Saturday 27 June 2015

பகுதி நாற்பத்தி ஐந்து :-- சித்தராவது எப்படி ?

முதல் பணி- தனக்கு தானே தலைவன் ஆதல்
இன்றைய உலகில் ஒட்டு மொத்த ஆன்மீகமே, தானே தனக்கு தலைவன் ஆகாமல், பிறர்க்கு தலைவன் ஆக முயற்ச்சி செய்வதே.. ஒவ்வொருவரும் கொண்ட ஆன்மீக கருத்துக்கள் மற்றவர்கள் கொண்டதை விட மிக உயர்ந்து உள்ளது எனவும், அதனால் மற்றவர்கள் தன் கருத்துக்கு தாழ்ந்து செவி கேட்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.. அதிசயம் என்ன வென்றால் ஒருவர் சொல்லுகின்ற கருத்து மிக உயர்வாக இருக்கலாம்.. ஆனால் அந்த கருத்தால் மற்றவர்களை ஆள நினைப்பது தான் மிகவும் நச்சு விஷ தன்மை உடையதாக உயர்ந்து உள்ளது.. ஆள நினைப்பதே மிகவும் மேலோங்கிய நிலையில் உள்ளது.. இதனால் மத சண்டையில் உலகமே பிளவு பட்டு நிற்கிறது.. இந்தியாவில் மட்டும் பிறர் மதத்தினரின் ஆளுமை உணர்வின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.. ஆளுமை உணர்வின் வெறிதனத்தால் மட்டுமே ஒரு மதத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. மெய் வழி சாலை கொள்கைகள், புதிதாக தோன்றிய கல்கி பகவான் கொள்கைகளில் ஆதிக்க ஆளுமை தன்மை சற்று அதிகமாக காணப் படுகிறது... சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்து மதத்திலேயே சைவமும் வைணவமும் இதே போன்ற ஆதிக்க ஆளுமை தன்மையால் மிகுந்த அவதிக்கு உள்ளாயிற்று...
இதற்கெல்லாம் காரணம், தான் பிறருக்கு தலைவன் ஆக தலைபடுவதுதான்.. தனக்கு தலைவன் ஆக முடியாத அலெக்சாண்டர் பிறருக்கு தலைவன் ஆக முயன்று தோற்று போன வரலாறு அறிந்ததே.. காதற்ற ஊசியும் வாராது காணா கடை வழிக்கே என்று மனிதன் கண்கூடாக நன்கு அறிந்து இருந்தும், பின் ஏன் மனிதன் கண்மூடி தனமாக இருக்கிறான் என்பது விசித்திரமான ஒன்று அல்ல.. மனமே அதற்கு காரணம் என்பது தெளிவான உண்மை.. தனக்கு தலைவன் ஆக இந்த மனம் விடுவதில்லை.. பிறருக்கு தலைவன் ஆகவே இந்த மனம் சதா விரும்புகிறது.. சதாகாலமும் வெளிநோக்கு பார்வையிலேயே பழக்கப் பட்ட இந்த மனம் உள் நோக்கு பார்வையை மறந்தே போய் விட்டது.. உள் நோக்கில் தானே தனக்கு சாட்சியாய் இருப்பதை மனம் ஒரு போதும் விரும்புவதில்லை... தன் அக நோக்கில் பலப்பட வலுவடைய மனம் விரும்புவதில்லை.. தன் உள் விகாரம் அதற்கு வெறுப்பை மட்டுமே தருகிறது...புற உலக வன்மையிலே இருந்து பழக்கப் பட்ட மனம் தன்னிடம் உள்ள மென்மையை கண்டு அஞ்சி கொண்டு இருக்கிறது..
எல்லாவற்றிலும் மனம் தன் வன்மையான ஆதிக்க ஆளுமையை செலுத்த விரும்புவதால், மென்மையான எளிமையான சகஜமான சாதாரணமான சரளமான, ஆனால் சத்தியமான உண்மையான விசயங்களில் ஈடு பாடு துளி அளவும் கொள்ள விரும்புவதில்லை.. இதனையே மனம் விலகி செல்வதற்கு ஒரு யுக்தியை கையாளுகிறது.. அது தான் புரியாமை என்ற சொல்.. மிகவும் வன்மையான கணணியின் (computer ) நுணுக்களை ஆராயும் வல்லமை உடைய மனம், மிக மிக எளிமையான, சகஜமான இருக்கின்ற, உயிரிலே கலந்து பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரு நீக்க முடியாத உறவாக இருக்கின்ற சுவாசத்தை கவனிக்க அதனால் முடிவதில்லை.. சுவாசத்தின் முக்கியத்துவத்தை எப்படி எல்லாம் உணர்த்தினாலும் சுவாசத்தின் எளிமையின் காரணமாக மனம் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறது.. சுவாசத்தை புரியவில்லை, புரியாமை என்ற பட்டியலில் சேர்த்து விடுகிறது.. இதை விட உலக அதிசயம் எதுவும் இருக்கமுடியாது...
ஆகவே தான் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளும் போது, புரியாதது தன்னை வெளிப்படுத்துகிறது என மர்மயோகத்தில் சொல்லப்படுகிறது.. மர்ம யோகம் என்றால் என்ன? மிக எளிமையான விசயங்களை ஆனால் மிக மிக உயிரோட்டமான அற்புத விசயங்களை மனம் ஏற்றுக்கொள்ளாமல் அதை புரியாமை என்ற பட்டியலில் சேர்த்து விடுவதால் அந்த பட்டியலில் உள்ளதெல்லாம் மிக மர்மமாக உள்ளதால், அந்த மர்மத்தை விழிப்பு நிலையின் மூலம் உணரும் யோகத்தைதான் நாம் மர்ம யோகம் என்கிறோம்.. சுருக்கமாக மனம் ஒதுக்கி வைக்கும் உண்மையை விழிப்பால் உணரும் வழியை தான் மர்ம யோகம் என்கிறோம்.. இந்த வழியில் மட்டுமே அண்ட இரகசியங்கள், மர்மங்கள், அனைத்தும் வெளி படும் என்பது உறுதி..
மனதை வைத்து மனதை செம்மைபடுத்த முனைவது அறிவற்ற செயல்.. இன்றைய நிலையில் சற்று உற்று கவனித்துப் பார்த்தால் எல்லா ஆன்மீக பாதைகள், மத வழியில் மனதை வைத்து மனதை செம்மை படுத்தவே முயலுகின்றன.. மிக எளிமையான சத்தியங்கள் உண்மைகள் மனம் ஏற்றுக் கொள்ளாமையால் இன்றைய ஆன்மீகம் உண்மையை காட்டுவதில்லை.. விழிப்பு நிலையை மன அளவிலே பேசி பேசி கொண்டாலும் அதை நடைமுறை படுத்துவதற்கான வழிகளில் செல்லவே முடியாத நிலையில் உள்ளன.. தமிழ் என்ற சொல்லே அப்படி மர்மாக உள்ள மறைவான உண்மை பொருளே.. தமிழ் என்ற சொல்லிற்கான விளக்கம் ஏற்கனவே நிறைய சொல்லியாயிற்று.. மர்ம யோகம் என்பது மறை யோகம் என்று சொல்லுவதுதான் சரியானது.. ஆனால் மறை என்பது மேலும் பல பொருள்களை குறிப்பதால் மர்ம யோகம் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று.. இந்த மர்ம யோகத்தை மறையோகம் என்றும் தமிழ் யோகம் என்றும் சொல்லுவதும் மிக பொருந்தும்..
நம்மில் வளர்த்துக் கொள்ளும் விழிப்பு நிலை ஒன்றே அண்ட இரகசியங்களை வெளி படுத்துமே அன்றி, மனம் ஒரு போதும் அதற்கு உதவாது.. மாறாக மனம் அறியாமையை பெருக்கி பெருக்கி புரியாததின் பட்டியலை பெருக்கி கொண்டே போகும்.. மனம் தாண்டிய நிலையில் அகப்படும் விழிப்பு நிலை ஒன்றே உள்ளதை உள்ளவாறு உணர்த்தி எதையும் கையாளும் உபாயத்தையும் தரும்.. ஆரம்ப நிலையில் புரியாததை புரியாததாகவே ஏற்றுகொண்ட தமிழ் சித்தர்களால் மட்டுமே விழிப்பு நிலை பெருக்கத்தை தரும் வாசி யோகத்தை தர முடிந்தது.. அவர்களின் பெருமை இப்போது புரியாது.. விழிப்பு நிலை பெருக்கத்தில் உணரப்படும்போது மட்டுமே அவர்களின் தியாக அன்பு நிலை நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும்.. விழிப்பு நிலை பெருக்கத்தில் புரியாதது தன்னை வெளிப்படுத்தும் வரை புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொண்டு நிறை நிலை மனிதனாகும் வழியில் விரைவாக முன்னேறுவோமாக...

No comments:

Post a Comment