Monday 12 October 2015

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினேழு

மர்ம யோகத்தில் கனல் வீரம் :-- பகுதி பதினேழு
************************************************************************
அன்பும் அறிவும் இரு கண்கள்
ஒரு அன்பரின் கேள்வி :---- ஐய்யா தங்கள் பயிற்சியின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்பு நிலை அடைந்ததாக எண்ணுகிறேன்.. அதனால் தான் என்னவோ என்னை சுற்றி உள்ளோரின் மனதின் கபட நாடகங்கள், வெட்ட வெளிச்சமாக எனக்கு தெரிகிறது.. என்னோடு உறவு வைத்துக் கொள்ளும் அத்தனை பேரிடமும் ஒரு வித கபட தன்மையை நன்றாகவே உணரமுடிகிறது.. அந்த நிலையில் என் விழிப்பு தன்மை மேன்மையை குறித்து ஒத்துப் பார்த்து அவர்களிடம் இருந்து என் மேதாவிதனத்தால் என்னை பிரித்துக் கொள்ள முயலுகிறேன்.. இதனால் என் ஆணவ நிலை ஓங்கி விடுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது.. இந்த பிரச்சனைக்கு தக்க பதில் தருமாறு வேண்டிக்கொள்கின்றேன்..
 பதில் :--- உண்மைதான்.. விழிப்பு நிலை உயர்வால் ஒருவர் உலகை பார்த்து நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் தானா என கேட்கும் அளவிற்கு ஒரு மேதாவி தன்மை இந்த விழிப்பு நிலையாளருக்கு ஆரம்பத்தில் வரலாம்.. இது முதல் கட்ட விழிப்பு நிலை.. ஆனால் இன்னும் மேன்மை அடைய அடைய இந்த விழிப்பு நிலையாளருக்கு கூடவே அன்பு என்ற உயரிய பண்பு வளர தொடங்கும்... 'அ' என்ற அருளியல் விழிப்பு நிலையில் உள்ளவர்கள் 'பு' என்ற புவியில் வாழும் அனைத்திலும் அவர்கள் எந்த தரமாக இருந்தாலும், தன்னை 'ன்' என்ற முடிவான அதாவது மாறுபாடு இன்றி தங்களை இணைத்துக் கொள்வார்கள்... அன்பால் தங்களை அவர்களிடமிருந்து பிரித்துக் கொள்ள முனைய மாட்டார்கள்.. 
இந்த அன்பு உண்மையிலேயே விழிப்பு நிலையாளர்களுக்கு மட்டுமே இயலும்..

அண்ட ஆற்றலின் அதிக வரவால் விழிப்பு நிலை பெருக்கத்தால் விழிப்பு உற்ற விழிப்பு நிலையாளர்கள் ஓர் உயிர் முதற் கொண்டு ஆறறிவு உடைய மனிதர்கள் வரை அந்த அண்ட ஆற்றலே இயங்கி கொண்டு இருக்கின்ற சத்தியத்தை, உண்மையை, நன்றாகவே உணர்ந்த காரணத்தினால் எந்த உயிரையும் அண்ட ஆற்றலின் விளைவாக வந்தது என்பதை, தெளிவு பட அறிந்ததால் எவ்வுயிரையும், அண்ட ஆற்றலை போற்றுகின்ற விதமாகவே, மதிப்பு அளித்து போற்றுவார்கள்.. விழிப்பாளர்கள் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும், எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் உயர் பண்பு உடையவர்களாக இருப்பதால் அரசன் நிலையும், ஆண்டி நிலையும், அவர்களுக்கு ஒன்றே.. இதில் அரசன் ஆகும் அனைத்து தகுதிகளும், அளவிற்கு மேல் அதிகமாக இருந்தாலும், நினைத்த மாத்திரத்தில் அரசன் ஆகும் வல்லமை இருந்தாலும், ஆண்டியின் நிலையை ஏற்றே, எளிமையாக வாழ்வார்கள்..

ஒன்றை மட்டும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.. தங்களின் உயர்ந்த பண்பினாலே தான் தமிழ் மன்னர்களை அரியானையில் அதாவது சிம்மாசனத்தில் ஏற்றி ஆசியா கண்டத்தில் உள்ள பெரும் பாலான நாடுகள் அன்றைய கால கட்டத்தில் தங்கள் நாட்டின் மன்னராக முடி சூட்டி மகிழ்ந்தனர்.. இப்பொழுது எப்படி ஆகம கோவில்களில் பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் எனப் பட்டோருக்கு மட்டுமே பூஜை செய்யும் தகுதி உடையவர்கள் என்று நியமிக்கப் படுகிறார்களோ அவ்வாறே நேர்மை தவறாத தமிழ் யோகத்தால் தகுதி பெற்ற விழிப்பு நிலையாளரான தமிழ் மன்னர்களுக்கு நாட்டை ஆளும் தகுதி அளிக்கப் பட்டது... ஒரு சாதாரண குடிமகள் கண்ணகி, பாண்டியனுக்கு தவறை சுட்டிக் காட்டிய அந்த தருணமே தன் தவறை எண்ணி தாங்க முடியாமல் உயிரை விட்டான் பாண்டியன்.. முல்லை கொடி நிலை கண்டு தன் தேரையே தந்தான் ஒரு தமிழ் மன்னன்.. ஒரு பசுவின் கன்றுக்கு செய்த அநீதிக்காக தன் மகனையே தேர் சக்கரத்தில் மாய்த்தான் மற்றொரு தமிழ் மன்னன்... இந்த உயரிய பண்பினால் தான் தமிழ் மன்னர்களுக்கு ஆளும் தகுதி அளிக்கப் பட்டது.. இன்றைய கால கட்டத்தில் நம் அரசியல் வாதிகள் நம் தமிழ் மன்னர்களின் உயரிய நேர்மையை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு இருக்கிறார்கள்..

ஆனால் விரைவில் மர்ம யோகிகள் தங்களின் விழிப்பு நிலை உயர்வால் அன்பும் அறிவும் ஆற்றலும் அளவற்ற நிலையில் பெறப் போவதால், நாளைய உலகை ஆளும் பொறுப்பு அவர்களிடமே தரப் படலாம்.. காரணம் தமிழ் யோகத்தின் மேன்மை அத்தகையது.. ஆகவே மர்ம யோகம் பயிலும் அன்பர்கள் விழிப்பு நிலையில், அறிவும் ஆற்றலை மட்டும் பெற்று இருக்க மாட்டார்கள்... சிவ கலப்பின் மூலம் பாகு பாடு இன்றி எல்லா உயிரிடத்திலும் அன்பால் இணைக்கப் பட்டு 'அன்பே சிவம்' என்ற நிலையில் எளிமை என்ற உன்னத நிலையை தன்னகத்தே வைத்து இருப்பார்கள்.. இந்த எளிமை என்பதற்கு எடுத்துக் காட்டாய் சிவனே பிச்சாண்டியாய் வந்தார் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.. காமராசர் அப்துல் கலாம் போன்றோர் எளிமையால் எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்து நின்றது போல், அதற்கு மேலே மர்மயோகிகள் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.. மேலே சொன்ன அன்பரின் பிரச்சனை ஆரம்ப கட்ட விழிப்பு நிலையில் மனம் ஆடும் கடைசி விளையாட்டு.. அது விரைவில் காணாமல் போய் விழிப்பின் உன்னதத்தால் அன்பு மயமாகி சிவகலப்பால் சிவநிலை எய்துவார்கள்.... அது திண்ணம்...

No comments:

Post a Comment