Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பத்து


பேரறிவின் பேராற்றல் பெறல்
*********************************************
சற்று உற்று கவனித்தால் மட்டுமே விளங்கும் இந்த பகுதி பிரபஞ்ச பேரறிவின் ஆசியோடு எழுத வேண்டிய அவசியம் ஆகிறது.. முதலில் பேரறிவினை வேண்டிக்கொள்கிறேன்.. விசயத்திற்கு போகலாம்.. நல்ல விருந்து ஒன்றில் சாப்பிடுகிறோம்.. பக்கத்தில் உள்ள ஒருவரோடு சின்ன வாக்குவாதம் வருகிறது.. அப்படி ஒருவர் இல்லை என்றாலும் நம் மனதில் ஒருவர் தயாராக வாக்கு வாதத்திற்கு இருப்பார்.. மிக சுவையான விருந்து.. வாக்குவாதம் ஒரு பக்கம்.. விருந்தின் சுவை ஒரு பக்கம்.. மனது இரண்டாக பிரிகிறது.. ஒன்று வாக்கு வாதத்திலும் மற்றொன்று உணவின் சுவையிலும் ஈடு படுகிறது.. விருந்து முடிந்து எழுந்த உடன் ஏதோ ஒரு குறை.. சொல்ல முடியாத குறை.. அற்புதமான விருந்தில் குறை ஒன்றும் இல்லை.. பின் எதில் குறை ? தான் விருந்தை அனுபவித்ததில் குறைக்கான காரணம் என்பது நமக்கே தெரியாமல் இருக்கிறது.. அது ஒரு ஏக்கமாக ஒரு அழியாத வடுவாக நம் பதிந்து விடுகிறது.. பின் அது போன்ற விருந்தில் மீண்டும் கலந்து கொள்ளவே மனம் துடிக்கிறது.. இப்படி ஒரு ஏக்கம் அல்ல, ஆயிரம் ஆயிரம் ஏக்கங்களை சுமந்து மனிதன் இருக்கிறான்..
ஒரு வெட்கப்படதக்க விசயம் என்ன வென்றால், அதே போல் விருந்து மீண்டும் வந்தாலும், ஆயிரம் ஏக்கங்களை சுமந்த மனிதன் அந்த விருந்தை முன்னை போல் கூட அனுபவிக்க முடிவதில்லை.. வாழ்க்கையில் எவ்வளவு இன்பங்கள் கிடைத்தாலும் அனுபவிக்கும் தகுதி இல்லாதவனாக இருக்கிறோம்.. அவ்வளவு இன்பங்களும் முடிவில் ஏக்கம் என்ற துன்பமாக மாறி மனிதனை வதைக்கிறது.. சோகமே வடிவாய் ஏதோ ஒரு கால கட்டத்தில் மனிதன் இருக்கிறான்.. ஞான அடைந்து விட்டதாக கருதப் படும் குரு மார்களின் கண்களிலும் சோகமே தெரிகிறது.. இதற்கு வழியே இல்லையா ? இருக்கிறது.. சோகத்தில் சோர்ந்து போகாமல் சோகத்தால் செயலில் தளர்வு கொள்ளாமல், இன்பமயமாய் அன்பே நிறைந்து, செயல் வடிவாய் உலக பிரச்சனைக்கு ஒரு தீர்வாய் ஒரு நிறை மனிதன் பேரறிவின் துணை கொண்டு நிறைந்து நிற்கிறான்.. பேரறிவு என்பது என்ன ? நீங்காத அனுபவ அறிவு.. ஒரு அனுபவம் நீங்காத நிலையில் இருந்து விட்டால், மீண்டும் அந்த அனுபவம் நடை பெற விரும்பவே மாட்டோம்.. ஏக்கம் என்பது துளியும் இருக்காது.. ஒரு உலக சார்போடு சேர்ந்து அனுபவிக்கும் பொழுது மிக மிக எச்சரிக்கையாக அனுபவிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அது ஒரு ஏக்கமாக மாறி ஜென்ம ஜென்மமான தொல்லைகள் தரும் நிலையை பெற்று விடும்.. அதில் ஏற்படும் குறைவு பட்ட அனுபவமே, நீங்காத குறையாக, ஜென்ம ஜென்மமான ஏக்கமாக மாறுகிறது.. உலக சார்புகளை சாரும் பொழுது இப்பொழுது நமக்கு பொறுப்பு ஒன்று வருகிறது.. எந்த இன்பத்திற்கும் பின்னால் துன்பமும் தொடர்ந்து வரும் என்ற விதியை மாற்றி, இன்பத்தை இன்பமாகவே வைத்துக் கொள்ளும் ஒரு யுக்தியை அறிந்து கொள்ள வேண்டும்.. பின் விழைவான ஏக்கம் மூலமாக துன்பம் நேரிடாத வகை அறிந்து கொள்ள வேண்டும்..
உலக சார்புகளை அனுபவ படுமுன் வேகம் கொள்ளாமல், சற்று நிதானமாக பஞ்ச பூதங்களின் முழு சக்தியை ஒன்று திரட்டி பஞ்ச பூதங்கள் அனைத்தும் அனுபவ படும்படியான தயார் நிலையில் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.. இதுவரை நீர், நெருப்பு என்ற பூதங்களான சித்தம், மனம் ஒன்றிலேயே அனுபவ பட்ட நாம் இப்போது பஞ்ச பூதங்களிலேயும் அனுபவ பட தொடங்குகிறோம்.. மிக சாதாரண உணவையே உண்கிறோம் என வைத்துக் கொள்ளுவோம்.. சித்தத்தில் அந்த உணவை உண்ட அனுபவ எண்ணங்களை ஒன்று திரட்டி அதில் அடைந்த ஏக்க உணர்வுகளையும் ஒன்று திரட்டி, அந்த சாதாரண உணவையே நம் ஏக்கத்தை தீர்க்க வந்த சந்தர்ப்பமாக நினைத்துக் கொண்டு மனம் மதியான அக்னி நிலையில், எந்த எண்ணங்களின் குறுக்கீடுகள் இன்றி, இதுவே உகந்த தருணம், இத்தருணம் விட்டால் இனி எத்தருணம் வாய்க்குமோ என புத்தி பூர்வமாக காற்று என்ற பூதத்தில் உணர்ந்து, நிகழ் நிலையில் பூரண,ஆழ்ந்த அனுபவ அறிவான ஆகாய நிலையோடு இணைந்து, உண்ணத் தொடங்க அது அமிர்தமாக தென்படும் என்பது மிக தெளிவான உண்மை.. அந்த சாதாரண உணவில் அடைந்த அந்த பூரண அனுபவம், உணவு விசயங்களில் ஏற்பட்ட ஏனைய அத்தனை ஏக்கங்களையும் தகர்த்து எறிந்து விடும்.. இப்படி நீர் என்ற சுவை அனுபவத்தில் ஏற்பட்ட ஆயிரமாயிரம் ஏக்க உணர்வுகளை, ஒரு சாதாரண உணவை பூரண பஞ்சபூத நிலைகளில் அனுபவப்படும் ஒரே ஓரு அனுபவமே, தகர்த்து எறியும் மர்மமான அற்புதங்கள் தான் உண்மையான ஆன்மிக அனுபவங்கள்.. ஆனால் ஒருசெயலில் பஞ்ச பூத பூரண அனுபவம் பெறுவதே நான் சொல்லும் கருத்துகளின் ஆணி வேர்.. இந்த கருத்தில் உடன் பாடு இல்லை யென்றால் வேறு ஒன்று எதுவும் உதவாது என்பது என் உறுதி பாடு.. மிக பெரிய விசயங்களில் குறை அனுபவங்களால் ஏற்படும் முதிர்ந்த ஏக்கங்களால் அல்லல் படும் மனித இனம் மிக மிக சாதாரண விசயங்களில் ஏற்படும் பூரண அனுபவத்தால் பூரண நிறைவு அடைந்து, ஆசைகள் அற்ற தெய்வ நிலைக்கு திரும்புகிறது.. ஆசைகளே துன்பங்களுக்கு காரணம்.. 
ஆசைகளை ஒரு நாளும் நீக்கவும் அழிக்கவும் மிக சிரமம்... அது நிறைவேறும் வரை மறையாது.. ஆசையற்று இரு என்று சரியான வழிகாட்டாத உபதேசம் மிகவும் மோசமானது.. சிறு சிறு ஆசைகளால் ஏற்பட்ட பல ஏக்க உணர்வுகள் பூரண பஞ்ச பூத ஒரு அனுபவத்தாலே நீங்கி விடும் என்பதை என்றும் மறக்கக் கூடாது.. பூரண நிறைவே நிறை நிலை மனிதனின் வடிவம்.. ஆசைகளே அற்றவன்.. ஆனால் கடமை உணர்வு அன்பிலே எழுவது.. அது ஒரு போதும் ஆசை ஆகாது.. அன்பின் எதிர் இயக்கமே ஆசை.. அன்பு இல்லாத கடமை மறந்த குடும்பத்தை விட்டு ஓடும் சாமியார் கூட்டம், செயலற்ற கையலாகாத,வீரமில்லாத, பொறுப்பற்ற, தீவிர வாத கூட்டம்.. கடமை அன்பில் விளைவது.. அது ஆசைக்கு புறம்பானது.. ஒரு கடமையாளனுக்கு பஞ்ச பூதங்கள் உதவி செய்தே ஆக வேண்டும்.. அன்பின் வடிவமான அவனுக்கு மிக பெருத்த ஆன்மலாபம் பெறும் தகுதி இருக்கிறது.. மேல் சொன்னவற்றில் என்ன வாசியோகம் இருக்கிறது என் கேட்கலாம்.. வாசியில் உள் மூச்சில் அனுபவம் ஆகும் அக்னி நிலையில், மேலும் கீழும் ஓடுவதை போல் தோன்றும் வாசி, ஒரு பூரண பஞ்ச பூத அனுபவம் பெறும் போது, மேலும் கீழும் ஒடாது அந்த அனுபவத்தை சுற்றி சுற்றி சுழல தொடங்கும்.. மேலும் கீழும் ஓடும் வாசியால் அனுபவத்தை விட்டு விலக நேரிடலாம்.. அதனால் அனுபவ குறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்.. அதனால் அனுபவத்தில் சுழலும் வாசி தேவை படுகிறது.. சுழலும் வாசியில் ஏற்படும் தெளிவு என்ற பேர் ஒளி (light) யில் அனுபவிக்கப்படும் சார்புகளின் தன்மை பூரணமாக வெளிப்பட்டு, அது பூரண அனுபவத்திற்கு உதவுகிறது.. வாசியோகத்தில் இந்த சுழலும் வாசியே உயர்ந்த நிலை.. ஒரு பொருளின் பரு தேகம் நுண் தேகம் காரண தேக இயல்பை உள்ளதை உள்ளவாறு காட்டும் சுழல் வாசி தரும் ஓளிதான் ஞானம் தரும், பூரண அனுபவம் தரும்.. அதுவே ஆகாயதின் இயல்பான பேரறிவு..
இறைவன் கைகளில் உள்ள சங்கு சக்கரம் அவைகள் தரும் ஒலியும்,ஒளியும் குறிக்கும்.. பிறவி பயனாய் தோன்றும் செயலுக்கு, வேண்டிய செயல் திறனுக்கு, இயக்க சக்தியாகிய நாதமும்; பூரண அனுபவம் பெறவும்,அதனால் ஏக்கங்கள் ஒழிந்து இன்பமுற்று இருக்கவும் பெரும் தெளிவு என்ற ஒளிக்காக சக்கரமும் அடையாளமாக உள்ளன.. சற்று ஆழ்ந்து படித்தால் மட்டுமே புரியும் இப்பகுதியை கவனமாக படிக்குமாறு வேண்டிக்கொள்கின்றனன்...

No comments:

Post a Comment