Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதினான்கு

மர்ம யோகத்தில் கனல் வீரம்- பகுதி பதினான்கு
*************************************************************************
இளக்கம் இறுக்கம் இவற்றின் தாக்கம்
தகாத காதலில் விழுந்தேன், தகுதிக்கு உடன் படாத ஆசையில் விழுந்தேன், கோபத்தில் விழுந்தேன், காமத்தில் இராவணனை போல் விழுந்தேன், என மனிதன் சதாகாலமும் விழுந்து கொண்டே இருந்து புண் பட்டு மாய்கின்றான்.. ஆறாத மன புண்கள் அவனது அடுத்த பிறவிக்கும் தொடருகிறது.. பீஷ்மரை பலி வாங்க சிகண்டி அம்பை ஆக அடுத்த பிறவி எடுக்கிறாள்.. இனம் தெரியாத பல மன புண்களோடு பிறக்கிறோம்.. அந்த மன புண்களால் புற வாழ்வில் தன்னிச்சையாக விழுகின்றோம்.. எந்த குறிக் கோளையும் முன் வைக்காமல் காதல் கோபம் ஆசையில் விழுகின்றோம்..
குதித்தல் என்பதும் விழுவதற்கே.. அதில் ஒரு குறிக்கோள் இருக்கிறது.. கண்ணப்பர் தன் கண்களை பிடுங்க குதித்தார்.. காளி தாசன் காளியின் முன் மாய்வதற்கு குதித்தான்.. ஆனால் விழுந்த இடமோ இறைவன் மடியில்.. அதற்கு நிகரான உடன் பாடு சுவாசத்தில் பயிலும் அன்பர்கள் மனதின் கடைசி அடையாளத்தை இழந்து விழிப்பு என்ற புனிதத்தில் விழ வீரம் கொண்டு குதித்தே ஆக வேண்டும்... ஆனால் மனதால் அந்த கடைசி அடையாளத்தை நகர்ந்து சென்று இழக்கத் துணியாது.. ஒரு போதும் அப்படி செய்யாது.. அதனை விழிப்பால் தள்ளி விடப் பட்டு குதிக்கச் செய்தால் மட்டுமே மனம் சுவாச ஒழுங்கில், நான் இருக்கிறேன், செய்கிறேன் என்ற கடைசி அடையாளத்தை இழக்க முடியும்.. ஆன்மீகத்திலும் புற உலக நல்ல செயல்களிலும் தயக்கம் ஒரு பெரிய தடையாக இருந்து, மனிதன் இழந்தது அளவிட முடியாதது.. விழிப்பு நிலையால் இயக்கப் படும் குதித்தல் என்பது ஒரு வீர யோகம்.. அன்றாட வாழ்வில் எத்தனை பேர் தயக்கத்தின் காரணமாக நாளை நாளை என்று நாட்களை கடத்தி வீணாய் போகின்றனர்.. பயம் உணர்ச்சி ஒன்றினாலே மட்டுமே உந்தப் பட்டு வாழ்வியலை நடத்துவோர் அநேகம்.. கடைசி தேதியன்று மன உழைச்சலோடு நிற்போர் கூட்டம் அதிகம்.. அந்த குதித்தல் என்ற வீர யோகம் ஒன்றே மனதின் கடைசி தயக்கத்தை உடைத்து எறியும்..
 அடுத்தப் படியாக ஏன் மூச்சு திணறல் வருகின்றது என பார்ப்போம்.. நமது தேகம் செயல் பாடுகள் குறைவுப் பாட்டால் இறுகி போய் விட்டால், சற்று அதிக உழைப்பு என்று வரும் சமயம், அதிக சக்திக்காக அதிக மூச்சுக் காற்று உள்வாங்க வேண்டியதிருக்கும்.. அந்த சமயம் இறுகி போன நுறையீரல் மார்பகங்கள் அந்த அதிக காற்றை உள் வாங்க போதிய இளக்கம் கொடுக்காமல் இறுகிய நிலையில் திடமாக உள்ளதால் தான், உள்சென்ற காற்று எதிரொலித்து வெளியே தள்ளப் படுகிறது.. உள் செல்ல முனையும் காற்றும், வெளியே தள்ளப் படும் காற்றும் ஒன்றுக்கொன்று முரண் படுவதால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.. சாதாரண நிலையிலே மூச்சு திணறல் இருந்தால், சுவாச உறுப்புகள் மிக மோசமான நிலையில் இறுக்கத்தில் இருக்கிறது என்று அர்த்தம்... அதுவும் மழை குளிர் காலங்களில் தேக இறுக்கம் மிகமோசமானதாக இருக்கும்..
மலையேற்றப் பயிற்சியில் முதலில் தேக இறுக்கத்தை நீக்குவதே முதல் குறிக்கோள்.. மலையேறும் போது ஏற்படும் சுவாச இளைப்பினை ஒன்று மனதை கட்டுப்படுத்தி மன இளக்கம் பெறவும், மற்றொன்று தேக இறுக்கத்தை தளர்த்தி, தேக இளக்கம் பெறவும் பயன் படுத்துகிறோம்.. அந்த சில நிமிடங்களில் மிகவும் தோய்வாக தளர்வாக வைத்துக் கொள்ளும் போது, இளைப்பு வேகம் மிக வேகமாக குறைய தொடங்குவது வியப்பாக இருக்கும்.. மலை ஏற்றம் காணும் போது உணர்வோடு தேக அசைவுகளில் மனம் மிக பொருந்தி இருக்கவேண்டிய அவசியம் மிக மிக முக்கியம்.. இதன் மூலம் மட்டுமே தேகத்தை தளர்வாக தோய்வாக வைத்துக் கொள்ள முடியும்.. அண்ட ஆற்றல் தேகத்திற்குள் சென்று செயல் பட தேகம் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.. அது தன்னை தளர்வு படுத்திக் கொண்டால் மட்டுமே, தளர்வுக்கு ஏற்றார் போல் அண்ட ஆற்றல் தேகத்தில் உள்ளே பாயும்.. அந்த இளைப்பு வரும் சமயம் அந்த இளைப்பை 
ஏன் மனம் உடன் பட்டு நிற்க வேண்டும் என்றால் தேக தளர்வு ஏற்படவே.. தேக தளர்வு ஏற்படும் சமயம் மனமும் அதற்கு ஏற்றால் போல் தன் விரைப்பு குணத்தை விட்டு விட்டு, தளர்வு அடைய தொடங்கும்.. அதனால் அண்ட ஆற்றல் அதிகம் உள் புக தேகம் அதிக ஆற்றலை பெறுகிறது..
இந்த பயிற்சியில் இளைப்பு வரும் வரை சிரமம் எடுத்துக் கொண்டு படியேற வேண்டும்.. இளைப்பின் வேகத்தை முறையாக பயன் படுத்தி தேக இறுக்கத்தை நீக்கி தேக இளக்கம் பெற வேண்டும்.. தொடர் பயிற்சியில் தேகம் இரப்பர் போல் உடனடி இளக்கத்தை பெறும் போது, படியேற்றத்தில் பயங்கர முன்னேற்றத்தை காண முடியும்.. இன்றைய நிலையில் அன்பர்கள் 6 நிமிட அளவில் மலையேறி சாதித்தனர்.. அதில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்பர் ஒருவரும், 67 வயது மர்ம யோகியும் சேர்த்து தான்... வயதும் தேக நோய்களும் இங்கே காணாமல் போய் விடுகிறது...

எந்த காரணத்தை கொண்டும் இளைப்பு இல்லாத மலைஏற்றம் கூடவே கூடாது.. அதன் மூலம் மட்டுமே தேகத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தளர்வாகவும் இளக்கமாகவும் மேலும் மேலும் வைத்துக்கொள்ள முடியும்.. அந்த இளக்கம் காற்றின் அளவிற்கு தளர்வாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு செல்லலாம்... இப்படி தேக இளக்கத்தை உருவாக்க மடி கூத்து சுவாசத்தை அன்பர்கள் பயிலுகின்றனர்.. மடி அல்லது மடிதல் என்றால் மரணம்.. மரணத்தில் தேகம் தளர்வின் உச்சத்திற்கு செல்வது போல் இந்த சுவாசத்தில் தேகம் தளர்வு நிலை உச்சத்திற்கு செல்லுகிறது.. இந்த நிலையில்  உள் வாங்கும் சுவாசத்தில் அளவற்ற காற்று இழுக்கப் படுவதால் தேகம் அதனை தாங்கும் தகுதியையும் பெறுகிறது.. இப்பயிற்சியின் மூலம் சுவாச இளைப்பு விரைவாக குறைக்கப் பட்டு மலை ஏற்றத்தில் செயன் திறன் மிகவும் அதிகரிக்கிறது... மலை ஏற்றத்தில் மட்டும் அல்ல அன்றாட வாழ்வியலிலும் செயன் திறன் கூடவே செய்யும்.. அடுத்த வகுப்பு தொடங்கும் வரை மலைஏற்றமோ அல்லது தரையில் ஓடியோ வேகமாக நடந்தோ மூச்சு இளைப்பை உருவாக்கி தேக இளக்கம் காணுமாறு மற்ற அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன்..

No comments:

Post a Comment