Friday 26 June 2015

பகுதி பதினைந்து;---- நாளைய நிஜம்

இதம் ஒன்றே முதல் வேதம்
கதம் என்பது அதிகப் பட்ட வெப்பநிலை.. அதாவது வெப்பம், சூடு, போன்றது... பதம் என்பது குறைவு பட்ட வெப்ப நிலை.. அதாவது குளிர்ச்சி போன்றது... நமது தேகம் இந்த வெப்பத்திற்கும் குளிர்ச்சிக்கும் இடையே அதற்கு இதமான ஒரு வெப்பநிலையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் வாழ முனைகிறது.. சுற்று புற சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தன்னை மாற்ற முனைந்து, தன்னில் இருக்கும் ஒரு விசித்திரமான தெய்வீக அமைப்பின் உதவியால் தேகம் தன்னை காத்துக் கொள்கிறது.. பனி பிரதேசங்களின் கடும் குளிரையும், பாலைவனத்தின் கடும் வெப்பத்தையும் காத்துக் கொள்ளும் திறன் உடையதாக உள்ளது..
இப்படி வெளியே உள்ள தட்ப வெப்ப நிலைகளுக்கு, மாற்றிக்கொள்ளும் திறமை உடைய தேகம், தன் உடன் இருக்கும் நெருப்பு என்ற பூதமான மனம் என்ற பூதத்தினிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல சமயங்களில் வகை அறியாமல் தவிக்கிறது.. அதிகமான கோபம், விரக்தி அடையும் சமயங்களில் ஏற்படும் மித மிஞ்சிய ஒரு வகையான சூட்சம வெப்பத்தால் தேகத்தில் நடுக்கம், படப்படப்பு போன்றவற்றால் தேகம் தன் நிலை குலைந்து போகிறது.. மிக ஆழமான காதல்,காம எண்ணங்களாலும் தேகம் தன் இயல்பான நிலை இழக்கிறது... அதிகப் படியான தூக்கம், சோர்வு, சோம்பலால், தேகத்தில் பதம் என்ற குளிர்ச்சி அதிகரித்த நிலையில் தேகம் நிலை குழைகிறது...
இந்த நிலையில் கதம் பதம் இரண்டிற்கும் இடையில் இதம் என்ற நடு நிலைக்கு முனைவது மூலம் தேகம் சற்று ஆரோக்கியத்துடன் இருக்கிறது... ஆனாலும் மிக நுண்ணிய துல்லிதமான நடு நிலையில் தேகம் மிகவும் வலுவடைந்து, ஆரோக்கியத்தின் உச்சநிலைக்கு செல்லுகிறது.. இந்த துல்லிதமான நடுநிலையில் தேகம் சில மணிகள் கால அளவில் நீடித்து இருக்க முடிந்தால், தேகமானது தன் தேகத்தில் உள்ள குறைபாடுகள் அத்தனையும் நீக்கிக் கொள்ள முடியும்.. அதாவது தன்னில் உள்ள அனைத்து நோய்களையும், நீக்கி, தேகம் தன்னை தானே சரி செய்து கொள்ள முடியும்....
அந்த நடு நின்ற இத நிலை என்ன? மிகவும் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தின் இயல் நிலையே இந்த இதமான நிலைதான்... அது ஒரு ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் ஒரே சீரான சக்தி அலை வரிசையில் மிக மிக துல்லிதமாக பிரபஞ்சம் முழுமைக்கும் எங்கும் எந்த காலத்திற்கும் சீராக பரவி கொண்டு உள்ளது.. இதைதான் நம் தமிழ் சித்தர்கள் அதனை பரநாதம் என்று சொல்லி வைத்தார்கள்.. அந்த சீரான அலை வரிசைக்கு அருகில் செல்ல செல்ல ஏற்படுகின்ற ஒரு ஒழுங்கான அலை வரிசையை நாம் நம் தலை நடுப் பகுதியில் உணரலாம்.. அதை நாதம் எனலாம்.. ஆனாலும் அது பரி பூரண ஒன்று அல்ல.. அது பிரபஞ்ச துல்லித நுண்ணிய அலை வரிசையோடு கண கச்சிதமாக பொருந்தக்கூடிய ஒன்று அல்ல, நாம் உணரும் நாதம்.. அது சற்று வேறு பாடுகளோடு இயங்குவதால் நம்முடைய நாதம் அந்த பரநாதத்திற்கு இணையாக, பட்டும் படாமலும் இயங்கி கொண்டு இருக்கிறது... படும் தருணம் நம் தேகம் அதி இதமான அதீத உணர்வையும், படாத பட்சத்தில், ஆனால் அருகில் இருக்கின்ற காரணத்தினால் அதற்கு சற்று குறைவான இதத்தை நம் தேகம் பெறுகிறது.. இந்த இதத்தை விட்டு விலகி இருக்கும் நிலையில் தான் தேகம் தன் நிலை குழைகிறது... அந்த பரநாதத்தோடு பூரணமாக இணைந்து மோனநிலையில் தன்னை இழந்து விடாமல், பரநாதத்திலிருந்து வேண்டிய ஆற்றலை பெற்று மதியோடு வாழ்ந்து தன் கடமையை ஆற்றுபவன் தான் நிறைநிலை மனிதன்...
இந்த இதம், தேகத்திற்கு என்ன செய்கிறது.. குஞ்சு பொரிக்கும் கோழி தன் முட்டையின் மேல் அமர்ந்து தன் உடம்பினை 21 நாட்கள் பிரபஞ்ச பரநாதத்துடன் தொடர்பு வைப்பதின் மூலம் பிரபஞ்ச ஆற்றலான பர நாத வெப்பமான இதத்தால் முட்டை உள்ளே ஒரு உயிர் இனம் தோன்ற வகை செய்கிறது... எல்லா உயிர்களும் தன்னை அறியாத நிலையில் இந்த இதத்தில் தான் தன் இன பெருக்கம் செய்கிறது... அந்த பரநாத இதத்தில் கருவிலே உருவாவது தான் இதயம் என்ற தேகத்தில் தோன்றும் முதல் உறுப்பு..
எந்த இதத்தால் மனிதன் பிறந்தானோ அதே இதத்தால், தான் பிறவா நிலையாகிய நித்திய நிலையும் பெற முடியும் என்ற மிக தெளிவான ஆன்மீகத்தை மனிதன் மறந்தே போய் விட்டான்... அந்த இதமான உணர்வுக்கு பங்கம் விளைவிக்கும் அத்தனை செயல்களும், உலகில் நடைபெற்று இன்று மனித குலம், நரை திரை மூப்பு சாக்காடு இவைகளுக்கு உட்பட்டு மண்ணில் வாழ்க்கையை இழக்கிறான்... மிக ஆச்சரியமான விசயமும் வருந்தத் தக்க விசயம் என்னவென்றால் இன்றைய ஆன்மீகமே இதத்தை கெடுக்கக் கூடிய அளவில் அமைக்கப் பட்டு இருக்கிறது.. எல்லா மதங்களின் போதனைகளும் எப்படி தேக மன நோய் தீர்க்கலாம் என்பதை பற்றி சொல்லி இருக்கிறதே தவிர நோய் வராத நிலையையோ, தேக மன ஆரோக்கியம் தக்க வைக்கும் வழி முறைகளை சரியான முறையில் சொல்லவே இல்லை.. இன்னும் சற்று விழிப்பு நிலையில் ஆராய்ந்தால், அத்தனை சாஸ்திரங்களும் வேதங்களும் யோக முறைகளும் இதத்தை கெடுக்கவே இருக்கின்றன என்பது அதிர்ச்சி ஊட்டும் செய்தியாக உள்ளது... இதத்தை கொடுக்க துளி அளவும் அமைய வில்லை.. உண்மையிலே அதிர்ச்சி ஊட்டும் செய்திதான்.. இதை அறிந்து தான் மதங்கள் சமயங்கள் மார்க்கங்கள் ஆகியவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்கள் நம்மை பற்றாத வண்ணம் காத்து அருள் புரிதல் வேண்டும் என்று அருள் பெருஞ்சோதி ஆண்டவரிடம் முறையிடுகிறார் வள்ளலார்.. இதத்தை கெடுக்கும் அவைகளால் ஒரு பலனும் இல்லை என்பது மட்டும் அல்ல, அவைகளால் மனித இனத்திற்கு மட்டும் அல்ல எந்த உயிருக்கும் தீங்கையே விளைவிக்கிறது... இன்றைய நிலையில் வாசியோக உள்பட அனைத்து யோக முறைகளும் அசுத்த கனலாக கதத்தை பெருக்க வைத்து, அதனால் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகளும் உபாயமாக வைக்கப் பட்டு இருக்கிறது...
பின் மனிதன் என்ன தான் செய்வது.. அவனுக்கு கருவிலே வழங்கப்பட்ட இதம் என்ற விழிப்பு நிலையில் சதா காலமும் பிரபஞ்ச பேராற்றலும், பேரறிவும் பெற்று பெருவாழ்வு வாழும் முறையை மீண்டும் நினைவு கொண்டாலே போதும்.. கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை.. உலக கல்வி அத்தனையும் வீணே.. ஓதாத கல்வியாகிய அந்த இதத்தை நினைவு கொள்ளுவது ஒன்றே போதும்.. தன்னையே இழக்க வைக்கும், உலக மத சமூக போதனைகளின் மன கழிவுகளை அகற்றி, தோன்றா நிலை ஒன்றை மனம் அடைந்து விட்டாலே போதும்.. அங்கு ஓதாத கல்வி, தோன்றாமல் தோன்றி விழிப்பு நிலை பெருக்கத்தால் இதம் நிலை பெறலாம்... பேராற்றலும் பேரறிவும் பெற்று நிறை வாழ்வு வாழலாம்.. இதம் பெறும் வழியே முதல் வேதம் ஆகவேண்டும்.. அதுவே அமிர்தமாக நம் உள் குடி கொண்டு எனைய உலக மத சமூக வேதங்கள் தரும் விஷத்திற்கு மாமருந்தாக இருந்து மனித இனத்தைக் காக்கும்... அந்த தோன்றா நிலை பயணத்தின் மூலம் ஓதா கல்வியில் இதம் நிலையை நீங்கா நிலையாக பெற்றால் ஒவ்வொருவரும் நிறைநிலை மனிதன் ஆகலாம் என்பது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment