிரியை நிலை பயிற்சி தொடங்கும்.. இன்னும் இரண்டு வாரங்களில் நான்காம் நிலை பயிற்சிக்கு தங்களை பண்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகின்றனன்..

No comments:

Post a Comment