Friday 26 June 2015

பகுதி பத்து :---- நாளைய நிஜம்

உண்மை மறைந்து இருக்கும் இடம்
***************************************************
ஆயிரம் ஆயிரம் பாடல்; அத்தனையும் ஆன்மிக எழுச்சிக்கான பாடல்கள்... தத்துவத்தை பிழிந்து எடுத்து சொல் வித்தைகளை ஜோடித்து, கவிதை நயம் கூட்டி, இலக்கண பலத்தோடு சமூகத்தில் வலம் வரும் பாடல்களின் தொகுப்புகள்.. எதற்கு எடுத்தாலும் எடுத்துக் காட்டாக விளங்கும் அற்புத பாடல்கள்.. பின், கட்டுரைகள், உபதேசங்கள்,சொற்பொழிவுகள் எல்லாம் ஆன்மீக எழுச்சிக்காக உருவாக்கப் பட்டன.. முற்கால முதல் வழக்கத்தில் கடல் அளவு உள்ள இதிகாசங்களும் சாஸ்திரங்களும், புராணங்களும் அவைகளின் உப கதைகளும், உள்ளன.. அத்தனையும் படிக்க ஒரு மனிதனுக்கு ஏழு ஜென்மங்கள் ஆகும் என்பது தோராயமான கணிப்பு.. இதை தவிர இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் நவீன குருமார்களின் பங்கு, பழைய ஆன்மீக பதிவுகளின் அளவுகளை காட்டிலும் பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது... சுய உதவி புத்தகங்கள் பெருகி கொண்டே போகின்றன...
அவைகள் எல்லாம் இருந்து விட்டு போகட்டும்.. அவைகள் எந்த அளவு மனிதனை இந்த கால கட்டத்தில் உதவி செய்கின்றன என்பதே மிக முக்கியமான ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய விசயம் ஆகும்.. பேரண்ட பேராற்றலை பெறுவதே நம் நோக்கம்.. அப்படி பெற்ற ஆற்றலை சேர்த்து வைக்கும் இடம் நம் தேகமே என அறிந்தோம்... நாம் பெற்ற பேரண்ட ஆற்றலால் மட்டுமே உயிர் செல்கள் ஒங்கி வளருகின்றன.. அல்லது உற்சாகம் அடைந்து பலம் பெறுகின்றன.. இதனால் தேகம் ஊக்கம் அடைந்து உயிர் சக்தியால் ஆக்க சக்தி பெறுகின்றோம்....அதனால் எல்லா வகையிலும் புத்தியும் அறிவும் பெற்று மேன்மை அடைகின்றோம்... அப்படி பேரண்ட பேராற்றலை பெற, தேகம் ஒரு குறிபிட்ட பண்பட்ட நிலைக்கு வரவேண்டி இருக்கிறது... தேகம் அந்த நிலையோடு சதா காலமும் ஒத்து போவதற்கு, மனதையும் ஒரு பண்பட்ட நிலைக்கு மாற்ற வேண்டி உள்ளது.... மனம் ஒரு உகந்த பண்பட்ட நிலைக்கு வந்தால் தான், அதற்கு ஏற்றால் போல் தேகம் பேரண்ட ஆற்றலை வாங்கும் பண்பட்ட நிலைக்கு வரமுடியும்... இதை நாம் உணர்ந்த நிலையில் மட்டுமே, உலகில் உள்ள அனைத்து ஆன்மிக பயிற்சிகளும், யோகங்களும், போதனைகளின் தரத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.. பேரண்ட பேராற்றலை பெற தகுதி இல்லாத உபதேசங்கள் பயிற்சிகள் எதுவானாலும், அது இறைவனே கொடுத்து இருந்தாலும், அது பலன் இல்லாதவைகளாகவே கருதப் படும்.. இதில் எந்த அளவும் சந்தேகம் இல்லை...
பேரண்ட பேராற்றலின் அலை வரிசைக்கு இசைந்து வாழும், அல்லது அந்த அலை வரிசையை தொட்டு செல்லும் வாசியோகப் பயிற்சியினை அறிந்தோம்.. சூரிய கலையின் தளர் நிலையில் இரண்டரை விநாடிகளில் முடிந்த நிலையில் பேராற்றலின் அலை வரிசைக்கு இசைந்த நிலையில் சுவாசத்தின் தளர்நிலையை தரக் கூடிய சூரிய கலை, தொட்டு செல்வதை தேக உணர்வால் அடையாளம் காண வேண்டும் என்பதை அறிந்தோம்.. அப்படி தேகம் மிக நுண்ணிய கால அளவில் பேராற்றல் அலை வரிசையோடு இணைந்து சூரிய கலையின் துணையோடு பேராற்றலை பெறும் உபாயத்தை நீங்கள் இதுவரை அறிந்தது உண்டா ? பேராற்றல் இருக்கும் இடமும், கிடைக்கும் இடமும் தான் உண்மை இருக்கும் இடம்.. அந்த பேராற்றல் மட்டுமே உண்மையான சத்தியமான ஆற்றல்.. ஏனைய ஆற்றல்கள் அனைத்தும் அதன் பிரதி பலிப்பே...
இரண்டாவதாக பேராற்றல் இருக்கும் அந்த அலைவரிசை வீச்சு எல்லையில் ( frequency range ) நமது சூரிய கலை சந்திர கலை மூச்சு சுவாசத்தை மெதுவாக ஓட விட்டு அதிகமாக அந்த பேராற்றல் அலைவரிசையோடு இணையும் நேரத்தை அதிகப் படுத்துவதின் மூலம், அதிக பேராற்றலை அடையும் உபாயத்தை அறிந்தோம்...
மூன்றாவதாக ஒன்பது வாசல்களை எப்படி அடைத்து அந்த பேராற்றல் அலை வரிசையோடு தொடர்ந்து இருக்கும் பத்தாம் வாசலின், உள்வாசம் செய்யும் உபாயத்தை அறிந்தோம்.. இப்படியான ஓர் மென்மையான கவர்ச்சி அற்ற நம் யதார்த்த, இயல்பான சுவாசத்தின் மூலம் பேரண்ட பேராற்றலை பெறும் மிக பெரிய ஆன்மா இலாபம் தரும் வழியினை அறிந்தோம்.. ஆனாலும் பெரும் பாலானவர்களிடம் ஒரு நெருடல் உள்ளது.. கவர்ச்சியான பயிற்சிகளிலும் உபதேசங்களிலும் இதுவரை கற்றுக் கொண்டு வருபவர்கள், தாங்கள் கற்று கொண்டு வரும் பயிற்சியில் இதுவரை பலன் எதுவும் கிடைக்காவிட்டாலும், இனிமேல் கிடைக்கும் என்று நம்பி கொண்டு உள்ளனர்.. பல வருட பயிற்சி வீணாகி போகின்றதை ஒத்துக் கொள்ள அவர்கள் மனம் மிகவும் கஷ்டப் படுகிறது.. ஏதோ சில உணர்வுகளில் மயங்கி பலனுக்காக ஏங்கி நிற்கின்றனர்...
பேராற்றல் பெறுகின்ற மெல்லிய இனத்தை சேர்ந்த அலை வரிசையை உணர்த்தக் கூடிய, சூரிய கலையை, வாசியோகத்தில் பக்குவம் இல்லாதவர்களும், அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் வல்லினத்தை சேர்ந்த உபதேசங்களும் இன்றைய கவர்ச்சி பயிற்சிகளும், இது வரை, அந்த மெல்லின உண்மை இருக்கும் இடத்தை சுட்டி காண்பிக்கவே இல்லை.. சுட்டி காண்பிக்கவும் முடியாது... வல்லின பயிற்சியாளர்களுக்கு என்றுமே அந்த மெல்லின இடம், உண்மை உறங்கும் இடமாகவே இருக்கும்... அவர்கள் அனுபவ படுகின்ற அத்தனை உணர்வுகளும் வல்லின உணர்வுகளே.. காமம், கோபம் போன்ற உணர்வுகளும், அவைகளை சார்ந்த அத்தனை உணர்வுகளும், வல்லின உணர்வுகளே.. ஆனால் பேராற்றல் பெறும் போது ஏற்படுகின்ற உணர்வுகள் மெல்லின உணர்வுகள்... இதை, தளர்ந்த, அந்த சூரிய கலையில் ஓர் இடத்தில், பேராற்றலின் அலைவரிசைக்கு ஒத்த நிலையில், மட்டுமே பெற முடியும்.. வல்லின உணர்வுகளில் ஏமாந்து போய் வல்லின பயிற்சிகளை தொடர்ந்தால், வாழ் நாள் வீணாகி போவது நிச்சயம்... சித்தர் பெருமக்களால் உணர்த்தப் பட்ட கவர்ச்சி இல்லாத இயதார்த்தமான,முறையான, வாசியோகப் பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்து பயின்றால் எல்லாம் செயல் கூடும் என்பது நிச்சயம்...
இன்னும் நமது அன்பர்களின் மனதில் பழைய பயிற்சிகளின் கவர்ச்சி பிடிப்பை, அவர்கள் கேட்கும் கேள்விகளின் மூலம் நன்கு உணர முடிகிறது... விதை விதைத்தாகி விட்டது... விதை முளைப்பது அவரவர் கைவசம் உள்ளது... ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும்... அந்த கவர்ச்சியான பயிற்சிகள் மிக எளிதாக எவ்வளவு நேரம் ஆனாலும் செய்யலாம்.. ஆனால் இந்த முறையான வாசியோகப் பயிற்சியினை ஆரம்பத்தில் இரண்டு நிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய முடியாது என்பதே இதன் தனி சிறப்பு என்பதை அறிவீர்கள்... மிக மிக இயதார்த்த பயிற்சியான சுவாச ஒழுங்கு பயிலுவதில் இருப்பதை போல், நம் விழிப்பு நிலை உயர்வதை, எந்த பயிற்சியிலும் காண முடியாது என்பது சுவாச ஒழுங்கு பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே விளங்கும்... மேலும் உண்மை உறங்கும் இடத்தை இந்த பயிற்சி ஒன்றே அறிய முடியும்.. இந்த பயிற்சி ஒன்றே, உறங்கும் உண்மை, இருக்கும் இடமான அந்த பேராற்றலின் அலைவரிசை வீச்சு எல்லைக்குள் நுழைய முடியும் என்பது தெள்ள தெளிவு.. வேறு எந்த வல்லின பயிற்சிகளுக்கு அந்த இடம் அடைய சாத்தியம் இல்லை.. இல்லவே இல்லை... ஆகவே மேற் கொண்டு எதுவும் அதிகமாக சொல்ல தேவை இல்லை.. இந்த இயல்பான முறையான வாசியோகப் பயிற்சியின் மூலம் நாம் அனைவரும் நிறைநிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment