Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஏழு

மர்ம யோகத்தில் கனல் வீரம்:-- பகுதி இருபத்தி ஏழு
****************************************************** ***********************
ஒரு அன்பரின் முகமையான கேள்வி:---
 ஐயா,சரியையில் ஞானம் என்ற நிலையை அடையாளம் காணும் போது , ஏன் கதி சுவாசம் ,கனல்,கரு சுவாசம் என்ற 2,3,4 நிலை தேவைபடுகிறது? அதாவது 16 நிலையில் முதல் 4 நிலையில் ஞானம் உணர படும் போது ஏன் மற்ற 12 நிலை தேவைபடுகிறது??

முதலில் ஞானம் என்பது தெளிவு என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்... தெளிவு என்பது மாசு களங்கம், களிம்பு அற்ற நிலையாகும்.. மாசு என்ற அழுக்கு படிவதால் குற்றங்கள் ஏற்படுகின்றன.. அதனால் துயரங்கள் தொடருகின்றன.. மனிதனுடைய முடிவான பயணமே துயரங்கள் அற்ற ஒரு நிலை.. துயரங்கள் இல்லையேல் எஞ்சி நிற்பது இன்பம் ஒன்றே... அதுவே நம் இயல் நிலை என்பது வியப்பான ஒன்று.. இயல்பிலே இன்பமாய் இருக்க வேண்டிய நாம், நம்மை மாசு சூழ்ந்து உள்ளதால் துயரம் படுகிறோம்.. காரியப் பட்ட அந்த துயரத்தை நீக்க பாடு படும் போது துயரத்திற்கு மேல் துயரம் அடைகிறோம்.. மனித குலம் காரணமாக இருக்கின்ற மாசு நீக்கி துயரை துடைக்க விரும்புவதில்லை... எதை ஒன்றை செய்தால் எதையும் செய்ய முடியுமோ அந்த மூல காரணமான ஒன்றை செய்து துயரை முழுமையாக என்றென்றும் வராத நிலைக்கு முயற்சி செய்வதில்லை.. காரணம் அவனுடைய தெளிவற்ற, மட, அஞ்ஞான நிலை.. தெளிவு நிலையே, முழுமையான மூல அடிநிலை காரணத்தை பிடிக்கக் கூடியது... மறைந்துள்ள அதனை மர்மமான மறை நிலையில் நீக்கும் போது, காணும் நிலையில் உள்ள காரியப் பட்ட துயரம் காணாமல் போய் விடுகிறது.. ஞானமாகிய தெளிவு கண்ணுக்கு தெரியாது.. தெரியாத மர்மமான தெளிவு நிலையை அணுக இருட்டிலே பயிற்சி செய்ய வேண்டிய முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கிறது... ஆனால் அந்த இருட்டுக்கு, எதுவும் தோன்றா நிலைக்கு ஒரு அதிபதி இருக்கிறான்.. அவன் உறவு கொண்டுதான் இருட்டிலே பயில வேண்டும்.. இல்லையேல் எல்லாம் தவறு தவறாக போய் விடும்.. அந்த அதிபதி தான் விழிப்பு நிலை...

காரணத்தை கலைக்காமல் நீக்காமல் காரியப்பட்டதில் கவனம் வைத்து செய்யப்படும் அனைத்தும் வீணே.. கொஞ்சம் தற்காலிக நிவாரணம் குணம் தரலாம்.. ஆனால் அதில் மீண்டும் மீண்டும் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்... மர்ம யோகம் ஒன்றே மறைந்த நிலையில், மறைந்த நிலையில் இருக்கும் காரணத்தோடு தொடர்பு கொண்டு, இருட்டு நிலை மர்ம நிலை நாயகன் --விழிப்பு நிலை--- துணையோடு காரணத்தை அடியோடு நீக்கி காரியப் பட்ட துயரத்தை முழுமையாக துடைத்து எறியக் கூடியது... அந்த விழிப்பு நிலையாளன் ஒருவனே தெளிவை தரக்கூடிய வல்லமை உடையவன்...

பல பிறவிகளின் விளைவாக மாசு என்ற குற்றங்களால் சூழப்பட்ட நாம் குழந்தை நிலை, சிறுவன் நிலை,வாலிபன் நிலை, வயோதிக நிலை குற்றங்களாக அவைகளை பிரித்து ஒவ்வொன்றாக கலைய வேண்டியதிருக்கிறது.. அதே போல் சரியை என்ற இயல் நிலை, கிரியை என்ற செயல் நிலை, யோகம் என்ற மாற்றம் தரும் நிலை, முடிவாக ஞானம் அல்லது தெளிவு என்ற பயன் தூய்ப்பு ( அனுபவ நிலை ) நிலை ஆகிய நான்கு நிலைகளில் தெளிவு நிலை படிப்படியாக உயர்ந்து முடிவான மகா காரணத்தை தெளிவு படுத்தும் முழு தெளிவு நிலையான அருள்நிலை தெளிவுக்கு வருகிறோம்.. அந்த தெளிவு தான் எதை அறிந்தால் எல்லாம் அறிந்து கொள்ள முடியுமோ அந்த மகா காரணத் தெளிவு.. 
ஞானம் என்றால் எல்லோரும் அந்த முடிவான முழு தெளிவாகிய மகா காரண தெளிவை தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. படி நிலை தெளிவு, சிந்தனைக்கு வருவதே இல்லை.. அந்த முழு தெளிவில் சிக்குண்ட நிலையால் தான் மேலே சொன்ன கேள்வி ஒவ்வொரிடத்திலும் எழுகிறது..

படி நிலை தெளிவு பெற்று முடிவான அருள் நிலை தெளிவு, விழிப்பு நிலையால் பெறவே, அதற்கு ஏற்ற பயிற்சிகள் அந்த அந்த நிலைக்கு ஏற்றால் போல் வகுக்கப் பட்டு, பயிற்சிகளும் வசதிக்காக ( !!!?? ) 16 வகைகளாக பிரிக்கப் பட்டு தெளிவாக பயில வேண்டிய திருக்கின்றது.. பயிற்சியிலும் தெளிவு இல்லையேல் குழப்பத்தால் மாசு நீக்கும் நெறி மிகவும் தாமதமாகும்.. எதையும் தாண்டி செல்லாது ஒன்றன் பின் ஒன்றாக பயின்று தெளிந்து ( !!! ) பின் தேறி படி படியாக விரைவோமாக.. தேறான் தெளிவு வள்ளுவர் வாக்குபடி பயன் தராது... முடிவான அருள் நிலை தெளிவுதான் நிறை நிலை மனிதனுடைய தெளிவு.. எதை செய்தால் எல்லாம் செய்ய இயலுமோ அதை செய்யும் தெளிவு அவனுக்கு மட்டுமே அவனுடைய முழு தெளிவான அருள் தெளிவில் தெரியும்... கரு சுவாசம் என்பது அருள் நிலை தெளிவுக்கு அழைத்துச் செல்வது.. அது கரு பையில் புகாமலே பிறக்கும் நிலை.. குணங்குடி மஸ்தான் போல்,மூன்றே நாளில் உயிர் பெற்ற நிலை.. செத்தாரை எழுப்பும் நிலை.. அதே சமயத்தில் தேகத்தை எரிக்கப் படாமல் அருள் கலப்பில் வள்ளலாரை போல் கலக்கும் நிலை.. மரணமிலா பெருவாழ்வு நிலை.. அருள் தெளிவுக்கு அதாவது பூரண ஞான நிலைக்கு பயணப் பட்டு நிறை நிலை மனிதனாக முனைவோமாக...

No comments:

Post a Comment