Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதிமூன்று

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதிமூன்று
***********************************************************************
குதித்தல் ஒன்றுக்கான வீரம் தேவை இப்போது
மறந்து போனதால் காணாமல் போன சுவாசத்தை தேடி கண்டு பிடித்தது ஒரு பக்கம்.. அப்படி தேடி கண்டு பிடித்த சுவாசம் முரண் பாடாய் இருப்பதால் ஏற்பட்ட நஷ்டங்களை உணர்ந்து முரண் பட்ட மனதை உடன் பாடு கொண்டு,
அண்ட ஆற்றலை முழுமையாக பெறுவது மற்றொரு பக்கம்... உடன் பாடு சுவாசத்தையே அடியாளமாக கொண்டு, தன் நிலையை தக்க வைத்துக் கொள்ள மனம் நடத்தும் நாடகம் சற்று விசித்திரமானது.. உடன் பாடு சுவாசத்தில் தன் அடையாளத்தை மிக குறைந்த அளவில் மனம் நிலை நிறுத்திக் கொள்ள மிகவும் சிரமப் படுவது அன்பர்கள் அறிந்ததே.. தன் அதிகார ஆணவ செயல்கள் பலவும் பறி போய் இருக்கின்ற நிலையில், அற்ப அதிகார அடையாளங்களோடு, மேலும் இழக்காமல் இருக்க மனம் மிகவும் முயலும்.. இந்த நிலையில் உடன் பாடு சுவாசத்தையே ஒரு பயிற்சியாக கொண்டு மேலும் மனம் தன் அற்ப அடையாளங்களை இழக்காமல், எதிரே இருக்கும் தோன்றா நிலையை கண்டு களிக்காமல், பயிற்சியிலேயே தான் மிகவும் விசுவாசமாக இருப்பது போல் நடித்துக் கொண்டு தோன்றா நிலையை தவிர்க்கவே முயலும்... இந்த நிலையில் தன்னில் நிலை கொண்ட விழிப்பு சக்தி செயல் பட தொடங்க வேண்டும்.. அது உடன் பாடு சுவாச பயிற்சியில் சிக்குண்ட மனதை தன் பால் முழுமையாக இழுத்துக் கொள்ள வேண்டும்.. இதுவே விழிப்பு நிலையின் மனம் மேல் கொண்ட முதல் ஆதிக்க நிலை... அதன் பிறகு விழிப்பே மனதின் அதிபதியாக விளங்கத் தொடங்கும்..
 ஒரு நிலையில் மன இழுப்பிற்கு சமமான இழுப்பிற்கு மேல் விழிப்பு நிலையின் இழுப்பு மேல் ஓங்கும் போது அது நிகழுகிறது.. அதுவே மனதின் திருப்பு முனை.. அந்த திருப்பு முனைக்கு பின் மனதின் இயல்பே முழுமையாக மாறி விடும்.. அசுத்த மனம் சுத்த மனமாகி விடும்.. உடன்பாடு சுவாசம் பயிலும் ஒவ்வொரு அன்பர்களும் அந்த திருப்புமுனைக்கு முயல வேண்டும்.. உடன் பாடு சுவாசம் ஒரு சுட்டி காண்பிக்கும் ஒன்றாகும்.. ஆனால் அது சுட்டிகாட்டும் மெய் பொருள் தோன்றா நிலையே.. சுட்டிகாட்டப் படும் பொருளாகிய மெய்பொருளை விட்டு விட்டு சுட்டும் பொருளாகிய சுவாச ஒழுங்கே அனைத்தும் என தீர்மானமாய் இருக்கும் மனதின் செயல் பாட்டை அன்பர்கள் புரிந்து கொண்டு சுட்டிகாட்டப் படும் பொருளாகிய மெய்பொருளை நோக்கி விழ வேண்டும்.. மனதில் இருந்து விழிப்பில் குதித்தல் இதுதான்.. இதில் குதித்தல் மட்டுமே உதவும்.. நகர்தல் உதவாது.. நகர்ந்து செல்லும் தருணம் மனம் மீண்டும் விழிப்பு நிலை விட்டு விலகி விடும்.. குதித்தல் ஒன்றே செயல் கூடும்.. குதித்தலால் மட்டுமே 'க்' என்ற கனல் நிலையாம் விழிப்பு நிலை உதித்து கைகூடும்.. குதி என்ற பயிற்சியே க் என்ற விழிப்பு நிலை உதி-க்க ( க்+ உதி=குதி ) செய்யக்கூடியது.. அதற்கு வீரம் வேண்டும்.. மனம் தன்னை இழந்து விழிப்பு நிலையோடு ஒன்றி புதுமை பெற தாயாராக வேண்டும்...

அங்கே அந்த விழிப்பு நிலையோடு எதுவும் மனம் பிடித்துக் கொள்ளாத புதுமை நிலையோடு சற்று பழக வேண்டும்.. அங்கே மனத்திற்கு வேண்டுவது எதுவும் இல்லை.. ஆனால் எல்லாம் கிடைத்தது போல் ஒரு நிறைவு கிடைக்கும்.. அந்த நிறைவு எந்த ஒன்றாலும் தரமுடியாத முழுமையான பரி சுத்த நிறைவு.. எதனோடும் ஒப்பிட முடியாத நிறைவு.. எந்த உலகப் பொருளாலும் ஈடு கட்ட முடியாத நிறைவு.. இதுவரை உலகப் பொருள்களிடம் ஆசைகள் ஆயிரம் வைத்து, நிறைவேறாமல் ஏக்கங்களை சுமந்த மனம் இந்த புனித நிறைவால் பூரண நிறைவடைந்து இனி எதற்கும் ஆசை படாத உன்னத நிலையினை அடைய துவங்கும்.. விழிப்பு நிலையோடு பொருந்திய மனம் பரி சுத்த நிறைவு கொள்வதால், அது உலகப் பொருள்களிடம் நாட எந்த தேவையும் இல்லை.. இந்த நிலையில் மனம் உலக பொருள்களிடத்தில் ஆதாயம் எதையும் தேடாமல், அவைகளிடம் தனக்குள்ள கடமையை செய்ய துவங்கும்... இந்த மாபெரும் புனித மன மாற்றம் விழிப்பு நிலை என்ற புனிதத்தோடு சேரும் போது மட்டுமே நிகழும்..

இங்கே தன் கடமையை நிறைவேற்ற தனக்கு வேண்டிய சக்தியை தான் தேடி போய் அலைய மனதிற்கு தேவை இல்லை.. தானே விழிப்பு என்ற அண்ட ஆற்றல் மையத்தில் இருப்பதால் ஆற்றலுக்கு எந்த குறை பாடும் மனதிற்கு இல்லை.. அதனால் மனதிற்கு தேடுதல் என்பது துளியும் இல்லை.. அன்பர்களே உடன் பாடு சுவாசத்திலிருந்து வீரம் கொண்டு குதித்து விழிப்பு என்ற தோன்றா நிலைக்கு மையம் கொள்ள விரைவீர்.. அங்கே மனதிற்கு பூரண நிறைவு காத்துக் கொண்டு இருக்கிறது..

No comments:

Post a Comment