Friday 26 June 2015

பகுதி நான்கு :--- நாளைய நிஜம்

சூட்சம தேக நிலையில் செயல் படும் நிறை நிலை மனிதன்
*****************************************************************************
பேரண்ட பேரணு வாசியோக அனுபவத்தில் பேராற்றலும் பேரறிவும் பெற்ற நிறை நிலை மனிதனின் உடல் அமைப்பும் உள்ள அமைப்பும் அதாவது மன அமைப்பும் எப்படி இருக்கும் என்று தெரிந்தால் தான் மனம் சமாதானம் அடைந்து பேரணு பயிற்சியை ஏற்றுக்கொள்ளும்.. அணுவுக்கு அப்பால் உருவத்தோடு தொடர்பு கொண்ட நிலையில் சந்திர கலை மேலோங்கிய நிலையில் அணுவுக்குள் இருந்து வெளிப்படும் கதிர் ஆற்றலால் உருவான கனலை மட்டுமே கிரகித்து ஆற்றல் உடையதாய் இருக்கும்.. அப்படியான கனலை முறையாக பயன் படுத்தி வல்லமை பெறவே கனல் தீட்சை என்று ஒன்றை போதித்தனர் நம் சித்தர் பெருமக்கள்.. அதில் சில அற்ப சித்துக்களை மட்டுமே பெற்றனர்... தேகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் அடைய முடியவில்லை..
அதிக பட்சமாக தங்கள் உடலில் கனலை தக்க வைத்து தேகத்தை அழியாது காக்கவே முடிந்தது... ஆனால் தன் தேக இயக்கத்தை இழந்து போய் சமாதி என்ற நிலைக்கு போய் வீணாய் போய் விட்டனர்.. தங்கள் உடலிருந்து சூட்சம தேகத்தை செயல் இழந்து போன தேகத்தைவிட்டு வெளியேற்றவும் முடியாமல், தேகத்தை அழிக்கவும் மனம் இன்றி, நடுவிலே தவித்து சில ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருந்தனர்.. பின் ஏதோ சில காரணங்களால் தன் தேக கனலை இழந்த காரணத்தினால் தன் தேகம் அழிய, மரணத்தை தழுவினார்கள்.. அழியாத தேகத்தின் மேல் உள்ள பற்றால் பல காலம் மண்ணில் புதையுண்ட நிலையில் பல ஆயிரம் ஆண்டு காலத்தை வீணாக்கினர்.. ஆன்மா அனுபவத்தில் தேர்ச்சி பெற்ற அவர்கள் ஆகாயத்தின் பேரறிவு பெறாத காரணத்தால் இவ்வாறு சிரமப் பட்டனர்.. பேரண்ட சேர்க்கையில் ஆன்ம அனுபவத்தை பெற்றவர்கள் பேரணு சேர்க்கையில் பேரறிவு அனுபவத்தை பெறாததே காரணம்.. அப்படி அவர்கள் பெற்றிருந்தால் தன் தூல தேகத்திலிருந்து தன் சூட்சம தேகத்தை வெளியேற்றி சரீரமற்ற அசரீரியாக பாமர மக்களை வழி நடத்தி இருப்பார்கள்.. அப்படி தன் தூல தேகத்திலிருந்து சூட்சம தேகத்தை வெளியேற்ற முடியாததற்கு காரணம் பேரணு இரகசியத்தை அறியாததே...
அப்படி பேரணு அனுபவத்தில் பேராற்றல் பெற்ற ஒரு நிறை நிலை மனிதன் தன் தூல தேகத்திலிருந்து, சூட்சம தேகத்தை பிரித்து அணுவின் எல்லையை விட்டு பிரிந்து அண்டத்தில் உலாவ வரும் வல்லமை பெறுகிறான்.. அந்த வல்லமையில் உயிர் தத்துவத்தையும், அதனோடு சம்பந்தப் பட்ட பஞ்சபூத தத்துவங்களையும் ஓதாத கல்வியின் மூலம் கற்று பேரறிவு உடையவன் ஆகிறான்.. எதனோடு எதை சேர்த்தால் எது நடக்குமோ அதனையும், அத்தனையும் பழுது இல்லாமல் கற்கிறான்.. எங்கே ஒரு சிறு தவறு பிரபஞ்சத்தில் நடந்தாலும் அந்த இடத்திற்கு தன் சூட்சம தேகத்தால் நொடியில் சென்று அடையும் வல்லமை உடையதால், அங்கே உடனே அடைந்து அந்த தவறுக்கான தீர்வையும் கண்டு அடைகிறான்..
இப்படி வல்லமை உடைய அந்த நிறை நிலை மனிதன் தன் தூல தேகத்தை இழக்காது ஒரு சாதாரண மனிதனாகவும் இருக்கும் பக்குவம் உடையவனாகவும் இருக்கிறான்.. தன் சூட்சம தேக வல்லமையை உலகிற்கு வெளிப்படுத்தி உலக பாமர மக்களால் வம்பை, தொல்லையை விலை கொடுத்து வாங்கும் அறிவு கெட்டவன் அல்ல.. ஞானம் அடைந்த நிலையில் எதன் மீதும் பற்று வைக்காமல், எதன் மீதும் பந்த படாமல் கடமைகளை ஒன்றன் பின் ஒன்றாக பேரறிவின் துணையால் செய்து முடிக்கிறான்.. செய்து முடித்ததின் பலனை ஒரு போதும் ஏற்பதும் இல்லை, எதிர்பார்ப்பதும் இல்லை.. காரணம் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை பேரறிவின் துணையால் பெற்று இருப்பதாலே எதற்கும் ஆசைபட அவசியம் இல்லை.. அன்பு நிறைந்த காரணத்தினால் தன் கடமைகளை சரிவர செய்து உலகிற்கு ஒரு உறுதுனையாக இருக்கிறான்..
அப்படி என்ன அந்த பேரணு அனுபவத்தில் இருக்கிறது ?
அந்த பேரண்ட பேரணு அனுபவத்தில் மட்டுமே ஒருவன் ஆற்றலாய் மாறும் ஒரு உன்னத நிலை அடைகிறான். ஆற்றல் உடன் இருப்பதற்கும் ஆற்றலாய் மாறுவதற்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளது.. ஆற்றல் உடன் இருப்பது அணுகூட்டு தத்துவம்.. அதில் ஒரு உருவ அமைப்பு தன்னில் உறைந்துள்ள சக்தியை பயன் படுத்தி வேறு ஒரு உருவ அமைப்பின் சக்தியை கையாளுவது.. ஒரு உருவ அமைப்பிலுள்ள சக்தி, வேறு ஒரு உருவ அமைப்பிலுள்ள சக்தி இரண்டுக்கும் பல கோணங்களில் வித்தியாசங்கள் நிறைந்து இருப்பதால், கையாளும் முறையில் பல தடைகள் உள்ளன.. அவற்றின் விளைவாக இயக்க ஒழுங்கு மிகவும் பாதிக்கப் பட்டு பல சமயங்களில் இயக்கமே கெட்டு போய் விடுகிறது... பேரணு அனுபவத்தில் ஒரு உருவ அமைப்பு சக்தி வேறு ஒரு உருவ அமைப்பு சக்தியோடு நேரடி தொடர்பு கொண்டு ஊடக தடைகளை தாண்டி நொடியில் இயங்க வல்லது... 
உதாரணமாக இந்த ஒன்றை எடுத்துக் கொள்ளலாம்... அமெரிக்காவில் ஒருவர் பேசுகிறார்.. அது அணு கூட்டு நிலையில் சத்தமாக உள்ளது.. அவர் பேசும் சத்தம் 100 அடி தூரம் கூட கேட்காது.. அதே சத்தத்தை அணுகூறு நிலையான ரேடியோ அலை வரிசைகளில் ஏற்றி அதனை நொடியில் இந்தியாவுக்கு பயணப்பட வைத்து பின் அணுகூறு நிலையில் இருந்து பிரித்து அணுக் கூட்டு தத்துவத்தில் மீண்டும் சத்தமாக நாம் கேட்கிறோம் அல்லவா ? மனித அறிவால் சாத்தியமான இது இருக்க, ஆன்மீக முன்னேற்றத்தில் பேரறிவே செயல் பட தொடங்கும் பொழுது எல்லாமே சாத்தியமாகும்... பேரறிவால் அணுக்கூட்டு நிலையிலும், அணுக்கூறு நிலையிலும் தன்னை நொடிக்கு நொடி மாற்றிக்கொள்ளக் கூடிய வல்லமை உடைய நிறை நிலை மனிதன், தூல தேகத்திலும் சூட்சம தேகத்திலும் நொடிக்கு நொடி மாறி மாறி வரும் வல்லமையும் பெறுகிறான்..
இப்பொழுது தூல தேகத்தில் ஓரளவு பண்பட்ட நிலையில் உள்ள மனிதன் தன் சூட்சம தேக அனுபவத்தை பெறவே பேரண்ட பேரணு அனுபவ வாசியோக பயிற்சி அவசியமாகிறது.. முன்னர் மதியான சந்திர கலையின் பயன் பாட்டை முற்றிலும் அறியாத காரணத்தால், சூட்சும தேகத்தில் நுழைந்த சித்தர்கள் அதன் மகத்துவத்தில் சிக்கி தன் தூல நிலையை மறந்தே போனார்கள்.. மறதி என்பது நீர் பூத தன்மையாகிய சித்த நிலையின் பலவீனம்.. ஒரு காலத்தில் சித்த நிலையின் எண்ண பதிவுகளால் தடை பட்ட நம் ஆன்மீக வாழ்க்கை, அதுவே ஆன்மீக உயர்வில் பெரிய துணையாக இருந்து நம்மை சூட்சும தேகத்தில் சிக்கி கொண்டு தூல தேகத்தை இழந்து விடாமல் மதி என்ற அணுக்கூட்டு நிலைக்கு நம்மை தக்க வைக்கிறது... பேரண்ட பேரணு வாசியோக அனுபவத்தில் சக்தியும் சிவனும் தனி தனியாக இல்லாமல் ஒன்றாக இணைந்த அர்த்தநாரீசுவரர் நிலை.. சிவன் என்ற சூட்சும தேகத்தை நொடியில் பிரபஞ்சத்தில் எங்கேயும் இடம் விட்டு இடம் மாறும் சக்தியை உடைய நிலை.. அதாவது மனித குரல் சத்தத்தை காந்த மின் அலையில் ஏற்றி கண்டம் விட்டு கண்டம் பாயும் நிலை.. அப்படி அர்த்தநாரீசுவரர் நிலையிலிருந்து பிரிந்து சிவன் தன் தூல தேகத்திற்கு வந்து தூல உலகில் செயலாற்ற மதி அவருக்கு உதவுகிறது.. இவ்வாறே தான் நிறை நிலை மனிதனுக்கு சந்திர கலையின் மேம்பட்ட நிலையாகிய மதியும், சூரிய கலையின் மேம்பட்ட நிலையாகிய அக்னி கலையும் பேரணு அனுபவத்தில் பெற்ற சர்வ வல்லமையால், உலகில் எந்த மூலைக்கும் நொடியில் தன் சூட்சம தேகத்தால் பயணப்பட முடியும்.... அதே நேரத்தில் அதே மூலையில் தன் தூல தேகத்தில் அங்கே தோன்ற செய்யவும் முடியும்.. ரேடியோ டி.வி. மூலம் எப்படி சத்தங்களும் காட்சிகளும் கண்டம் விட்டு கண்டம் நொடியில் இடம் மாறுகிறதோ, அதே போல நிறைநிலை மனிதனின் இந்த சாதனை நாளைய நிஜமே...
குறிப்பு :--- சில உயர்ந்த இரகசியங்கள் மிக சுலபமாக பேரறிவின் சம்மதத்தால் அனைவருக்கும் கிடைக்கின்றதால், வேதனை உற்ற சிலர் பலவாறாக பேசுகின்றனர்.. அதனால் உங்கள் மனம் தடுமாறாது உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள்.. ஏதோ கற்பனையில் உளறுகின்றேன் என்ற மாயை தோற்றத்தை உருவாக்கினாலும், பயிற்சியிலே அவைகள் எல்லாம் உண்மையே, சாத்தியமே என நிருபிக்கப் படும்..

No comments:

Post a Comment