Monday 11 January 2016

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பத்து ( 29-11-15 )

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி பத்து ( 29-11-15 )
****************************************************************************
இன்று பயமுறுத்தும் வானிலையும், வானிலை மைய எச்சரிக்கையும் இருந்தாலும் மிதமான மழைக்கு நடுவே அன்பர்கள் குறித்த நேரத்தில் குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்து 6.30 மணியிலிருந்து பயிற்சியினை தொடங்கினார்கள்... இரண்டு மூன்று அன்பர்கள் உடன் பாடு சுவாசத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதிக நேரம் அமர்ந்து இருந்தது தியானம் என்ற பெயரில் ஒரு குட்டி தூக்கம் அல்லது அரை தூக்கம் தூங்குவது போல் இருந்தது... தோன்றா நிலையிலே மையம் கொள்ள வைக்கும் உணர்வு மயமான பயிற்சியில் அண்ட ஆற்றல் பெருக்கத்தில் ஊக்கம் மிகுந்து காணப் படவேண்டிய தருணத்தில் இப்படி அதிக நேரம் அமர்ந்து இருந்தது முரண் பாடாக தெரிந்தது.. மூச்சு இளைப்பு வராமலேயே மூச்சு இளைப்பு வந்தது போலவும் அதற்கு உடன்பாடு சுவாசம் அவசியம் போலவும் மனம் விரித்த வலையில் விழுந்து விட்டார்கள் போல் தெரிந்தது... உணர்வு மயமான பயிற்சி, உடன் பாடு சுவாசப் பயிற்சியில் தேறி வந்தவர்களுக்கு தான் நன்றாக கை கூடும்.. பெரும்பாலான அன்பர்கள் தொடர்ந்து ஓய்வு இன்றி ஊக்கத்தோடு சற்றும் மூச்சு இளைப்பு ஏற்படாமல் உணர்வு மயமாய் மலை ஏறி இறங்கி பயின்ற தோரணை அவர்கள் ஆறு வார பயிற்சியில் உடன்பாடு சுவாசத்தில் தேறிய நிலையை காட்டியது...

7.20 முதல் 7.35 மணி வரை நடந்த வகுப்பில் உணர்வோடு மலை ஏறும் பயிற்சியின் குறிக்கோள் எடுத்து சொல்லப் பட்டது.. உணர்வை உணருபவன் யார் என்ற கேள்வியின் பதிலை பெறுகின்ற போது அது தன்னில் தானாய் இருக்கும் அகநானே என்பதை எடுத்துரைக்கப் பட்டது.. இந்த வார பயிற்சியில் உணர்வை உணருபவனை பிடித்தால் அது அகநானே என்பதை அனுபவப் படவும் அவனே நம்மில் செங்கோல் ஏந்திய அரசன் எனவும் அவன் தோன்றா நிலை என்ற வலுவான எண்ண ஆதிக்கங்கள் இல்லாத அக கோட்டைக்குள்ளே அரசு செய்யும் அரசன் எனவும் எடுத்துரைக்கப் பட்டது.. உணர்வு பயிற்சியின் மூலம் அகநான் நிலையை பிடிக்க வேண்டும் என்பதையும், உணர்வே புற நானிலிருந்து அகநானுக்கு முன்னோக்கி பயணப் படும் பாதை என எடுத்துரைக்கப் பட்டது.. அடிபடுதல், நெருப்பு சுடுதல், மிளகாய் போன்ற மிக காரமான உணவு ஏற்கும் போது மட்டுமே வல்லின உணர்வில் பழக்கப் பட்ட மனம் மெல்லின உணர்வினை அலட்சியப் படுத்துவதால் மனம் கனலை நோக்கி பயணப் பட சற்று சிரமப் படும் என்பதை உணர்த்தப் பட்டது.. சாதாரண நடை, இயக்கங்களில் மனதை கனலின் பக்கம் திரும்பும் படியாக உணர்வில் நாம் இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது..

உணர்வு மயமாய் இருக்கும் போது ஒருவர் எப்படி ஊக்கத்துடன் இருப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட பின் சில அன்பர்கள் அதை மனதில் எண்ண பதிவோடு, சிரமத்துடன் விடாமல் மலை ஏறி வியர்வை கொட்ட வியர்த்த நிலைக்கு ஆளானது சற்று முரண்பாடாக இருந்தது.. ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக ஏறி இறங்கி பயில வேண்டிய அவர்கள் ஏதோ ஒரு நிலைக்கு தங்களை ஆளாக்கி கொண்டு குறிக் கோளை விட்டு நகர்ந்து சென்றது போல் இருந்தது.. வகுப்பில் சொன்ன கருத்தை மனதால் பிடித்தார்களே தவிர தங்கள் தேக உணர்வுக்கு மதிப்பு அளிக்க தவறி விட்டது போல் தோன்றியது... அதனால் மன ஆதிக்கத்திற்கு ஆளானார்களே தவிர விழிப்பின் பலம் பெறவில்லை போல் தோன்றியது.. இது சுற்றுபுற சூழ்நிலையில் கிடைக்கும் அறிவுரைகளை மையப் படுத்தி விழிப்பு நிலையிலிருந்து விலகும் மனதின் செயல் பாடு ஆகும்.. இப்படிதான் புறநான் செய்யும் எதுவும் முறையற்ற ஒன்றாக இருக்கும்.. இதிலிருந்து விடுபடவே எந்த எண்ண ஆதிக்கமும் இல்லாத தோன்றா நிலையால் ஆன வலுவான கோட்டைகுள்ளே, அரசு செய்யும், உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் அகநான் நிலையை கைபிடிக்க வேண்டும் என மர்ம யோகத்தில் வற்புறுத்துவது.. தோன்றா நிலையில் குடி இருக்கும் அகநான், மனமாகிய புற நானுக்கு தோன்றவே தோன்றாது.. புற நானுக்கு தோன்றா நிலையில், அகத்திலே அருள் ஆட்சி செய்யும் அகநான் அனுபவநிலையில் இயங்குவதால், அகநானில் செயல் படுபவர்களை மர்ம யோகிகள் எனப் படுகிறார்கள்.. அகநானில் இயங்கிய நம் தமிழ் யோக அரசர்கள் பிரமாண்டமான கோவில்களை கட்டியும் தங்களை விளம்பர படுத்தவோ அடையாளப் படுத்தவோ எந்த முயற்சியும் செய்யாதது அவர்களின் தியாகமும் அன்பின் பண்பின் வெளிப்பாடே ஆகும்.. ஆனால் இன்றைய கால கட்டம் அதற்கு முற்றிலும் முரண் பாடாய் இருப்பது வேறு விசயம்..

இப்படியாக சிறுக சிறுக பயணப் பட்டு அகநானில் அமரும் நிலைக்கு வருவோமாக.. காரணம் அகநான் மட்டுமே அண்ட ஆற்றலோடு நேரடி தொடர்பும் அண்ட ஆற்றலையே கையாளும் வல்லமையும் உடையது.. சிறு சிறு தோல்விகளில் துவண்டு போகாமல் தோல்விகளில் பாடம் கற்று உயர் நிலைக்கு உயருவோமாக...

No comments:

Post a Comment