Monday 11 January 2016

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி ஒன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி முப்பத்தி ஒன்று..
********************************************************** ***********************
மதி நிறைந்த வாழ்வு
உலகில் உள்ள ஆத்திகவாதிகள் இறைவனை ஏதாவது ஒரு வகையில் உருவில் முன் நிறுத்தியே வழிபாடுகளை செய்கின்றனர்.. கடவுளை மறுக்கும் புத்தமதம் போன்ற மார்க்கத்தில் உள்ளவர்கள் தங்கள் மார்க்க குருவை மையப் படுத்தி மார்க்க நெறிகளில் ஈடுபட்டு வருகின்றனர்... எது என்னவாக இருந்தாலும் ஏதாவது ஒரு உருவத்தை மையப் படுத்தியே எல்லா நிகழ்வுகளும் ஆன்மீகத்தில் நடைபெறுகிறது.. பண்டைய தமிழ் நிலையில் கனல் நிலை என்ற எதையும் மையப் படுத்தாத ஒரு நிலையை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இன்றைய ஆன்மீகம் திசைமாறி போய்விட்டது.. தோன்றா நிலைக்கு ஒரு புரிதலை தேடும் மனம் ஏதாவது ஒரு உருவத்தை மையப் படுத்தவே முனைய அலைகிறது.. புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளும் பக்குவ நிலை வரும் வரை தோன்றா நிலையை மனித குலம் புரிந்து கொள்ள முடியாது..

தோன்றா நிலை ஒன்றே மனிதனை மனிதனாக்கும் ஒரு நிலை.. ஏனையவை மனிதனை பிற பொருளாக்கும் இயல்பு உடையவை.. தோன்றா நிலையில் தன்னில் மையம் கொள்ளும் மனிதன் அண்ட ஆற்றலோடு இணைக்கப் படுகிறான்.. தோன்றும் நிலையில் உள்ள உருவங்களோடு தொடர்பு கொள்ளும் போது அண்ட ஆற்றலை விட்டு துண்டிக்கப் படுகிறான்.. சுவாச பயிற்சியில் சூரிய கலையில் முடியும் நிலையில் அகப்படும் அந்த அரை நொடி தோன்றா நிலையில் கிடைக்கும் அண்ட ஆற்றலால், உயிர் வாழும் மனிதன், சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலையினை அனுபவப் பட்டு மிக உயர்ந்த நிலையிலே அண்ட ஆற்றலை பெறும் வழியினை அறியாது இருக்கின்றான்.. அதற்கு காரணம் தோன்றும் நிலையிலே சிக்குண்ட களங்கப் பட்ட சந்திர கலையாகிய மனம்.. சூரிய நிலையில் முழுமையாக தோன்றாநிலையை அனுபவப் படும் போது, களங்கப் பட்ட கலைகள் நிறைந்த மனம் முழுமையான மதி (பௌர்ணமி) ஆகிறது.. அது மீண்டும் தேய்பிறையோ வளர்பிறையோ ஆகாமல் என்றென்றும் மதியாகவே விளங்குகிறது.. இப்படி மதியில் நிலைகொள்ளும் ஒரு அற்புத கனல் வழியில் வாழ்க்கை நடத்திய தமிழ் இனம் அன்று எல்லா நிலைகளிலும் சிறப்புற்று இருந்தது.. அந்த நிலையை, இன்றைய தோன்றும் நிலைகளை மையப் படுத்தி இயங்கும் மதங்களும் மார்க்கங்களும் முழுமையாக அழித்து விட்டது..

மீண்டும் தமிழ்நெறி உருவாகி வல்லவன் ஆக வேண்டும் என்றால் தோன்றாநிலையை அனுபவப் பட்டு அளவற்ற அண்ட ஆற்றலை பெற்றால் மட்டுமே முடியும்.. இதில் எந்த நுணுக்கங்களும் நுட்பங்களும் இல்லை.. அவை எல்லாம் தோன்றும் நிலைக்கே உரியது.. எந்த சடங்குகளும் சாத்திரங்களும் நியதிகளும் கட்டுப் பாடுகளும் முழுமையாக இல்லாத நிலையில் அகப்படும் இந்த தோன்றா நிலையை, உணர மட்டுமே முடியும்.. உணர்விலே உட்புகுந்து, தோன்றா நிலையிலே மையம் கொண்டு, தன்னில் தானாய் நிலைகொண்டு மதி நிறைந்த வாழ்வு வாழவே, அன்றைய தமிழ் நெறி உணர்த்தியது.. அதை நோக்கிய பயணத்தை நாம் உணர்ந்து விரைவு படுத்துவோமாக..

No comments:

Post a Comment