Sunday 28 June 2015

வாசி யோக இரகசியங்கள் பகுதி நான்கு


வாசி சுவாசி
********************
பதஞ்சலி யோகத்தில் முக்கிய கருத்து ஒன்று உள்ளது.. காண்பவன், காணுதல், காணப்படும் பொருள் என்பதாகும்.. காண்பவன் என்பவன் ஆகாயம் என்ற பூதத்தில் பேரறிவாய்,ஆற்றலின் கருமூலமாய் இருப்பவன்.. அருள்,கடவுள் எனவும் சொல்லலாம்.. காணுதல் என்பது ஆன்மா என்ற ஒரு இயக்க நிலையே.. இது இயக்கத்திற்கு வேண்டிய ஆற்றலை பேரறிவிலிருந்து பெற்றுக் கொள்கிறது.. காணப்படும் பொருள் என்பது ஆன்மா இயக்கம் பற்றி நிற்கும் வெளிசார்புகள்..இயக்கவும்,பற்றவும்,உணரவும்,அறியவும்,தெரியவும் மான வெளிப் பொருள்கள் அனைத்துமே காணப் படும் பொருளாக கருதப்படுகிறது..
சென்ற பகுதியிலே பார்த்தது போல கடவுள் ஒரு ஆன்மாவிற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்பட்ட சக்தியையே கொடுக்கிறது.. அந்த சக்தியை ஆன்மா, தான் தொடர்பு கொண்ட காணப்படும் பொருள்களுக்கு பகிர்ந்து அளிக்க முயலுகிறது.. காணப்படும் பொருள்களை பங்காளிகள் என பார்த்தோம்.. அராஜக பங்காளிகள், ஆன்மா கொடுக்கும் முன் பிடுங்கி கொள்கின்றன.. இதை அனிச்சை செயல் எனலாம்.. மிக முக்கியமான பங்காளிகள் பஞ்ச பூதங்களும் அவற்றின் பொறி,புலங்களும்.. இந்த அராஜக பங்காளிகள் வாடும் மற்ற பங்காளிக்கு ஆற்றலை பகிர்ந்து அளிக்க விடாமல் செய்வதால், எதாவது ஒரு பஞ்சபூத பங்காளி இறந்தால் கூட தானும் இறந்து விடுவோம் என்பதை அறியாது செய்கிறது.. இப்படிதான் சிறுக சிறுக பலம் பெற்று அராஜமான மனம் என்ற பூதம் தேகம் என்ற பூதத்திற்கு ஆற்றலை கொடுக்க விடாமல் செய்து, தேகத்திற்கு மரணத்தை உருவாக்கி, தானும் மாள்கிறது.. உலக அராஜகத்திற்கு கூக்குரல் இடும் மனித இனம் தனக்குள் இருக்கும் பன் மடங்கான அராஜகத்தை சீர் செய்ய முனைவதே இல்லை.. சத்தியம் என்ன வென்றால் உள் அராஜகத்தை சீர் செய்த சமசீர் பஞ்சபூத ஆதிக்கம் பெற்ற ஒரு நிறை நிலை மனிதன் இருந்தாலே உலகம் முழுமைக்கும் சாந்தம் நிலவும்.. உலகத்திற்கு நன்மை செய்ய நினைப்போர் தன்னை மேன்மை படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கவே வேண்டும்.. இதை மறந்த காரணம், புலப்படாத காரணம், வாசியை அறியாததும், சுவாசியை மட்டுமே அறிந்தது தான்.. சுவாசி என்பது சுவாசித்தல் என்பதாகும்.. 'சு' என்ற சுற்று புறத்தில் வசித்தல்.. வசித்தலை மாற்றலாம்.. ஆனால் தொடர்ந்த வசித்தலை வாசித்தல் என அர்த்தமாகும்..சுவாசித்தல் என்பது சுற்றுபுற வெளிப் பொருள்களுடன் அதாவது காணப்படும் பொருள்களிடம்
சதா தொடர்பு கொள்வது ஆகும்.. அதற்கு மாறானது வாசி என்ற வாசி யோகம்.. 
சுவாசித்தல் சதா மனிதனிடம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.. ஆனால் வாசி நடப்பதில்லை.. முதல் நிலை வாசி பயிற்சியில் காண்பவனிடம் பெற்றுக் கொண்ட ஆன்மாவான இயக்க சக்தி தான் அளவுடன் பெற்ற விதிக்கப்பட்ட சக்தியை, ஆதிக்க அராஜக, காணப்படும் சுற்று பொருள்களில் இழக்காமல், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தேவையான சுற்று பொருள்களுக்கு தேவையான சக்தியை வழங்குவது.. இது ஆன்மாவின் ஆதிக்கம்.. சுற்று புற சார்புகளின் காணப்படும் பொருளின் ஆதிக்கமல்ல.. முதல் நிலையில் தனக்கு விதிக்கப் பட்ட அளவான சக்தியை தன் கட்டுபாட்டில் வைக்கும் திறமைதான், ஆன்ம சக்தி என்பர்.. இந்த கட்டுபாட்டில், சக்தி உணர்வாக ஆன்மா தரிசனம், வாசி யோகப்பயிற்சியில் கிடைக்கிறது.. ஆனால் முறையற்ற வாசி பயிற்சியில் ஆன்மா தரிசனத்திற்கான வாசல் கொஞ்சம் கொஞ்சம் மூடப்பட்டு ஆன்மா இயக்கமும் இழந்து மரண வழிக்கு திரும்புகிறார்கள்.. கொஞ்சமாவது ஆன்மா தரிசனம் பெற்ற குருமார்களே முறையோடு வாசி பயிற்சியை கற்று தருகிறார்கள்.. அந்த குரு அன்பு எனும் உணர்வு பெருக்கமான ஆன்ம பலம் பொருந்தியவனாய் ஒரு இராணுவ வீரனைக் காட்டிலும்,அன்பின் விளைவாய் அதிகார தோரனையில் கற்றுக் கொடுப்பார்.. கற்பவர்களின் ஆணவ தன்மையால் இத்தகைய குருவை அடையாளம் காண்பதில்லை.. உலக இராணுவ வீரன் நாட்டையும் உலகையும் வெற்றி கொள்ள மட்டுமே முடியும்.. ஆனால் வாசியோக வீரன் பிரபஞ்சத்தையே வெற்றி கொள்ளும் ஆற்றலை உடையவன்..
சரி விதிக்கப்பட்ட ஆற்றலை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்போரை ஆன்ம பலம் உடையவர் என்கிறோம்.. இந்த ஆன்ம பலம் பெருக்குவதற்கான வழி இருக்கிறதா என்றால் இருக்கிறது.. நிறை நிலை மனிதன் அதை செய்து தான் விதிக்கப்பட்ட அளவுள்ள ஆற்றலை அளவற்ற அதிகப்பட்ட ஆற்றலை பெறும் புத்தியோடு செயல் படுகிறான்.. அது இது தான்.. காணுதல் என்ற ஆன்மா இயக்க சக்தி தன் கட்டுபாட்டில் உள்ள விதிக்கப்பட்ட சக்தியை காணப்படும் பொருளில் செலவு செய்யாமல் அதனை தான் எங்கிருந்து சக்தியை பெறுகிறதோ அந்த மூல கரு மூலத்தை காணத்தொடங்குகிறது.. இதனால் இந்த ஆன்மா மூலத்திலிருந்து வேண்டிய ஆற்றலை பெறும் தகுதியை பெறுகிறது.. இப்போது ஆன்மா அதிகப் பட்ட ஆற்றலை பெறும் தகுதியை பெறுகிறது.. சுருக்கமாக சொல்லின் காண்பவன் காணுதல் மூலம் காண்பவனையே கண்டால் இந்த அதிகப்பட்ட சக்தி கிடைக்கும்.. இது தான் மிக பெரிய இரகசியம்.. மொத்த வாசியோகமே இந்த இரசியத்தை மையமாக வைத்தே இருக்கிறது.. தன்னில் தானாய் இருக்க இருக்க தன் ஆன்மா தரிசனமும் அதை அடுத்து கடவுள் தரிசனமும் கிடைக்க வாசியோகி தன் மூச்சின் துணையால் பயிலுகிறான்.. இந்த கருத்தை மையமாக வைத்து வாசியோகம் எவ்வாறு நடத்துவது என்பதை வரும் பகுதிகளில் பார்ப்போம்..

No comments:

Post a Comment