Saturday 17 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஒன்று


Marma Yoogi
மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி இருபத்தி ஒன்று
            ***********************************************************
தேவைகளை கெடுப்பது ஆசைகளே
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.. கேட்டு கேட்டு சலித்துப் போன புத்திமதி.. ஆனாலும் இந்த புத்திமதி மனதை தாண்டி மேலே துளியும் செல்லவில்லை... துன்பத்திற்கு ஆளாகாத மனிதர்களே இல்லை எனலாம்.. துன்பம் என்ற கேள்வி எழும் போது அதற்கான விடை ஒன்றில் மட்டுமே உள்ளது.. ஆம் அது தான் நிறைவேற்றபடாத தேவைகள்... ஆசைகளிலே உழலும் மனம், தேவைகளை கவனிப்பதே இல்லை.. இந்த ஆசைகளை உருவாக்குகின்ற சுற்றுப் புற சூழ்நிலைகளில் மனம் சிக்கி ஒடுங்கி போவதால், அதனால் அது அதிலிருந்து மீள முடியாமல் போய் விடுகிறது.. அந்த சுற்று புற சூழ்நிலைகள் போலவே ஆகவேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொள்வதால் தேவைகளில் மனம் கவனம் செலுத்த முடிவதில்லை....

உடல் துயரம் உயிர் துயரத்தினால் ஏற்படும் மன துயரம் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும், மனம் அவைகளை போக்குவதற்கு துளியும் முனைவதில்லை... ஆசைகளின் உந்துதலால் ஆசைகளை நாடும் மனம் அந்த ஆசைகளை துளியும் நிறைவேற்ற முடியாத நிலையில் கற்பனைகளிலும் கனவுகளிலும் மனம் வாழத் தொடங்குகிறது.. ஒவ்வொரு மதமும் அந்த ஆசைகளை மட்டுமே காட்டி பிழைப்பை நடத்துகின்றன.. கேட்டதெல்லாம் இறைவன் கொடுப்பார் என சொல்லாத மதங்கள் உலகில் ஏதாவது உண்டா ? ஆசைகளை காட்டி, தேவைகளை தட்டி கழித்து, உடல் உயிர் துயரங்களை பெற்றுக் கொண்டு இருக்கும் தருணம் இந்த மதங்கள் மிக அழகாக சொல்லும் வார்த்தை என்னவென்றால், எல்லாம் இறைவன் சித்தம் பிரகாரம் நன்றாகவே நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பது தான்....

இறைவனிடம் பெற வேண்டியது எதுவுமே இல்லை.. இது தான் வலுவான உண்மை.. அதனிலும் வலுவான உண்மை எதுவென்றால், இறைவன் நமக்கு எல்லாவற்றையும் குறைவில்லாமல் கொடுத்து இந்த மண்ணிற்கு அனுப்பி இருக்கின்றான்.. அதனிலும் வலுவான உண்மை எதுவென்றால், ஐம்பூதங்களிலே குறைவில்லாமல் கொடுத்ததை முறையாக பயன் படுத்தினால் அவனோடு கலந்து நிற்க முடியும் என்பது தான்.. தேவைகளும் குறைகளும் இல்லாத முழுமையான வாழ்வாகிய இறை கலப்பே முடிவானது.. அதற்காக வேண்டிய அனைத்தையும் கொடுத்து இருக்கிறான் இறைவன்... அப்படி கொடுக்க காரணம் அவனின் தனி பெருங்கருணையே..

தனிப்பெருங்கருணையின் அருமை தெரியாமல் அதனை வேடிக்கை பார்க்கும் செயல் ஒன்றே இன்று நடைபெறுகிறது.. இறைவன் கொடுத்ததை கைபிடிக்க தெரியாமல் அறியாமையில் வாழ்கிறோம்.. கையில் கூடியதை கையில் பிடிக்க தெரியவில்லை என்றால் குற்றம் யாருடையது என்பதை உணராமல் சதா காலமும் இறைவனிடம் முறையிட்டு, முறையிட்டு கண்ணிர் மல்கி நிற்கின்றான்.. பாவம் இறைவன் என்ன செய்வான் ? மீண்டும் மீண்டும் கொடுத்தாலும், கொடுத்த ஒன்று ஏற்கனவே கொடுத்ததோடு கலக்க முடிவதில்லை.. ஒன்று ஏற்கனவே கொடுத்ததோடு கலக்க முடியாமல் புதியது நீங்கி விடும்.. இல்லையென்றால் ஏற்கனவே கொடுத்ததை நீக்கி விட்டு அதன் இடத்தில் புதிதாக கொடுத்தது அமர்ந்து விடும்.. முடிவில் இறைவன் நமக்கு எதுவும் கொடுக்க வில்லை என்ற ஏக்கம் மட்டுமே மனிதனுக்கு மிஞ்சும்.. கணணியில் ( computer ) ஒரு கோப்பு இருக்கும் போது அதே போன்ற கோப்பு ( file ) பதிக்கும் போது ஏற்படும் நிலையை நாம் நன்கு அறிவோம்.. அதே போன்ற நிலைதான்.. இறைவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கின்றான்.. அவன் நம் உரிமை நாயகன்.. நமக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்ற உரிமை நமக்கு அவனிடம் உள்ளதால் கருணை வடிவான சத்திய நிலையில் உள்ள கடவுள் நமக்கு ஏற்கனவே எல்லாவற்றையும் கொடுத்து இருக்கின்றார்.. இவைகளை எல்லாம் நினைவு படுத்தவும் அதனை பயன் படுத்த கூடிய விழிப்பு நிலை இல்லாத காரணத்தினால் மனிதனுக்கு இத்தனை துயரம்.. ழ் என்ற ழகரமெய் தாங்கிய தமிழ் என்ற சொல்லே ஒரு நிலையில் விழிப்பு என்றும் பொருள் கொள்ளும்..

ஒரு நாட்டின் குடிமகன்களுக்கு அந்த நாட்டின் கபட நிர்வாகிகள் எதுவேண்டுமானாலும் இலவசமாக கொடுப்பார்கள்.. ஆனால் விழிப்பினை கொடுக்கும் எந்த ஒரு செயலையும் செய்யவே மாட்டார்கள்.. விழிப்பினை கெடுக்கும் குடியை, மதுவை ஊக்கப் படுத்தவே பார்ப்பார்கள்.. பல ஆண்டுகள் நம் நாட்டை விட பொருளாதாரத்தில் மிக பின் தங்கிய நாடாக இருந்த சீனா கலாச்சார புரட்சியின் மூலம் அனைத்து போதை பொருள்களையும் ஒழித்துக் கட்டியது.. போதை கருத்துகளை தந்த மதங்களையும் - புத்த மதம் உள்பட-- ஒழித்துக் கட்டியது.. முப்பதே ஆண்டுகளில் உலகில் இன்று பெரிய வல்லரசாக விளங்குகிறது.. சமீபத்தில் மோடி அவர்கள் இந்தியா விரைவில் சீனாவை மிஞ்சும் என்றார்.. அதற்கு சீன பத்திரிக்கை மிக அற்புதமான நாகரீகமான பதில் தந்தது.. சீனர்களின் உழைப்பிலும் ஒழுக்கத்திலும் விழிப்பாற்றலிலும் மிஞ்சும் தகுதி இந்தியர்களுக்கு தற்போது இல்லை.. ஆகவே பொருளாதாரத்தில் மிஞ்சும் பேச்சுக்கே இடம் இல்லை என்றது.. மிகவும் உண்மையான சத்தியமான சொல் அது.. விழிப்பினை கெடுக்கும் குடியும் மதுவும் கற்பனை பாத்திரத்தை அடையாளம் காட்டும் சின்ன திரை பெரிய திரை உள்ளவரை, இந்தியாவை எவராலும் வல்லரசாக்க முடியாது.. குடி குடியை கெடுக்கும், புகை மரணத்தை தரும் என்ற விளம்பரத்தை தொடர்ந்து அவைகளின் விற்பனையும் அதிகப் படுத்துவது கேவலத்திலும் மகா கேவலம்.... விழிப்பின் ஒட்டுமொத்த அடையாளமாக ஓரிரு நிறைநிலை மனிதர்கள் இந்த மண்ணில் தோன்றினால் மட்டுமே இந்த மண்ணிற்கு விடிவு காலம் வரும்.. இந்த மண்ணை காக்க பூரண விழிப்பு நிலையில் பல அற்புதங்களை செய்து இந்த மண்ணில் உள்ளோரை மாற்ற செய்ய வேண்டியது நமது கடமை.. அதற்காக முனைவோமாக...

No comments:

Post a Comment