Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினாறு


சீரான, சீர்கெட்ட மூச்சு
**********************************
பேரறிவின் நிகழ்கால, என்றும், எப்பொழுதும், எவ்விடத்தும், நித்திய ஆற்றலால், இயக்க தொடங்கிய உடனே சுவாசிக்க தொடங்கும் பிறந்த குழந்தை, நித்திய ஆற்றலுக்கு இயங்க தொடங்குகிறது.. அது தொடர்ந்து இயங்குவதால் அது எதையும் இயக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதனுடைய மனம் என்ற பூதத்தில் கனல் அல்லது நெருப்பு ஆற்றல் இன்னும் பக்குவப் படவில்லை.. சிறுக சிறுக பக்குவம் அடைய அது கிரகிக்கும் ஆற்றலை பெற தொடங்குகிறது.. பஞ்ச பொறிகளிலேயே கண் என்பது மனம் என்ற நெருப்பு புலனுக்கு சம்பந்தம் உள்ளதால்.. கண்ணில் கண்ட உருவ அமைப்புகளிலேயே மனம் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதால் மனம் உருவ சம்பந்த பட்ட விசயங்கள் தவிர வேறு பஞ்ச பூதங்களான அருவ நிலையில் உள்ள காற்று, ஆகாய பூத விசயங்களில் துளியும் நாட்டம் கொள்வதில்லை.. இது தான் தாழ்வு நிலை அடைவதற்கான மனிதனுக்கு உள்ள முக்கிய காரணம்.. பஞ்ச பூதங்களில் இடைபட்ட பூதமான மனம் எனும் நெருப்பு தான் கடவுள் நிலை அடைய சாதக பாதக சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது..
இந்த நெருப்பின் தன்மை என்ன? உணர்வாகவும் (சூடு), வெளிச்சமாகவும் (உருவ வடிவமாகவும்) உள்ளது.. எந்த வடிவமும் வெளிச்சமின்றி காணமுடியாது,, உப்பு, ஊறுகாயை நினைக்கும் போது ஏதோ அதை அனுபவித்த உணர்வால் நாக்கில் எச்சில் தோன்ற, அதை பற்றிய வடிவம் மன கண்களில் தோன்றுகிறது.. எந்த வடிவமும் வெளிச்சமின்றி தோன்றாது.. மனதில் உணர்வாக மட்டும் இருந்து வெளிச்சமே இல்லாமல் இருந்தால், அந்த உணர்வு தளர்ந்த மேல் நிலையாகிய காற்று என்ற பூதத்தோடு கலந்து தெய்வீக நிலைக்கு அழைத்து செல்லும்.. நொடியில் நடக்கும் அந்த செயலோடு வெளிச்சம் ஏதும் இல்லாததால் எந்த வடிவ தோற்றமும் மனம் அறிவதில்லை.. மனதில் வெளிச்சம் அதிகமாக இருந்தால் மனம் கீழ்நிலையான முதிர்ந்த நீர் பூதமான வடிவ பதிவிற்கு அழைத்து செல்லும்..
ஆக மனதில் உணர்வும் வெளிச்சமும் கலந்து உள்ள நிலையில் முறையான வாசி பயிற்சியால் மனம் முழுமைக்கும் உணர்வாக மாற்றிடும் போது தான் மனம் சுத்த மனம் ஆகிறது என்ற மர்மத்தை என்றும் மறக்கக் கூடாது.. அந்த உணர்வுக்கு வெளிச்சம் இல்லாததால் எந்த உணர்வையும் மனம் அறிவதில்லை.. ஆனால் மனம் உணர்வு மயமாகி தளர்வு நிலை அடைந்து காற்றின் துரித வேகத்தை அடைகிறது.. வடிவ அமைப்பை தரும் வெளிச்சத்தின் வேகமோ, முதிர்ந்த பரு நிலையில் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.. நீரின் வேகத்தை காட்டிலும் காற்றின் வேகம் அதிகம் தானே.. முதிர்ந்த நிலை ஒன்று தளர்ந்த நிலைக்கு வரும் பொழுது அதன் வேகம் அளவற்ற நிலையில் கூடுகிறது.. எதையும் நொடியில் முடிவு எடுக்கும் திறமை உணர்வுக்கு மட்டுமே உண்டு.. செருப்பின்றி நடக்கும் பொழுது எதாவது முள் குத்தி விட்டால் நொடிக்கும் குறைவான வேகத்தில் காலை எடுத்து விடுகிறோம்.. அப்பொழுது மனதிற்கு என்ன குத்திவிட்டது என்ற வடிவ வெளிச்சம் தெரியாமலேயே காலை எடுத்து விடுகிறோம்.. அந்த நிலையில் மனம் துரித வேகம் கொண்ட புத்தி பூதமாகி வேகம் கொள்கிறது..
காற்று மனதிற்கு தளர்ந்த நிலை.. நீர் மனதிற்கு முதிர்ந்த நிலை.. அவ்வளவே.. நீர் என்பது வெளிச்சமாய் பலப்பட்ட வடிவ பதிவுகள்.. ஏக்கங்களாய் நிறைந்து தனக்குள் சிக்கிக் கொண்ட தூண்டல் உணர்வை கொண்டுள்ளது.. நீர் பூதத்தின் இந்த தூண்டல் உணர்வே நம் அனைத்து துன்பங்களுக்கு காரணம்.. சற்று உற்று படியுங்கள்.. முதலில் படித்தது போல் குழந்தை நிலையில் உள்ள சீரான இறை ஆற்றல் தூண்டுதலால் உள்ள மூச்சை, வளர்ந்த நிலையில், ஏக்க தூண்டுதலால் பாதிக்கப் பட்டு சீரான மூச்சு, நிலை தடுமாறி சீர் கெட்ட மூச்சாக மாறுகிறது.. வாசியோக மொழியில் சொன்னால், நற்கதியில் ஓட வேண்டிய சீரான மூச்சு, அதோ கதியில் சீர் கெட்ட, ஒழுங்கு இல்லாத, மூச்சாக ஓடுகிறது.. காமம் பயம் கோபம் பொறாமை என்பவை எண்ணங்களின் ஏக்க தூண்டல்களே.. அதிக கோபமும் பயமும் அடைந்த மனிதனின் சீர் கெட்ட மூச்சை அனைவரும் அறிந்ததே.. அந்த அதோ கதி மூச்சில் நீடித்தால் மரணம் நேரிடலாம்.. அதிக கோபத்திலும் பயத்திலும் இறந்தவர்களை கேள்வி பட்டு இருக்கிறோம்.. இவையெல்லாம் சீர் கெட்ட, அதோ கதி, மூச்சில் நடந்தவை...
இயற்கையாக மரணம் அடையும் மனிதன் கடைசி தருவாயில் ஓடுகின்ற சீர் கெட்ட மூச்சின் தன்மையை வைத்து,எத்தனை நாளுக்குள், எத்தனை மணிக்குள் எத்தனை நிமிடத்திற்குள் மரணம் அடைவான் என்பதை துல்லிதமாக கணிக்கும் சித்த மருத்துவர்கள் உண்டு.. இப்போது இரண்டு வகை தூண்டல்களை பார்த்தோம்.. ஒன்று இறை தூண்டல் மற்றொன்று ஏக்கத் தூண்டல்.. இறைதூண்டல் ஒரு சீரான தூண்டல்.. குழந்தை ஒன்று பெரு மூச்சு விடுவதை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.. சுவாசம் அது பண்ணுவது கூட கண்டு பிடிப்பது மிகவும் சிரமம்.. வயதானவர்களிடம் அதற்கு நேர் மாறானது.. மூச்சு திணறல், பெரு மூச்சு போன்றவைகள் மிக சகஜம்.. ஏக்க தூண்டலால் சீர் கெட்ட மூச்சு நடை பெறுகிறது.. சீர் கெட்ட மூச்சால் எல்லாம் கெடுதலும் நடக்கிறது.. மூச்சு அதோ கதியில் நடை பெறுகிறது.. இப்பொழுது உற்று கவனியுங்கள்... வாசியோகப் பயிற்சியில் எந்த வகையான மூச்சு கற்பிக்கப் படுகிறது ?.. உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.. அடுத்த பகுதியில் அந்த சீர் கெட்ட மூச்சை எப்படி சீரான மூச்சு ஆக்கி அளவற்ற ஆற்றலை பெற முடிகிறது என்பதை தெளிவாக பார்ப்போம்.. இந்த பகுதியில் உள்ள விசயங்களை நினைவில் நன்கு வைத்து கொண்டால் தான் முக்கியமான அடுத்த பகுதி நன்கு புரியும்...அவ்வளவே..

No comments:

Post a Comment