Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஐந்து

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஐந்து
*********************************************************************************
நமது தமிழ் தீபாவளி
அருளே எங்கும் நிறைந்து நீக்கமற உள்ளது.. அதுவே அண்ட ஆற்றலாய் உள்ளது.. அது எங்கும் நிறைந்து இருக்கும் தன்மையை வெளிபடுத்த முனைகிறது.. அந்த முனைப்பே அறிவாகிறது... அந்த அறிவே ஒரு இனம் தெரியாத தவிப்பு ஆகி தன்னை வெளிபடுத்த தன் அணு துகள்களை ஒன்று கூட்டு அணுவாய், அணு கூட்டாய் மாறி உலகில் எண்ணிக்கையில்லா வடிவங்கள் தோன்றி இயற்கையாய் பரிணாமம் பெறுகிறது... அப்படி வடிவம் எடுத்த பொருள்களில் வடிவம் ஆகாத அருள் ஆற்றல் சிக்கி கொண்டால், அப்படி சிக்கி கொண்ட அருளின் அறிவு, இரண்டு வகைகளில் வேலை செய்கிறது.. ஒன்று அந்த அருள் அறிவு தன் மூலமான பேரறிவுக்கு செல்ல முனைகிறது.. இல்லாவிட்டால் வடிவமாக மாறி சடமாக மாற முனைகிறது.. அப்படி சிக்கி கொண்ட அருள் அறிவே உயிர் எனப் படுகிறது.. ஒவ்வொரு உயிரும் தாய் நிலையில் கருவில் ஒரு வடிவத்தை ஏற்படுத்தும் போது அதில் சிக்கி கொண்ட அருள் ஆற்றலையும் சேர்ந்தே வளருகிறது... அந்த அறிவே உயிராய் மலர்ந்து உலகில் நடமாடுகிறது...

அந்த அறிவு கீழ் நோக்கிய இறுக்கமான முதிர்ந்த ஒடுங்கிய நிலையாகிய வடிவத்தை நோக்கி நகர்ந்தால் அது மனம் எனப்படும்.. அதே அறிவு தன் மூல ஆற்றலை நோக்கி நகர தொடங்கி விட்டால் அது தான் புத்தி, அல்லது விழிப்பு எனப்படும்.. ஆனால் அந்த அறிவு கீழ் நோக்கிய பாதையையே தேர்ந்தெடுக்க விரும்பும்.. காரணம் ஒடுங்கி குறுகி சோம்பி போவது என்பது மிக சுலபம்.. ஓங்கி நீண்டு எழுந்து இயக்கத்திற்கு வருவது மிகவும் கடினம்... சுற்றி உள்ள இறுகி போன வடிவங்களில் சிக்கி உள்ள அருள் ஆற்றல், தான் நினைத்தால், மனதாய் மாறி விட்ட அறிவு விழிப்பு நிலையாய் மாற முடியும்.. சிக்குண்ட தன் தற்போதைய நிலை தேவையற்ற நிலையென உணர வேண்டும்... வடிவத்தில் சிக்குண்ட மனமான அந்த அறிவு அகண்ட விரிவான பெருவெளியே தன் இயல் நிலையென அறியும் போது விழிப்பு நிலை அடைகிறது.. ஆனால் அது போதுமானதாக ஆகவேண்டும்.. தன் சோம்பை உடைத்து எறியும் அளவிற்கு பலம் அடைய வேண்டும்.. அப்படி பலம் ஆன சிக்குண்ட அண்ட ஆற்றல் தன் மூல ஆற்றலோடு கலந்து விடும்.. கலந்த அந்த சிக்குண்ட ஆற்றலுக்கு ஒரு விசேச சக்தி உண்டு.. அது, தான் கலந்த மூல ஆற்றலோடு எப்பொழுது வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், அல்லது தேவையானால் எந்த வடிவம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அதில் சிக்கி கொள்ளாமலும் இருக்கலாம்.. அதற்கு எல்லாம் காரணம், தன்னில் இருக்கும் அற்புதமான விழிப்பு நிலைதான்.... முதலில் சிக்கி கொண்ட வடிவ நிலை, விதி வழி வடிவம்.. விழிப்பு நிலையோடு சிக்கி கொள்ளாத வடிவநிலை மதி வழி வடிவ நிலை என அறிவோம்...

நாம் இப்போது விதி வழி வடிவமாய் உடலை தாங்கி இருக்கின்றோம்... அதனை மதி வழி வடிவமாய் மாற்றவே நம் தமிழ் யோகம் வழி காட்டுகிறது... சிக்குண்ட நம் அருள் ஆற்றல் மேலும் மேலும் வடிவத்தை பலப் படுத்தி வடிவமாய் மாறி, செயல் இழந்து போக விடாமல், வடிவ பிடிப்பினை தளர்த்தி பின் நீக்கி உடைத்து எறிய தக்க வழிக்கு வழி வகுக்கும் விழிப்பு நிலை பெருக்கத்திற்கு முனைய வேண்டும்.. இதற்கு அதிக கால அளவு ஆகும் என்பதால் சிக்குண்ட அருள் ஆற்றல் வடிவ நிலையோடு எந்த போராட்டமும் பண்ணாமல், தன் நிலை உணர தொடங்க வேண்டும்.. வடிவத்தோடு கூடிய தன் செயற்கை நிலையை மறந்து தன் வடிவமற்ற தோன்றா நிலையினை உணர தொடங்க வேண்டும்.. அப்படி பூரணமாய் உணர்ந்து தன் தோன்றா நிலையில் வலு அடைந்த உடன் அதே நிலையில் உள்ள அண்ட ஆற்றலான அருள் ஆற்றல் தன் இனமான, தோன்றா நிலைக்கு மாறி விட்ட சிக்குண்ட வடிவத்தில் உள்ள ஆற்றலை, அடையாளம் கண்டு அரவணைத்துக் கொள்கிறது.. இந்த நிலையில் சிக்குண்ட உயிர் ஆற்றலான அருள் ஆற்றல் தன்னை சிக்க வைக்கும் எல்லைகளை ஒரு நொடி கால அளவிற்கும், குறைவாக வெடித்து சிதற வைத்து, தன் இனமான பேரண்ட ஆற்றலோடு கலக்கிறது.. அதுவே ஞானம் அல்லது தெளிவு அடைந்த காலம்..

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இரண்டு செய்திகள்.. ஒன்று சிக்குண்ட அருள் ஆற்றல், பேராற்றலின் துணையின்றி, தானே முனைந்து முனைந்து, தன் அற்ப, குறைந்த பலத்தை அறியாது, தன் அகண்டகார பலத்தை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு, ஆணவ மலத்தால், தன் வடிவத்தை சிறுக சிறுக உடைக்க முயற்சி செய்து, முடிவில் நிச்சயமாக தோற்று போவது..

மற்றொன்று தானே தன்னை மாற்ற, தோன்றா நிலைக்கு சென்று, தன் இயல் வடிவான பேரண்ட ஆற்றலாய் மாறும் போது, அது பேரண்ட அருள் ஆற்றலால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டு, வலுவாய்ந்த அந்த பேர் ஆற்றலே எல்லைகளை வெடித்து சிதற வைத்து சிக்குண்ட உயிர் அருள் ஆற்றலுக்கு நொடிக்குள் விடுதலை தர செய்வது...

இதில் எது சிறந்த, உகந்த, சரியான, நேரான வழி என்பதை அன்பர்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.. தீபாவளியை பிரித்தால் தீ +ப்+ ஆவ+ ளி என பிரியும்.. இதில் தீ என்ற எழுத்து சுத்த கனலான விழிப்பு நிலையை குறிக்கும்.. அதாவது தோன்றா நிலையில் மையம் கொண்ட விழிப்பு நிலையாகும்.. 'ப்' என்ற பகர மெய் ப என்ற வடிவ பாத்திரத்தில் சிக்குண்ட உயிர் ஆற்றலை குறிக்கும்.. ஆவ என்பது சிக்குண்ட உயிர் ஆற்றல் தீயாக ஆவ, அதாவது ஆவதற்கு என பொருள்.. ளி என்பது ள்+ இ ஆக பிரிந்து பயின்று கொண்டு இரு என பொருள் கொள்ளும்.. பள்ளி என்ற பள்ளிக்கூடம் என்பது உயிர் ஆற்றல் பயிலும் இடம் எனப்படுவது..

தீபாவளி என்பது சிக்குண்ட உயிர் ஆற்றல் சுத்த கனலாய் மாறுவதற்கு பயில்க என்ற ஆணை ஆகும்... மர்ம யோக மொழியில் அது தமிழ் ஆணையே அதாவது இறை கட்டளையே.. இறையும் தமிழும் ஒன்றே.. அவ்வாறு அந்த ஆணையை போற்றி கொண்டாடும் போது புத்தாடைகளால் புது மனிதன் ஆகி பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல மனித உயிர் ஆற்றல் நரக நிலையில் உள்ள எல்லைகளை தகர்த்து சிதற வைத்து, ஜோதியாய், ஒளியாய் பிரகாசிக்கும் சுடர் விடும் அண்ட ஆற்றலோடு கலக்கும் பேரினை, பாக்கியத்தை பெறுவாய் என்பதையும் சொல்லாமல் குறிக்கும்..

தீபாவளி என்பது இறை ஆணையே என அறிந்து, அண்ட, இனம் சேரும் வழியாகிய தோன்றா நிலைக்கு, பயணப்பட்டு இக்கரையோடு அக்கரையும் அடைந்து, பெருத்த ஆன்ம இலாபம் பெறுவோமாக... சேரும் இனம், இடம், அறிந்து சேருவோமாக... தீபாவளி என்ற ஆணையை சிரம் மேல் கொள்வோமாக...

No comments:

Post a Comment