Friday 26 June 2015

பகுதி பதிமூன்று :---- சித்தர் ஆவது எப்படி ?

பிறவி தாண்டிய அனுபவத்தில் கனல் பெருக்கம் பெறல்...
எதுவாக இருந்தாலும் எந்த உடைமைகளை கொண்டு இருந்தாலும், எந்த எந்த பொருள்களை சொந்தமாக கொண்டு இருந்தாலும், ஏன் இந்த அண்டத்தையே தனக்கு சொந்தமாக கொண்டு இருந்தாலும், அதை இயக்குவதற்கும் பயன் படுத்துவதற்கும், வேண்டிய ஆற்றல் அறிவு நம்மிடம் இல்லையென்றால் அவைகளால் என்ன பலன் என்ன பயன் ? அலெக்ஸாண்டர் பரந்த சாம்ராஜ்ஜியத்தை வென்றான்.. ஆனால் அதை அனுபவிக்க ஆற்றல் இழந்து உயிர் பிரிந்து தன் சொந்த ஊர் திரும்புவதற்கு முன்பே, மரணம் ஒன்றை அடைந்து விட்டான்.. அவனுடைய முயற்சியால் பலத்த உயிர் சேதங்கள்... அத்தனையும் விரையமானதற்கும், விரையமாக போவதையும் அறியக்கூடிய அறிவும், அந்த அறிவை அடையும் ஆற்றல் இல்லாமல் போனது ஒரு காரணம் என்பது ஒரு தெளிவான விசயம்.. சரி மீண்டும் அலெக்ஸாண்டர் பிறந்து விட்டான் என்று வைத்து கொள்வோம்.. அவன் முன்பு வென்ற அந்த பரந்த சாம் ராஜ்ஜியத்தை மீண்டும் எனக்கே என உரிமை கொண்டாட முடியுமா ? நிச்சயமாக முடியாது,,, காரணம் அவன் இறந்து பிறந்த இடைப் பட்ட காலத்தில் அந்த பரந்த சாம்ராஜ்ஜியம் வேறு பலரின் ஆக்கிரமிப்புக்கு சொந்தமாகி விடும் .. அலெக்ஸாண்டர் மீண்டும் அதே போர் அதே உயிர் சேதம், அதே வீர செயல் செய்தால் தான் மீண்டும் பெற முடியும்.. அப்படி பெற்றபின் மீண்டும் அதே கதைதான்.. தன் உயிரை காத்துக் கொள்ளாத அவன், மீண்டும் அவற்றை இழந்து, விரையமாக்க வேண்டியது தான்... அவன் ஒரு முட்டாள் என்று சொன்னால் தவறு ஒன்றும் இல்லையே.. அலெக்ஸாண்டர் ஒரு முட்டாள் என்ற முத்திரை குத்த வேண்டியவனை மாவீரன் என்று அல்லவா போற்றி புகழுகின்றது..? இதிலிருந்து ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்ளப் படவேண்டியது என்ன வென்றால் உலக புகழ் பெற்ற அனைவரும் முட்டாள்கள்.. இந்த உண்மை மனிதனுக்கு எப்பொழுது தெரியவரும் என்றால் அவன் பிறவி தாண்டிய ஒரு அனுபவத்தை பெற்றால் ஒழிய அறிந்து கொள்ள முடியாது.. எல்லாம் தோன்றும், பொறி புலன்கள் வழியாக வெளிப்படும், இந்த தோற்ற உலகமாகிய இந்த பிறவி, இந்த வாழ்வுக்கு அப்பால், இருக்கும் தோன்றா நிலையாகிய பிறவிக்கு அப்பால் ஆன ஒரு அனுபவத்தை அறியும் போது மட்டுமே; எதை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ, அந்த ஒன்றை அறிய முடியும்... அந்த ஒன்றை அறிந்து விட்டால் அவன் எல்லாம் அறிந்தவன் ஆகிவிடுவதால் அவன் ஒரு போதும் முட்டாள் ஆக முடியாது... அந்த நிலையில் எது நிரந்திரம் என்பதை அறிகின்ற அறிவும், அதை பெறுகின்ற திறனும் உடையவனாக தகுதி பெறுவதால், நிரந்திரத்தை பெற்று விட்ட காரணத்தினால், அவன் ஒரு போதும் ஒரு நாளும் முட்டாள் ஆக முடியாது..
சரி, இந்த பிறவி தாண்டிய அனுபவத்தை, இந்த பிறவியிலேயே பெற முடியுமா ? என்ற கேள்வி இயல்பாகவே எழலாம்.. இந்த பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவத்தை பெற முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது.. காரணம் மனம் பிறவியில் மட்டுமே உள்ளது.. மனம் மரணத்தில் இல்லை... மனம் மூலமாக அறியும் அறிவும் மரணத்தில் இல்லை.. ஆனால் உயிரோடு இருக்கின்ற பொழுது மரணத்தின் தன்மை அறிகின்ற அந்த நிலையில், மனம் இருக்கும்: அதனால் அறிவும் இருக்கும்.. இந்த நிலையில் தான் அந்த ஒன்றை அதாவது எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ, அந்த ஒன்றை மனதால் அறியவும், அறிவால் அனுபவப் படவும் முடியும்... இந்த நிலை தான் தெளிவு நிலை அல்லது ஞான நிலை என்பர்.. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. ஞானம் அடைந்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் அல்ல.. அவர்கள் அறிவு களஞ்சியங்கள் அல்ல.. எதையுமே அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் அவர்களிடம் துளியும் இருக்காது.. அவர்களுடைய சித்தம் எந்த எண்ணப் பதிவுகளையும் தாங்கி நிற்காது.. ஆனால் தேவையான ஒன்றை, நொடியில், அறிவு களஞ்சியமாகிய பேரறிவிலிருந்து, பேரறிவாகிய மிக பெரிய கணணியில் ( computer server ) பெறும் ஆற்றலை உடையவர்கள்.. ஆனால் சாதாரண மனிதனோ தானே அறிவு களஞ்சியமாகி தன் சித்தத்தில் அதி மிஞ்சிய பளுவினை ஏற்றி ஏற்றி, நிலை தடுமாறி போகின்றான்.. அறிவு குவியலிலே விழுந்து, தேவையான அறிவை தேவையான நேரத்தில் பெற முடியாமல் அல்லல் படுகின்றான்.. அறிவு குவியலிலே விழுந்தவனுக்கு தேவையான அறிவினை உடனே எடுத்துக் கொள்ள முடியாமையால், அதற்கு ஒத்தது போல் தோன்றும் தவறான அறிவினை தேர்ந்தெடுத்து முட்டாள் ஆகிறான்.. ஒரு ஞானி அறிவிலே குழந்தை போல் தோன்றுவான்.. அவன் சித்தத்தில் பாரம் எதுவும் இல்லையாதலால் என்றும் மகிழ்வுடன் இருப்பான்.. ஆனால் ஆபத்து காலங்களில் தன்னை முறையாக காத்துக் கொள்ளும் புத்திசாலியாக இருப்பான்.. ஆனால் அனைத்தையும் கற்ற பண்டிதனோ, சித்தத்தின் சுமையால் சிரிக்கவே மறந்து போய் இருப்பான்...
இப்படியான சூழ்நிலையில் பிறவி தாண்டிய அனுபவத்தை பெற நமக்கு உதவுவது கனல் ஒன்றே.. அதன் மூலம் மட்டுமே நாம் பேரறிவோடு தொடர்பு கொள்ள முடியும்.. பேரண்ட கணணியோடு தொடர்பு கொண்டு, சித்தத்தை வெறுமை அதாவது வெற்றிடமாக்கி, பளு இன்றி வேண்டிய அறிவினை வேண்டிய நேரத்தில் பெற முடியும்.. வேண்டிய நேரம் என்பது மிக முக்கியம்.. அதுவே புத்தியாகும்.. காலம் கடந்து வருகின்ற அறிவால் ஒரு பயனும் இல்லை.. காலம் கடந்த அறிவினை பெறுகின்றவனும் ஒரு முட்டாளே.. அலெக்சாண்டர் தான் உயிர் போகும் தருவாயில் தன் தவறை உணர்ந்து காலம் கடந்து பெற்ற அறிவால் தான் வென்ற பரந்த சாம்ராஜ்ஜியங்களால் ஒரு பலனும் இல்லை என்பதை குறிக்கவே தன் சவப்பெட்டியில் தன் இரு கைகளை வெளியே நீட்டி வைத்து சவஊர்வலம் செல்ல விரும்பினான்.. அவன் மட்டும் அல்ல இன்றும் அவ்வாறே எல்லோரும் இருக்கிறோம்.. காலம் கடந்து வரும் அறிவு புத்திக் கூர்மை இன்மையாலே என்பதை நாம் மறக்கக் கூடாது..
கனலை மட்டும் பெற்றால் போதாது.. தேவையான அறிவினை தேவையான நேரத்தில் பெற உதவும் புத்தியை பெற, போதுமான கனல் பெருக்கத்தையும் பெற அவசியம் ஆகிறது.. அந்த கனல் பெருக்கம் பிறவி தாண்டிய அனுபவத்தில் உறுதியாக பெற முடியும்.. மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால் கனல் என்பது பிறவியில் உயிரோடு இருக்கும் போதும் இருக்கும்.. பிறவி தாண்டிய அனுபவமான மரணத்திலும் இருக்கும்.. தேக மரணத்தில் பெறுகின்ற கனல் நம் கைவசம் இல்லை.. ஆனால் உயிரோடு உள்ள போதே, யோகத்தின் மூலம் பிறவி தாண்டிய அனுபவ நிலையில் கனலை வேண்டிய அளவு பெற முடியும்.. எட்டு ஆகிய எண் குணம் பிறவியில் உள்ளது. ஆனால் அருளும் ஆற்றலும் ஆகிய இரண்டு பிறவி தாண்டிய நிலையில் உள்ளது.. இந்த எட்டும் ( அ என்பது ) இரண்டும் ( உ என்பது ) கூடிய அனுபவமே பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவமாகிய பத்தும் ( ய என்பது ) சேர்ந்த கனல் அனுபவம் என்பது... இந்த அ,உ, ய என்பது தமிழ் எண்கள் எட்டு, இரண்டு,பத்தை குறிக்கும்... எட்டு இரண்டை கூட்டி எண்ணவும் அறியீர் என்ற வள்ளலார், அந்த கனல் அனுபவத்தை பெற முடியாத அவல நிலையையே குறிப்பால் சுட்டி காட்டுகிறார்... கனல் பயிற்சியை சித்தர்கள் உயிராக கொண்டனர்... இப்பகுதியில் சந்தேகம் எதுவாயினும் தயங்காமல் கேட்குமாறு வேண்டுகிறேன்..

1 comment: