Friday 26 June 2015

பகுதி ஏழு :--- நாளைய நிஜம்

கடவுள் நிலைக்கு அதி வேகம் தரும் கருத்து கவனிப்பு
*********************************************************************
ஆன்மீகத்தில் முன்னேறி இறை நிலையை அடைய, பல காலங்கள், பல ஜென்மங்கள், ஆகும் என்ற பரவலான பிடிவாதமான கருத்தால், இன்றைய ஆன்மீக உலகில் பெரும் தேக்க நிலை அடைந்துள்ளது.. நாம் நிறை நிலை மனிதனாக குறுகிய காலத்திற்குள் இந்த பிறவியிலேயே ஆக முடியும் என்ற வார்த்தையை கேட்ட உடனே ஏதோ இது ஒரு மூட நம்பிக்கை என்று சோம்பல் முறித்து கொட்டாவி விடுபவர்களும், இது ஜென்ம ஜென்ம பூர்வீக பலனால் மட்டுமே நடை பெறக் கூடியது, என்ற தப்பான பழைய கொள்கையின் பிடிப்பால் மிக மிக கவனக் குறைவாக எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம் அதிகம்... இதற்கு காரணம் நம் சித்தர் பெருமக்களின் கருத்துக்களில் மிக கூர்மையான கவனம் செலுத்தி அதை புரிந்து கொள்ளாமையே...
சித்தர்கள் தங்கள் சூட்சும தேக வடிவில் வரும் தரிசனத்திற்காக ஏங்கி தவித்து அதற்கான ஆயத்த பூஜைகள், சில ஏற்பாடுகளை செய்து கால விரையம் செய்வோர் கவனிக்க வேண்டியது, என்னவென்றால் அவர்கள் வந்து சில முக்கியமான உபதேசங்களை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் தானே.... பஞ்ச பூதங்களிலே வலுவுற்ற மிக தெளிந்த நிலையில் தேக நிலையில் சொல்லுவதை காட்டிலும், தேகம் இழந்த நிலையில் எதையும் பெரிதாக உயர்வுள்ளதாக சொல்லும் வல்லமை அவர்களுக்கு குறைவாகவே இருக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது..... ஆகையால் தேகத்தோடு பிறந்த நிலையில் மட்டுமே அவர்கள் சொன்ன கருத்துகள் மிக மிக உயர் உடையதாக இருக்கும்... அவர்களின் தரிசனத்தில் அவர்களின் கருத்துகளின் மேன்மை அதிகமாக நிச்சயமாக எதிர் பார்க்க முடியாது... ஆகையால் அவர்கள் ஏற்கனவே சொல்லியதை தான் சொல்லப் போகிறார்கள் என்ற உண்மையை மறந்து விடக் கூடாது... இன்று ஏசு வருகிறார்; மெரினா பீச்சில், தான் சொன்னவற்றை மீண்டும் தன் வாயாலே சொல்ல போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.. மெரினா பீச்சில் சிலருக்கு நிற்க கூட இடம் கிடைக்குமா? தான் சொன்னவைகள் எல்லாம் பைபிளில் இருக்கின்றதே; பின் ஏன் மெரினா பீச்சுக்கு ஓட வேண்டும்.. இது தான் உருவ கவர்ச்சி.. இந்த உருவ கவர்ச்சியிலே விழுந்து நம் வாழ் நாள் எல்லாம் விரையமாகிறது..
ஒரே ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.. ஏசுவின் உருவத்தை காட்டிலும் அவர் சொன்ன சொற்கள் தான் ஆயிர மடங்கு பலம் வாய்ந்தது.. கிருஷ்ணனின் தரிசனத்தைக் காட்டிலும் அவர் சொன்ன பகவத் கீதை தான் ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தது.. விவேகானந்தர் இராமகிருஷ்னர் சாய்பாபா, பாபாஜி போன்றவர்களின் தரிசனத்தைக் காட்டிலும் அவர்களின் வார்த்தைகள் தான் ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்தது.. அவர்கள் நேரடியாக வாழ்ந்த நிலையைக் காட்டிலும் அவர்கள் சொன்ன வார்த்தைகளில் தான் ஆயிர மடங்கு உயிரோட்டம் உள்ளவர்களாக வாழ்கிறார்கள்.. இந்த சத்தியம் தான் ஆன்ம இலாபம் பெருகும் ஒரு உயர் உபாயமாக, உண்மையாக உள்ளது... இராமன், கிருஷ்ணன், ஏசு, நபி, மற்ற சித்தர்கள் ஆகையோரின் தரிசனம் வேண்டவே வேண்டாம்; அதற்கு பதிலாக அவர்களின் ஆயிர மடங்கு உயிரோட்டமுள்ள கருத்துகளே போதும் என்று இருப்போர் மட்டுமே மிக பெரிய ஆன்ம இலாபம் அடைந்து குறுகிய காலத்திலே இந்த பிறவியிலேயே கருவாய் இருக்கின்ற கருத்துக்களை போற்றி கருவிலே குடிகொண்டுள்ள கடவுளின் ஆற்றலை பெறும் வல்லமையை பெறுவார்கள்.....
கடவுளும் தன் தரிசனத்திற்காக ஏங்குபவர்களை காட்டிலும், தன் கருத்துக்கு மரியாதை கொடுத்து அதன் படி நடப்பவர்களுக்கு மட்டுமே, வலிய வலிய வந்து சிறந்த தரிசனம் தருவார்.. செயல் பாட்டிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே கடவுள் விரைந்து வருவார்.. செயல் வீரர்களாக இருந்த கண்ணப்பர்க்கும், நந்தனாருக்கும் கடவுள் தரிசனம் தந்ததை போல் கருத்து கவனிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே விரைந்து வருவார்.. இதற்கான சாட்சிகள் இந்து மதத்தில் நிறைய இருக்கின்றன,, அதுவே சத்தியமாகவும் உண்மையாகவும் இருக்கிறது.. கருத்துகளை உதறி தள்ளி விட்டு வெறுமனே கடவுள் தரிசனத்திற்காக உருவ கவர்ச்சியிலே மயக்க கிடப்பவர்கள் எத்தனை ஆண்டுகள் தொழுதாலும் ஆன்மீக இலாபம் இன்றி பலனற்று போய் விடும் என்பது புராண கதைகள் மூலம் விளங்குகிறது.. இவர்களுக்கு ஜென்ம ஜென்மமான கால விரையம் தான்.. ஆன்மா இலாபம் என்ற ஆன்மீக இலாபம் தேடாமல், ஆன்மீகத்தில் விரைவு, வேகம் என்பது இல்லவே இல்லை.. இதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்...
சித்தர்களும் மகான்களும் ஆயிர மடங்கு உயிரோட்டமாக வாழ்கிறார்கள்... அது எங்கே எங்கே என்று தேடி தேடி அலைபவர்களுக்கு ஒரே பதில் அவர்கள் அப்படி இருக்கும் இடம் அவர்களின் கருத்துக்களிலே... மூல கருவாய் இருக்கும் அவர்கள் கருத்துக்களே அவர்களின் ஆன்மா பீடம்.. அந்த உயரிய ஆயிர மடங்கு உயிரோட்டம் உள்ள ஆன்மா பீடத்தை விட்டு, அவர்களை கீழே இறக்கி குறைந்த ஒரு மடங்கு உயிரோட்டமுள்ள மனித பீடத்தில் வர வேண்டும் என வேண்டுவது மனிதனின் அறியாமை செயல் மட்டும் அல்ல, தகாத செயலும் கூட.. இவை எல்லாம் முறை தவறி போன தவறான யோக நெறிகளால் உண்டானது.. மகாங்களின் காரியப்பட்ட செயலான கருத்தில் ஆயிர மடங்கு உயிரோட்ட சக்தியை பெறும் வாய்ப்பினை இழக்காத, விவேகம் வேண்டும்.. அப்படியே கடவுள் தரிசனத்திற்காக ஏங்கும் பக்தியோகமும் பலனற்று போய் விடும்.. ஆன்மீக இலாபம் என்பது பேரறிவின் பேரருளால் நிகழுவதால், அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்றார்கள்.. இந்த கருத்து கவனிப்பு பற்றிய அவசியத்தை பல உதாரணங்களோடும் சாட்சிகளோடும் சொல்லி அதன் முக்கியதுவத்தை புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.... மிகுந்த விழிப்பு நிலையில், ஞான அறிவோடு, சேரும் இடம், கருத்து கவனிப்பே என்பதை புரிந்து கொண்டால் எல்லாம் செயல் கூடும் இந்த நிகழ் காலத்திலே...
கருத்து கவனிப்பு மூலம் மிகுந்த ஆன்மீக இலாபம் அடைந்து அதனால் அடையும் விரைவான முன்னேற்றத்தால் நாம் நிறைநிலை மனிதன் ஆவது நாளைய நிஜம்...

No comments:

Post a Comment