Sunday 28 June 2015

வாசியோக இரகசியங்கள் பகுதி பதினைந்து


பணிவிலே பெரும் துணிவு
****************************************
பணிவு என்றாலே எல்லோரும் நினைப்பது போல தாழ்ந்து போவது அடங்கி போவது அல்ல.. மாறாக உள் வாங்குதல் என சென்ற பகுதியில் பார்த்தோம்.. மாணவன் உள்வாங்கல் மூலம் ஆசிரியரிடம் கல்வி பெறுகிறான்.. உள் வாங்கலில் திறமை உள்ளவன் நன்கு படிக்கிறான்.. ஆசிரியரின் செயல் பாட்டிற்கு இயங்குபவனாக இருந்தால் மாணவன் சிறந்து விளங்குகிறான்.. பணி என்றால் வேலை, 'உ' என்றால் இயங்குதல்.. முதலில் 'உ' என்ற பிள்ளையார் சுழி போடுவது எல்லாம் சிறப்பாக நடக்க இறைவன் சித்தபடி இயங்க தொடங்குகிறது என்பதை குறிக்கவே.. பணிவு என்பது வாழ்வின் ஆதாரத்திற்கு இயங்குதல் என்பதாகும்.. பெரும் படையை இயக்கி பல நாடுகளை வென்ற அலேக்ஸாண்டர் இயங்க தெரியாத காரணத்தால் அகால மரணம் அடைந்தான்.. பல நாடுகளை வென்றாலும் முடிவில் அடைந்தது ஒன்றும் இல்லை என சவ பெட்டி ஊர்வலத்தில் இரு கைகளை விரித்து மரணக்குழியில் புதைந்தான்..
மனிதன் இதுவரை விலங்குகள், ஏனைய மனிதர்கள், இயந்திரங்கள், கருவிகள், உலக சார்புகள் அனைத்தையும், இயக்கவே கற்று கொண்டு இருக்கிறான்.. சமயங்களிலும் இறைவனையே இயக்கவே முனைகிறான்... தன் ஆசைகளை நிறைவேற்ற கடவுளை இயக்க, பூஜைகள் யாகங்கள் போன்றவற்றின் மூலம் முயற்சி செய்கிறான்.. கடவுளின் இயக்க சக்தியான கதிர் இயக்கத்திற்கு இயங்க மட்டும் முயலுவதில்லை.. காரணம் இயங்குவது எப்படி என்று விளங்கவே இல்லை.. அதற்கான குருவை சந்திக்கவே இல்லை... அப்படி சந்தித்தாலும் இயங்குவதற்கான பாடத்தை மட்டும் படிப்பதில்லை.. படிக்கவும் முடிவதில்லை..
அதற்கான காரணம் என்ன? எண்ணம் என்பது, தான் ஆதிக்கம் கொண்ட ஒரு பொருளில் குறைபாடு உடைய நிறைவு கண்டதால், மீண்டும் நிறைவு கொள்வதற்கான ஒரு ஏக்கமே.. அதே போல் தகுதிக்கு மேல் கண்ட ஒரு பொருளை அடைவதற்கான ஏக்க உணர்வே.. எப்படி பார்த்தாலும் எண்ணம் இந்த இரண்டு நிலைகளிலிருந்து உருவாகிறது.. எண்ணம் இல்லாத மனிதன் உள்ளானா? ஒவ்வொரு எண்ணமும் ஒரு செயலை இயக்கி தன் ஏக்கத்தை தணிக்கவே முயலுகிறது.. எண்ணம் உள்ள மனிதன் சதா காலமும் எதாவது ஒன்றை இயக்கவே துடித்துக் கொண்டு இருக்கிறான்...
அந்த இயக்கத்தில் மீண்டும் தோல்விகள் மேல் தோல்விகளை அடைந்து எண்ணங்களில் வலு பெற்று ஏமாற்றத்தால் துடிக்கிறான்.. வயதானவர்கள் இயலாத நிலையிலும் கட்டிலில் இருந்து புலம்புவதற்கு அளவே இல்லை.. இன்றைய இளைய சமுதாயமும் அந்த வயதானவர்கள் நிலைக்கு வந்து விட்டார்கள்.. இப்படி பட்ட இளைய சமுதாயத்திற்கு ஏக்கத்திற்கு ஏற்ற எதாவது உணவு அளிக்கவில்லை யென்றால் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.. அதனால் தான் இருக்கின்ற ஏக்கத்தை நீக்கும் திறன் அற்றவர்கள் புதிய ஆசைகளை உருவாக்கி அதை நோக்கிய பயணத்தை தொடரவைப்பார்கள்.. சொர்க்கமும் பேரானந்தமும் பெரும் புகழுக்கும் ஆசைவார்த்தைகள் அள்ளி வீசி கவர தொடங்குவார்கள்... உங்கள் சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவர்கள் முடிவில் உங்களை மீள முடியாத பெரும் ஏக்கத்திற்கு விட்டு விட்டு ஓடி போய் விடுவார்கள்.. அல்லது பயிற்சி சரியாக செய்யவில்லை என உங்கள் மேல் பழி போட்டு விடுவார்கள்.. மேலும் மேலும் இயக்கவே துடிப்பீர்கள்.. இயங்குதல் என்பதும் இயங்குதலுக்கான பணிவு என்பதும் இன்று விளங்காத ஒன்றாகி விட்டது..
இயக்குதலுக்கு ஒரு அளவு உள்ளது.. இத்தனை பேரை கொன்றேன், இத்தனை நாட்டை பிடித்தேன், இத்தனை பேருக்கு வேலை கொடுத்தேன், இவ்வளவு வேலை செய்தேன் என்ற அளவுகள் உள்ளன.. ஆனால் இந்த அளவிற்கு சும்மா இருந்தேன், அமைதியாக இருந்தேன் என்றோ அளவுகள் கிடையாது.. இயக்கத்திற்கு வேண்டிய சக்திக்கு யூனிட் அல்லது குதிரை சக்தி(horse power) குறியீட்டு அளவுகள் உண்டு.. ஆனால் அமைதிக்கும் பணிவுக்கும் எந்த அளவும் இல்லை.. உள் வாங்கும் சக்திக்கும் அளவு என்பதே இல்லை.. காரணம் மனிதன் அந்த மாதிரியான நிலைக்கு போனதே இல்லை.. ஒரு பெரிய அதிசயம் என்ன வென்றால் இயக்க சக்திக்கு வரையறுக்க பட்ட எல்லை உண்டு.. ஆனால் அமைதிக்கும் பணிவுக்கும் உண்மையில் எல்லையே இல்லை.. அளவற்ற பேராற்றலை வாங்க கூடிய சக்தி உள் வாங்கலில் உள்ளது.. என்ன தான் முயன்றாலும் கின்னஸ் ரிகார்டை தான் வெல்ல முடியும்.. அது வரையரைக்கு உட்பட்டே உள்ளது.. ஆனால் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையையும் கிருஷ்ணன் கோவர்த்தன மலையையும் தூக்குவது போன்ற ஒரு செயலையும் அதற்கு மேலும் தன் உள் வாங்கல் சக்தியால் பணிவின் சக்தியால் நிறைநிலை மனிதனாகி சாதிக்க முடியும்.. எண்ணத்தோடு இருக்கும் மனிதனின் நிலை என்ன?
எண்ணத்தோடு இருக்கும் பொழுது எண்ணத்தோடு சம்பந்தப் பட்ட பொருளோடு, அல்லது மனிதர்களோடு, இருப்பதை போன்ற ஒரு மாயை தோற்றத்தால் அவைகளின் உறவோடு இருப்பதாக எண்ணுகிறான்.. எண்ணம் இல்லையேல் மனிதன் ஏதோ தனித்து விடப்பட்டதை போன்ற தனிமை உணர்கிறான்.. அந்த தனிமை ஒரு மயான அமைதியை தருகிறது.. பயம் கவ்விக் கொள்கிறது.. ஆகவே தான் மனிதன் எண்ணத்தோடு இருக்கவே விரும்புகிறான்.. அமைதியை பற்றி சிந்திக்கவோ அளக்கவோ தெரியாமல் இருக்கிறான்,என்பதை காட்டிலும் விரும்பாமல் இருக்கிறான்.. அந்த அமைதியை சந்திப்பதே உண்மையான வீரம்.. அந்த அமைதியை அனுபவிகின்ற போது பிரபஞ்சம் என்ற விண் நிலை தென்படுகிறது. அது 'வ்' என்ற எழுத்தாகிறது.. ஈரம் என்பது பதம் நிலையை குறிக்கும்.. விண்ணின் ஈரமே வீரம்.. வெளி வீரத்திற்கும் உள் வீரத்திற்கும் நிறைய முரண் பாடு உள்ளது.. மாவீரன் என அழைக்கப் படுபவன் பேரமைதி என்ற உள் வீரத்தின் வாசல் படி கூட மிதிக்க முடியாது.. வெளி வீரத்திற்கு அதிக சக்தி செலவு செய்ய வேண்டும்.. ஆனால் உள் வீரத்திற்கு தானாக சக்தி வரவாக வருகிறது..
விண்ணின் ஆசியை பெறக்கூடிய வாசியோகம் உண்மையான வீரத்தை கொடுக்கும்.. இன்றைய வாசி பயிற்சியாளர்கள் எப்படி இருப்பார்கள் என கவனித்தால் மிக பாதுகாப்பான சூழ்நிலையை விரும்புவார்கள்.. கூட்டு பயிற்சியினை தான் அதிகம் விரும்புவார்கள்.. விவேகாநந்தர் சொல்லும் வீரம் அமைதியின் வீரமே.. இந்த வீரத்திற்கு முன் எந்த பகையும் முன் நிற்காது.. வெளி பகை மட்டும் அல்ல உள் பகையான கோபம், காமம் விரோதம் போன்றவைகளும் முன் நிற்காது.. எல்லையில்லா இந்த வீரத்தால் பேராற்றலை பெறும் தகுதியால் எதிலும் துணிவு கொள்ளும் திறனும் நமக்கு வருவதால், இந்த வீரத்தையே துணையாக கொண்டு துணிவே துணை என்பதை சத்தியமாக்கி, நிறைநிலை மனித வாழ்க்கைக்கு முன்னேறுவோம் இனி வாழ்வோம் வளமுடன்...

No comments:

Post a Comment